ரிங்குசிங், யாஷ் தயாள், ஹர்திக்
ரிங்குசிங், யாஷ் தயாள், ஹர்திக் file image
T20

ரிங்கு சிங்கின் சிக்ஸரால் 8 கிலோ எடை குறைந்த யாஷ் தயாள்? உண்மையை உடைத்த ஹர்திக் பாண்டியா!

Prakash J

நடப்பு ஐபிஎல் தொடரில் வெற்றிகரமாகப் பாதி லீக் போட்டிகள் முடிந்துவிட்டன. தொடர்ந்து 10 அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வகையில் போராடி வருகின்றன. இந்த நிலையில், குஜராத் அணியில் இடம்பெற்றிருக்கும் யாஷ் தயாள், 8 கிலோ எடை குறைந்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற்ற13வது லீக் போட்டியின்போது குஜராத் அணியும், கொல்கத்தா அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் 2வது பேட்டிங் செய்த கொல்கத்தா அணிக்கு, கடைசி ஓவரில் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, குஜராத் அணி வீரர் யாஷ் தயாள் கடைசி ஓவரை வீசினார். இதில், முதல் பந்தில் உமேஷ் யாதவ் ஒரு ரன் எடுக்க, மறுமுனையில் யாஷ் தயாளின் நண்பரும் கொல்கத்தா அணி வீரருமான ரிங்கு சிங் 2வது பந்தை எதிர்கொண்டார். அந்தப் பந்தை மட்டுமல்லாது, அந்த ஓவரில் அவர் தொடர்ச்சியாய் சந்தித்த 5 பந்துகளையும் சிக்ஸருக்குத் தூக்கி கொல்கத்தா அணியை வெற்றிகாண வைத்தார் ரிங்கு.

RInku SIngh

அந்த ஒரு போட்டியின் மூலம் ரிங்கு சிங் ஹீரோவாக, யாஷ் தயாளோ ஓரங்கட்டப்பட்டார். யாஷ் தயாளுக்கு அவருடைய தந்தை தொடங்கி எதிரணியில் ஆடிய ரிங்கு சிங் வரை பலரும் ஆறுதல் கூறியதுடன் ஆலோசனையும் வழங்கினர். எல்லோரும் யாஷ் தயாளிடம் ”இப்படி எத்தனையோ வீரர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதற்கு எல்லாம் கவலைப்படக்கூடாது. ஆகையால், இந்த மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு, தொடர்ந்து நீ கடுமையாக உழைக்க வேண்டும்” என ஆறுதல் கூறியிருந்தனர்.

என்றாலும் அதிலிருந்து விடுபட எவருக்கும் சில நாட்கள் ஆகத்தான் செய்யும். அதேநேரத்தில், அந்தப் போட்டிக்குப் பிறகு யாஷ் தயாள் ஓரங்கட்டப்பட்டார். இதுகுறித்து கிரிக்கெட் விமர்சகர்கள், “ஒரு போட்டியில் வீரர்கள் தவறு செய்தார்கள் என்பதற்காக தோனி, ரோகித் போன்ற கேப்டன்கள் அவர்களை நிரந்தரமாக ஒதுக்கிவிட மாட்டார்கள்; அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பர். அதுபோல் ஹர்திக் பாண்டியாவும் அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்” என வலியுறுத்தியிருந்தனர்.

Yash Dayal

ஆனாலும், அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இதுகுறித்து விமர்சனங்கள் பரவலாக எழுந்த நிலையில், ஹர்திக் பாண்டியா விளக்கம் அளித்துள்ளார்.

இந்த சீசனில் யாஷ் தயாள் மீண்டும் விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறித்து என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை.
- ஹர்திக் பாண்டியா

நேற்று (ஏப்ரல் 25) மும்பைக்கும், குஜராத்துக்கும் இடையே 35வது ஐபிஎல் லீக் போட்டி நடைபெற்றது. இதில் குஜராத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, யாஷ் தயாள் குறித்து விளக்கமளித்திருந்தார்.

ஹர்திக் பாண்டியா

இதுகுறித்து அவர், “இந்த சீசனில் யாஷ் தயாள் மீண்டும் விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறித்து என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை. காரணம், அந்தப் போட்டிக்குப் பிறகு அவர் உடல்நிலை சரியில்லாமல் 7 முதல் 8 கிலோ வரை எடை குறைந்துள்ளார். கடந்த வாரம் அணியில் சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அதில் யாஷ் தயாளும் பாதிக்கப்பட்டார். மேலும், அவருக்கு ஏற்பட்ட நெருக்கடி காரணமாக அவருடைய உடல் நலமும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து யாஷ மீண்டுவர இன்னும் சில காலம் ஆகலாம்” என தெரிவித்துள்ளார்.

யாஷ் தயாளுக்குப் பதிலாக மோகித் சர்மா குஜராத் அணியில் களம் இறக்கப்பட்டு, அவர் சிறப்பாகப் பந்துவீசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.