2025 ஐபிஎல் சீசன் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இன்னும் சில போட்டிகளில் எந்தெந்த அணிகள் ப்ளே ஆஃப் சுற்றில் விளையாடப்போகின்றன என்பதும் உறுதியாகிவிடும். தொடரின் ஆரம்பத்தில் மிக மோசமாக ஆடிக்கொண்டிருந்த மும்பை இந்தியன்ஸ் அணி அதன்பிறகு தொடர்ச்சியாக ஆறு வெற்றிகளைப் பெற்று எதிரணிகளை அச்சுறுத்திக் கொண்டிருந்தது. இத்தகைய சூழலில்தான் நிதானமே உருவெடுத்த குஜராத் டைட்டன்ஸை தனது சொந்த மண்ணில் சந்தித்தது மும்பை.
மும்பை இந்தியன்ஸின் பேட்டிங் லைன் அப்பிற்கு எதிராக 7 பவுலர்களுடன் களமிறங்கிய குஜராத் கேப்டன் கில் டாஸ் வென்று பந்து வீசப்போவதாகத் தெரிவித்தார். டாஸின் போது பேசிய MI கேப்டன் ஹர்திக் பாண்டியா, எங்களது திட்டங்களில் நாங்கள் உறுதியுடன் இருக்க வேண்டுமென்றும், 20 ஓவர்களும் ஒழுங்குடனும் கவனத்துடனும் செயல்பட வேண்டுமெனத் தெரிவித்தார். இந்த ஒழுங்கும், கவனமும் இரண்டாம் இன்னிங்ஸின் கடைசி ஓவரில் இருந்திருந்தால் ஒருவேளை மும்பை அணி வென்றிருக்கலாம். ஆனால், நூழிலையில் போட்டியை கோட்டை விட்டிருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. தூவானம் தூவத்தூவ இறுதிப்பந்து வரைக்கும் சென்ற போட்டியில் குஜராத் அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
நீல வண்ணக் கொடிகளுடன் ஆர்ப்பரித்த வான்கடே மைதானத்தில் மும்பை அணிக்காக ரிக்கல்டன் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். குஜராத் அணியின் பந்து வீச்சுக் கணக்கை சிராஜ் துவக்கிவைத்தார். எதிர்பாராத விதமாக இன்னிங்ஸின் இரண்டாம் பந்திலேயே மும்பை அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவுட் சைட் ஆஃபில் போடப்பட்ட பந்தை ரிக்கல்டன் கவர் ட்ரைவாக அடிக்க முயல, அதை சாய் சுதர்சன் அசத்தலான டைவின் மூலம் பிடித்தார். பரிதாபமாக ரிக்கல்டன் வெளியேறினார்.
பின் களமிறங்கிய வில் ஜாக்ஸும், ஏறக்குறைய அதே லென்த்தில் வீசப்பட்டப் பந்தை ரிக்கல்டன் அடித்ததுபோலவே அடிக்க அது கவர் திசையில் நின்று கொண்டிருந்த சாய் சுதர்சனது உடலில் சென்று மோதியது. அதிவேகமாக வந்து மோதிய பந்தை பிடிக்க முடியாமல் தவறவிட்டார் சாய். இப்படி ஆரம்பம் முதலே கேட்ச்களைக் கொடுத்து தடுமாற்றத்துடனே தொடங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி.
வழக்கம்போல ‘ரோகித்.. ரோகித்..’ என்ற விண் முட்டும் முழக்கங்களுக்கு மத்தியில்தான் ரோகித் சர்மா பேட் செய்தார். ஆனால், ரசிகர்கள் ஏமார்ந்ததுதான் மிச்சம். ஹிட்மேனுக்காகவே கொண்டுவரப்பட்ட இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷத் கானின் Back of a length deliveryயை ரோகித் கடினமாக அடிக்க முயல கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டைப் பறிகொடுக்க நேர்ந்தது. இடதுகை வேகப்பந்து வீச்சாளரைக் கொண்டு வந்தது ரோகித்திற்கு எதிராக அமைக்கப்பட்ட வியூகம் என்று சொல்வதைத் தாண்டி, ரோகித் கவனக்குறைவாக ஆடி தன்னுடைய விக்கெட்டைப் பறிகொடுத்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.
