2025 ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இரண்டு அணிகளும் வெளியேறிவிட்டன. மீதமிருக்கும் 8 அணிகளுக்கு இடையே பிளே ஆஃப் செல்வதற்கான போட்டி வலுவானதாக இருந்துவருகிறது.
இந்நிலையில் எஞ்சியிருக்கும் அனைத்து போட்டிகளையும் வென்றால் சன்ரைசர்ஸ் அணிக்கு பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பு இருப்பதால், இன்றைய போட்டியில் பலம்வாய்ந்த குஜராத் டைட்டன்ஸை எதிர்த்து களம்கண்டது கம்மின்ஸ் தலைமையிலான SRH அணி.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கிய போட்டியில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. ஆனால் ஏன் பந்துவீச்சை தேர்வுசெய்தோம் என வருத்தப்படுமளவு காட்டடி பேட்டிங்கை வெளிப்படுத்திய டைட்டன்ஸ் அணி முதல் 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 82 ரன்கள் குவித்து மிரட்டியது.
நடப்பு சீசனில் மிஸ்டர் கன்ஸிஸ்டன்ஸியாக கலக்கிவரும் சாய் சுதர்சன், முகமது ஷமிக்கு எதிராக ஒரே ஓவரில் 5 பவுண்டரிகளை பறக்கவிட்டு ’அது எப்படி சார் சிக்சரே அடிக்காம ஒருத்தரால 200 ஸ்டிரைக்ரேட்ல பேட்டிங் செய்ய முடியும்’ என ஆச்சரியப்படும் ஒரு ஆட்டத்தை சாய் சுதர்சன் வெளிப்படுத்தினார். 9 பவுண்டரிகளை நாலாபுறமும் சிதறடித்து 23 பந்தில் 48 ரன்கள் அடித்து சாய் சுதர்சன் வெளியேற, மறுமுனையில் 10 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என வெளுத்துவாங்கிய சுப்மன் கில் 37 பந்தில் 76 ரன்கள் அடித்து மிரட்டினார். ஆனால் துரதிருஷ்டவசமாக ரன் அவுட் மூலம் வெளியேறிய சுப்மன் கில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு வெளியேறினார்.
சுப்மன் கில் களத்தில் இருக்கும்வரை 12 ரன்ரேட்டில் விளையாடிய குஜராத் அணி 250 ரன்கள் வரை அடிக்கும் என எதிர்ப்பார்த்த போது, அடுத்து களமிறங்கிய வாசிங்டன் சுந்தர் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்வேகத்தை மந்தப்படுத்தினார்.
ஆனால் மறுமுனையில் 3 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய ஜோஸ் பட்லர் குஜராத் அணியை 224 ரன்கள் என்ற நல்ல டோட்டலுக்கு அழைத்துச்சென்றார்.
225 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் பதிலடி கொடுக்கும் ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
டிராவிஸ் ஹெட் பவுண்டரிகளாக விரட்ட, சிக்சர் பவுண்டரி என வானவேடிக்கை காட்டிய அபிஷேக் சர்மா அற்புதமாக செயல்பட்டார். ஆனால் ஹெட்டை பிரசித் கிருஷ்ணா வெளியேற்ற, அடுத்துவந்த எந்த வீரரும் சோபிக்கும் ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
அடுத்தடுத்து வந்த இஷான் கிஷன் 13, கிளாசன் 23, அனிகேத் 3 மற்றும் கமிந்து மெண்டீஸ் 0 என மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்த, தனியொரு ஆளாக போராடிய அபிஷேக் சர்மா 4 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என பறக்கவிட்டு 74 ரன்கள் குவித்தார். ஆனால் என்ன தான் அபிஷேக் சர்மா போராடினாலும் அவரால் அணியை வெற்றிக்கு அழைத்துச்செல்ல முடியவில்லை. முடிவில் 38 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி படுதோல்வியை சந்தித்தது.
நடப்பு போட்டியில் வெறும் 22 டாட் பந்துகளை மட்டுமே விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி, ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் மிகைக்குறைவான டாட் பந்துகளை விளையாடிய அணியாக முதலிடம் பிடித்து அசத்தியது. பேட்டிங், ஃபீல்டிங், பவுலிங் என ஒரு முழுமையான அணியாக சிறந்து விளங்கும் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடம் பிடித்தது.
இன்றைய போட்டியில் சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்ட ரன் அவுட்டானது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது. 13வது ஓவரின் கடைசி பந்தை ஜீஷன் அன்சாரி வீச, அதை லெக் சைடில் தட்டிவிட்ட பட்லர் சுப்மன் கில்லுக்கு 1 ரன்னுக்கான அழைப்பை விடுத்தார். ஆனால் பந்தை பிடித்து வேகமாக அடித்த ஃபீல்டர் ரன் அவுட்டுக்கான வாய்ப்பை ஏற்படுத்தினார். அவுட்டா? நாட் அவுட்டா? என்ற குழப்பம் ஏற்பட முடிவு 3வது நடுவருக்கு சென்றது.
ஆனால் DRS-க்கான ரீப்ளேவில் பந்து ஸ்டம்பை தாக்காமல், விக்கெட் கீப்பரின் கிளவ்ஸிலிருந்து நழுவி சென்றது. அதற்குபிறகு கீப்பரின் கைகள் மட்டுமே ஸ்டம்பை தாக்க, பெய்ல்ஸ் எகிறி ரெட் லைட் எறிந்தது. அதன்படி பார்த்தால் பந்து ஸ்டம்பை தாக்கவில்லை, கிளவ்ஸ் ஸ்டம்பை தாக்கும்போது கைகளில் பந்து இல்லாமல் இருந்தது. இதன்படி பார்த்தால் சுப்மன் கில்லுக்கு நாட் அவுட்டே கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் முடிவுக்காக நீண்ட நேரம் ரீப்ளேவை பார்த்துக்கொண்டிருந்த 3வது நடுவர், யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் சுப்மன் கில்லை அவுட் என அறிவித்தார்.
எப்படியும் நாட் அவுட் தான் வரப்போகிறது என காத்திருந்த குஜராத் ரசிகர்களுக்கு அவுட் என்ற 3வது நடுவரின் அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்காத சுப்மன் கில் கத்தியபடி விரக்தியுடன் களத்திலிருந்து வெளியேறினார். ஆனால் நேராக பவுண்டரி லைனில் நின்றுகொண்டிருந்த 4வது நடுவரின் அருகில் சென்ற சுப்மன் கில், அவரிடம் கத்தி சண்டையிடுவதையும், ஆவேசமான கில்லை ஒருவர் கைகளால் தடுத்து நிறுத்தியதையும் நம்மால் பார்க்க முடிந்தது.
மூன்றாவது நடுவரின் முடிவின் படி விக்கெட் கீப்பரின் கையில் பந்து இருந்தபோது, ஸ்டம்பை தாக்கிவிட்ட பின்னரே பந்து விலகிசெல்கிறது. பெய்ல்ஸ் எழும்போது ஸ்டம்புடன் பந்து தொடர்பில் இல்லையென்றாலும், பந்து ஏற்படுத்திவிட்டு சென்ற வேரியேசனில்தான் பெய்ல்ஸ் எகிறியது, அதனால் அது அவுட் என்ற முடிவை அறிவித்தார்.
இருப்பினும் 3வது நடுவரின் இந்த அறிவிப்பை விமர்சித்து வரும் நெட்டிசன்கள், சுப்மன் கில் நாட் அவுட் என கருத்திட்டு வருகின்றனர்.