2025 ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக பிளே ஆஃப்க்கு செல்லக்கூடிய 4 அணிகளில் பெரும்பாலானவர்களின் தேர்வாக சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளின் பெயர்களே இடம்பெற்றிருந்தன.
ஆனால் 4 சுற்றுப்போட்டிகள் முடிந்துள்ள நிலையில், வரிசையாக 3 போட்டிகளில் தோற்ற சிஎஸ்கே, SRH மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் 8வது, 9வது மற்றும் 10வது இடங்களை ஆக்கிரமித்து எல்லோருடைய கணிப்பையும் பொய்யாக்கியுள்ளன.
அதிலும் சன்ரைசர்ஸ் அணியின் கதி அதோகதியாக மாறியுள்ளது. முதல் போட்டியில் 286 ரன்களை குவித்து மிரட்டிய அந்த அணி, அதற்கு பிறகு 3 போட்டிகளில் வரிசையாக தோற்று படுமோசமாக விளையாடிவரும் நிலையில், இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சொந்த மண்ணில் எதிர்கொண்டது.
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணிக்கு வில்லனாக வந்துசேர்ந்தார் முகமது சிராஜ். அதிரடி வீரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரையும் 8 மற்றும் 18 ரன்களில் வெளியேற்றிய சிராஜ் கலக்கிப்போட்டார். ஆர்சிபி அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு எமோசனலாக இருப்பதாக வருத்தப்பட்ட முகமது சிராஜ், கடந்தப்போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராக ஆட்டநாயகனாக மாறிய பிறகு, ஹைத்ராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியிலும் அவருடைய சொந்த மண்ணில் விக்கெட் வேட்டை நடத்தினார்.
ஹெட் மற்றும் அபிஷேக் இருவரும் அடுத்தடுத்து வெளியேற, இஷான் கிஷானும் 17 ரன்னில் நடையை கட்டினார். 50 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ஹைதராபாத் அணி தடுமாற, 4வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த நிதிஷ் ரெட்டி மற்றும் க்ளாசன் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு நம்பிக்கை அளித்த இந்த ஜோடியை அடுத்தடுத்த ஓவரில் அவுட்டாக்கி வெளியேற்றிய தமிழக வீரர் சாய் கிஷோர், சன்ரைசர்ஸ் அணிக்கு அடிக்குமேல் அடிகொடுத்தார்.
மீண்டும் பந்துவீச வந்த முகமது சிராஜ் அதிரடி வீரர் அனிகேத் வெர்மாவையும் அவுட்டாக்கி வெளியேற்ற, 20 ஓவரில் 152 ரன்களை மட்டுமே எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. சிறப்பாக பந்துவீசிய சிராஜ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
153 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் குஜராத் அணி களமிறங்கினாலும், சாய் சுதர்சனை 5 ரன்னில் ஷமியும், ஜோஸ் பட்லரை 0 ரன்னில் கம்மின்ஸும் அடுத்தடுத்து அவுட்டாக்க டைட்டன்ஸ் அணி ரசிகர்களின் தலைமேல் இடியே இறங்கியது. 16 ரன்னுக்கு 2 விக்கெட் என்ற மோசமான நிலையில் டைட்டன்ஸ் அணி தடுமாற, கையில் பேட்டுடன் களத்திற்கு வந்த வாசிங்டன் சுந்தரை பார்த்து ‘இவர் வந்து என்ன பா அடிக்க போறார்’ என்ற எண்ணமே எல்லோருக்கும் எழுந்தது.
ஆனால் சிமர்ஜித் சிங் வீசிய ஒரே ஓவரில் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என பறக்கவிட்ட வாசிங்டன் சுந்தர் 29 பந்துக்கு 49 ரன்கள் என அடித்து மிரட்டிவிட்டார். துரதிருஷ்டவசமாக அரைசதமடிக்கும் வாய்ப்பை இழந்து வெளியேறினார்.
’இவ்வளவு நாள் எங்க பா இருந்த’ என்பதுபோல் பேட்டிங் ஆடிய வாசிங்டன் சுந்தர் ஆட்டத்தையே தலைகீழாக திருப்பிபோட, மறுமுனையில் பொறுப்பை உணர்ந்து நிதானமாகவும், அதே நேரத்தில் தேவையான நேரத்தில் அடித்தும் ஆடிய கேப்டன் சுப்மன் கில் 61 ரன்கள் அடித்து அசத்தினார்.
கடைசியாக பேட்டிங் செய்ய வந்த ரூதர்ஃபோர்டு இன்னுமா இந்த டார்கெட்ட இழுத்துட்டு இருக்கீங்க என்பது போல் 6 பவுண்டரிகள் 1 சிக்சர் என துவம்சம் செய்ய 16.4 ஓவரிலேயே இலக்கை எட்டிய குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்தது.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி. அதேநேரத்தில் 5 போட்டிகளில் வரிசையாக நான்கில் தோற்றிருக்கும் சன்ரைசர்ஸ் அணி புள்ளிப்பட்டியில் கடைசி இடம்பிடித்து பரிதாப நிலையில் தத்தளித்து வருகிறது.
டி20 கிரிக்கெட்டில் 300 அடிக்கப்போறோம் என ஆரம்பித்த சன்ரைசர்ஸ் அணியின் நிலைமை, 300 டார்கெட்டா? அல்லது முதல் அணியா கெட்அவுட்டா என்பதுபோல் படுமோசமாக மாறியுள்ளது.
சிறப்பாக பந்துவீசி 4 ஓவரில் 17 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய முகமது சிராஜ் அடுத்தடுத்து இரண்டாவது போட்டியிலும் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார். பழைய பந்தில் சிராஜ் சிறப்பாக வீசுவதில்லை என கூறி கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணியிலிருந்து வெளியேற்றினார், ஆனால் பந்துவீச்சுக்கு சாதகமான சூழல் இல்லாத பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கூட 4 ஓவரில் 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய சிராஜ் பவுலிங்கில் நெருப்பாக வீசிவருகிறார். 2.O வெர்சனாக திரும்பி வந்திருக்கும் முகமது சிராஜ் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்ப்பிள் கேப் ரேஸில் இரண்டாவது பவுலராக நீடிக்கிறார்.
அடுத்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.