குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் BCCI
T20

ஐபிஎல் வரலாற்றில் ஒரே IND வீரர்.. கெய்ல் சாதனையை உடைத்த சாய் சுதர்சன்.. 58 ரன்னில் குஜராத் வெற்றி!

2025 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்துள்ளது.

Rishan Vengai

குஜராத் டைட்டன்ஸா அல்லது குஜராத் தமிழன்ஸா என கூறுமளவு, நடப்பு 2025 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் ‘சாய் சுதர்சன், சாய் கிஷோர், ஷாருக் கான் மற்றும் வாசிங்டன் சுந்தர்’ என 4 தமிழக வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகின்றனர்.

ஒவ்வொரு போட்டிக்கும் ஒவ்வொரு தமிழக வீரர் என கேம் சேன்ஜிங் வீரராக ஜொலித்துவருகின்றனர். அதிலும் கன்ஸிஸ்டன்ஸி என்ற சொல்லுக்கு ஒரெ அர்த்தமாக விளங்குகிறார் சாய் சுதர்சன் என்ற திறமையான தமிழக வீரர். குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரராக அணியை தாங்கி வழிநடத்தும் சாய் சுதர்சன், 5 போட்டிகளில் 54 சராசரியுடன் 273 ரன்கள் குவித்து ஆரஞ்ச் கேப் ரேஸில் நிக்கோலஸ் பூரனுக்கு அடுத்து 2வது இடத்தில் அமர்ந்துள்ளார்.

82 ரன்கள் குவித்த சாய் சுதர்சன்.. 217 ரன்கள் குவிப்பு!

அகமதாபாத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது குஜராத் டைட்டன்ஸ் அணி. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்ய, டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்தது.

சாய் சுதர்சன்

தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் இருவரும் களமிறங்க, 3வது ஓவரை வீசவந்த ஜோப்ரா ஆர்ச்சர் கேப்டன் சுப்மன் கில்லை போல்டாக்கி 2 ரன்னில் வெளியேற்றினார். என்னதான் விரைவாகவே விக்கெட்டை இழந்தாலும் 2வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த ஜோஸ் பட்லர் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

5 பவுண்டரிகளை விரட்டிய பட்லர் 36 ரன்னில் வெளியேற, அடுத்துவந்த தமிழக வீரர் ஷாருக் கான் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என பறக்கவிட்டு 36 ரன்கள் விளாசினார்.

ஷாருக் கான்

ஒருபுறம் மற்றவீரர்கள் வெளியேறினாலும் மறுமுனையில் இறுதிவரை அதிரடியாக விளையாடிய சாய் சுதர்சன் 8 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என துவம்சம் செய்து 82 ரன்கள் குவிக்க, குஜராத் அணி 18 ஓவரில் 180 ரன்களை கடந்தது. கடைசியாக வந்த திவேத்தியா 2 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் என வானவேடிக்கை காட்ட 20 ஓவரில் 217 ரன்கள் என்ற அபாரமான டோட்டலை குவித்தது டைட்டன்ஸ் அணி.

159 ரன்னுக்கு சுருண்ட ராஜஸ்தான்..

218 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு முதல் 3 ஓவரிலேயே ஜெய்ஸ்வாலை 6 ரன்னிலும், நிதிஷ் ரானாவை 1 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேற்றிய குஜராத் பவுலர்கள் கலக்கிப்போட்டனர்.

2 விக்கெட்டுகளை தொடக்கத்திலேயே இழந்தாலும் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் இருவரும் அடுத்தடுத்து 4 சிக்சர்களை பறக்கவிட்டு ரன்வேகத்தை குறையவிடாமல் பார்த்துக்கொண்டனர். சிக்சர் பவுண்டரி என விரட்டிய இந்த ஜோடி 6 ஓவரில் 57 ரன்களை எடுத்துவந்து மிரட்டியது.

சிராஜ்

ஆனால் அடுத்த ஓவரிலேயே ரியான் பராக் 26 ரன்னில் வெளியேற, அடுத்துவந்த துருவ் ஜூரல் வந்தவேகத்தில் 5 ரன்னில் நடையை கட்டினார். 68 ரன்னுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து ராஜஸ்தான் தடுமாற, அணியை மீட்டுஎடுத்துவர வேண்டிய பொறுப்பு சஞ்சு சாம்சன் மற்றும் ஹெட்மயர் இருவரின் தோள்களில் சேர்ந்தது.

சரியான நேரத்தில் 41 ரன்னில் கேப்டன் சஞ்சுவை வெளியேற்றிய பிரசித் கிருஷ்ணா ராஜஸ்தான் அணியின் நம்பிக்கையை உடைத்தெறிந்தார். ஆனால் சஞ்சு வெளியேறினாலும் மறுமுனையில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய ஹெட்மயர் தனியாளாக அச்சுறுத்தும் பேட்டிங்கை வெளிப்படுத்தினார். மீண்டும் ராஜஸ்தான் அணிக்கு வில்லனாக வந்த பிரசித் கிருஷ்ணா ஹெட்மயரை 52 ரன்னில் வெளியேற்றி குஜராத் அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

ஹெட்மயர்

முடிவில் 19.2 ஓவருக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ராஜஸ்தான் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. 82 ரன்கள் குவித்த சாய் சுதர்சன் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.

சாய் சுதர்சன் படைத்த சாதனை..

இன்றைய ஆட்டத்தில் 30வது ஐபிஎல் போட்டியில் களம்கண்ட தமிழக வீரர் சாய் சுதர்சன், 9 அரைசதங்கள் 1 சதம் உட்பட 1307 ரன்கள் குவித்து 30 இன்னிங்ஸ்கள் முடிவில் அதிக ஐபிஎல் ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ்கெய்லை பின்னுக்கு தள்ளி 2வது இடம் பிடித்தார். இந்த பட்டியலில் முதல் 5 பேரில் ஒரேயொரு இந்திய வீரராக இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார் சாய் சுதர்சன். முதலிடத்தில் 1338 ரன்களுடன் ஷான் மார்ஷ் நீடிக்கிறார்.

sai sudharsan

அடுத்த போட்டியில் ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.