இதனையடுத்து களத்திற்கு வந்தார் சூர்யகுமார் யாதவ். தொடக்கமே இரு பவுண்டரிகளுடன் அதிரடியாகத் தொடங்கிய நிலையில், மிட் விக்கெட் திசையில் அவர் கொடுத்த கேட்சை சாய் கிஷோர் தவறவிட்டார். பவர் ப்ளேவின் இறுதி ஓவரில் வில் ஜாக்ஸ் கொடுத்த மற்றுமொரு கேட்சையும் சிராஜ் தவறவிட்டார். இப்படி பவர் ப்ளேவுக்குள் மட்டுமே மூன்று கேட்சுகளை கோட்டை விட்டது குஜராத் டைட்டன்ஸ் அணி. இல்லையெனில், பவர்ப்ளேவுக்குள்ளேயே மும்பை அணி 4 விக்கெட்களை இழந்திருக்கும். இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் குஜராத் டைட்டன்ஸ் நடப்புத் தொடரில் 24 கேட்ச்களைத் தவறவிட்டிருப்பதாகத் தரவுகள் சொல்கின்றன. இது புள்ளிப்பட்டியலில் கடைசியில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விட அதிகம்.. இப்படி இருந்தா எப்படி முருகேசா....
தடுமாற்றத்துடன் தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் மிடில் ஓவர்களை, GTயின் சுழல் பந்து வீச்சாளர்களான சாய் கிஷோர் மற்றும் ரஷித் கான் கபளீகரம் செய்தனர். அவ்வப்போது சிக்சர் பவுண்டரி என வந்தாலும் ஆட்டம் குஜராத் டைட்டன்ஸ் கைகளில் இருந்தது. சூர்யகுமார், ஹர்திக், திலக் வர்மா, வில் ஜாக்ஸ் என முக்கியமான வீரர்கள் எல்லாம் மொத்தமாக வீழ்ந்தனர். மிகச் சிறப்பாக வீசிய ரஷித் கான் 4 ஓவர்களுக்கு 21 ரன்களை மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார். 97 ரன்களுக்கு 2 விக்கெட்கள் என்ற நிலையில் இருந்த மும்பை அடுத்த மூன்று ஓவர்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து 113க்கு 6 என்ற நிலைக்குச் சென்றது.
இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்களை இழந்து 155 ரன்களை மட்டுமே எடுத்தது. முக்கியமாக மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் அதிர்ஷ்டத்தை மூட்டை மூட்டையாக முதுகில் கட்டிக்கொண்டு விளையாண்டனர் என்று கூட சொல்லலாம். ஏனெனில், முதல் இன்னிங்ஸின் சில ஓவர்களில் தொழில்நுட்பக் கோளாறால், டிஆர்எஸ் செயல்முறை வேலை செய்யாது என்று தெரிவித்திருந்தனர். அப்போது அர்ஷத் கான் வீசிய இரண்டாவது ஓவரின் இறுதிப் பந்தில் ரோகித் LBW ஆனார். ஆனால், நடுவர் இல்லையெனச் சொல்ல, குஜராத் டைட்டன்ஸ் வீரர்கள் அப்பீலுக்கும் செல்லவில்லை. மூன்று முறை தவறவிடப்பட்ட கேட்ச்கள், சுமாரான பீல்டிங் என ஏகப்பட்ட குறைகளுக்கு மத்தியிலும் மும்பை இந்தியன்ஸ் அணி ரன்களை அடிக்கத் தடுமாறியுள்ளது.
MI நிர்ணயித்த 156 என்பது குஜராத் அணிக்கு எளிய இலக்குதான். ஆனால், நிதானமே உருவெடுத்த சாய் சுதர்சனை போல்ட் 5 ரன்களுக்கு வெளியேற்றினார். 36 ஐபிஎல் இன்னிங்ஸ்களில் சாய் சுதர்சன் ஒற்றை இலக்கத்தில் வெளியேறுவது இதுதான் மூன்றாம் முறை.
