ஐசிசியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது, மலேசியாவில் ஜனவரி 18-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றது.
ஒரு உலகக்கோப்பைக்காக 16 நாடுகள் போட்டிப்போட்ட நிலையில், தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 82 ரன்களுக்கு சுருட்டிய இந்திய மகளிர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை தட்டிச்சென்றது.
2022-2023ஆம் ஆண்டுக்கான யு19 டி20 உலகக்கோப்பையை வென்றிருந்த இந்திய அணி, தொடர்ச்சியாக 2024-2025 உலகக்கோப்பையையும் வென்று சாதனை படைத்துள்ளது.
தொடர் முழுவதும் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் இந்தியாவிற்காக சிறந்து விளங்கிய் இந்திய வீராங்கனை கொங்கடி திரிஷா தொடர் நாயகி விருதை தட்டிச்சென்றார்.
2011 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் எப்படி இந்திய வீரர் யுவராஜ் சிங் ஒரு ஆல்ரவுண்டர் திறமையை வெளிப்படுத்தி பேட்டிங்கில் 362 ரன்கள், பவுலிங்கில் 15 விக்கெட்டுகள் என மிரட்டி உலகக்கோப்பை வெல்ல காரணமாக இருந்தாரோ, அப்படியே 19 வயது வீராங்கனையான கொங்கடி திரிஷா யு19 டி20 உலகக்கோப்பையில் கலக்கியுள்ளார்.
7 போட்டிகளில் விளையாடி யு19 டி20 உலகக்கோப்பையில் சதமடித்த ஒரே வீராங்கனை என்ற சாதனையை படைத்த திரிஷா கொங்கடி, பேட்டிங்கில் 309 ரன்கள் அடித்தும், பந்துவீச்சில் 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றி தொடர் நாயகி விருதை வென்று அசத்தியுள்ளார்.
திரிஷா படைத்த 5 தரமான சாதனைகள்:
1. தொடர் நாயகி விருது – 309 ரன்கள், 7 விக்கெட்டுகள்
2. ஆட்ட நாயகி – இறுதிப்போட்டியில் 44 ரன்கள், 3 விக்கெட்டுகள்
3. யு19 டி20 உலகக்கோப்பையின் ஒரு சீசனில் அதிகபட்ச ரன்கள் – 309
4. யு19 டி20 உலகக்கோப்பையில் சதமடித்த ஒரே உலக வீராங்கனை
5. யு19 டி20 உலகக்கோப்பையில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் - 110