பின் கைகோர்த்தனர் கேப்டன் கில்லும், பட்லரும். இடையிடையே அவ்வப்போது மழை வந்து DLS முறையை நினைவூட்டி பயம் காட்டினாலும், இருவரும் மிகவும் நிதானமாகவே மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை எதிர்கொண்டனர். குஜராத் அணியின் ஸ்கோர் ஆமை வேகத்தில் மேலேறிக் கொண்டிருந்தது. ஆனால், ஹர்திக் வீசிய 8 ஆவது ஓவரில் ஆட்டம் தலைகீழாக மாறியது. அந்த ஓவரில் மட்டும் கிட்டத்தட்ட 11 பந்துகளை வீசி 18 ரன்களை விட்டுக்கொடுத்தார் ஹர்திக் பாண்டியா. 10 ஓவர் முடிவில் குஜராத் அணி 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 68 ரன்களை எட்டியிருந்தது. இதனிடையே முதல் இன்னிங்ஸின் போது தலையில் அடிபட்ட போஸ்ச் பதிலாக அஸ்வனி குமார் கன்கஸ்ஸன் சப்ஸ்டியூட்டாக உள்ளே வந்தார். வந்த வேகத்திலேயே பட்லரை வெளியேற்றினார். பட்லரின் விக்கெட் விழுந்ததும் DLS முறையில் மும்பை முன்னுக்கு வந்தது. ஆனாலும், இம்பேக்ட் வீரராக வந்த ரூதர்போர்ட் வெளுத்து வாங்க 14 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 107 ரன்களை எடுத்திருந்தது குஜராத் அணி.
இதன்பின் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது. அதுவரை குஜராத் அணிக்கு சாதகமாக சென்ற ஆட்டம் மழை நின்றதும் மும்பை இந்தியன்ஸ்க்கு ஏதுவாக மாறியது. மழை நின்றபின் வந்த முதல் ஓவரிலேயே கில்லை வெளியேற்றினார் பும்ரா. அடுத்த ஓவரில் போல்ட் ரூதர்போர்டை வெளியேற்ற, தனது கடைசி ஓவரில் ஷாருக்கானையும் வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தார் பும்ரா. 18 ஓவர்கள் முடிவில் ஆட்டம் மொத்தமாக MI வசம் சென்றது. மீண்டும் மழை குறுக்கிட்ட நிலையில் இன்னிங்ஸ் 19 ஓவர்களாக சுருக்கப்பட்டது. 6 பந்துகளில் குஜராத் அணி 15 ரன்களை அடிக்க வேண்டுமென்ற நிலை. தனது அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களை ஹர்திக் இன்னிங்ஸின் தொடக்கத்திலேயே அதிகமாகப் பயன்படுத்திவிட்டதால், இறுதி ஓவர்களில் மும்பை அணி சிரமத்தை எதிர்கொண்டது. பவர்ப்ளே பவுலரான தீபக் சாஹர் இறுதி ஓவர் போடுமாறு பணிக்கப்பட்டார். முதல் பந்திலேயே பவுண்டரி கொடுத்த அவர் இடையே நோ பால் ஒன்றையும் வீசினார். பரபரப்பாக சென்ற போட்டியில் கடைசி பந்தில் ஒரு ரன் தேவை எனும் நிலையில் குஜராத் அணி வெற்றி பெற்றது. சாஹர் நோ பாலை வேறு வீசினார். அதுமட்டுமின்றி கடைசி பந்தில் ரன் அவுட் வாய்ப்பையும் குஜராத் அணி கோட்டைவிட்டது. பந்து வீசிவிட்டு சாஹர் மீண்டும் ஸ்டெம்ப் பக்கம் வரவேயில்லை.
எப்படியோ இந்த போட்டியில் வென்றதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்குச் சென்றுவிட்டது. ஆட்டநாயகன் விருதை சுப்மன் கில் தட்டிச் சென்றார். மும்பை இந்தியன்ஸ் நான்காம் இடத்திலிருக்கிறது. மும்பை அடுத்து பஞ்சாப்பையும் டெல்லியையும் எதிர்கொள்ள இருக்கிறது. குஜராத் அணி டெல்லி, லக்னோ, சென்னை என மூன்று போட்டிகளை விளையாட இருக்கிறது. ஐபிஎல் இறுதிக்கட்டத்தை எட்ட எட்ட பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாமல் சென்றுகொண்டிருக்கிறது என்பது மட்டும் நிஜம்.