2025 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிவரை முன்னேறிய ஆர்சிபி அணி, பலம் வாய்ந்த பஞ்சாப் கிங்ஸை தோற்கடித்து 17 வருடங்களுக்கு பிறகு ஐபிஎல் கோப்பை வென்று அசத்தியது.
17 ஆண்டுகளில் 9 முறை பிளேஆஃப், 3 முறை இறுதிப்போட்டிவரை முன்னேறியிருந்தாலும் கோப்பை வெல்லாத ஒரு அணியாகவே ஆர்சிபி வலம்வந்தது.
ஆனால் அணியின் அப்படியான கடினமான நேரங்களில் கூட ஆதரவுகொடுத்துவந்த ஆர்சிபி ரசிகர்கள் ‘Loyal Fans' என மற்ற ரசிகர்களாலேயே புகழப்படும் அளவு விளங்கினர். தோல்வியிலும் ஆதரவளித்த ரசிகர்களுக்கு கொண்ட்டாட்டத்தை கொடுக்கும் வகையில் 18வது வருட ஐபிஎல் சீசனில் வென்ற ஆர்சிபி அணி முதல்முறையாக கோப்பையை கையிலேந்தியது.
இந்த மகிழ்ச்சியை ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டாட விரும்பிய ஆர்சிபி அணியின் முடிவு, கடைசியில் 11 ரசிகர்களின் உயிரிழப்புக்கு காரணமாக மாறியது எல்லோருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வெற்றிகொண்டாட்டங்கள் குறித்து பேசியிருக்கும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், நாம் இன்னும் பொறுப்பாக செயல்பட வேண்டும் என்று பேசினார்.
இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்கிறது. இந்த சூழலில் சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக புதிய டெஸ்ட் கேப்டன் கில் மற்றும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இருவரும் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர்.
அப்போது ஆர்சிபி கொண்டாட்டத்தின்போது 11 பேர் உயிரிழந்தது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய கவுதம் கம்பீர், “எனக்கு எப்போதும் வெற்றி ஊர்வலங்களை நடத்துவதில் நம்பிக்கை இருந்ததில்லை. உங்களால் 11 பேரை இழக்க முடியாது. 2007-ல் டி20 உலகக்கோப்பை வென்றபோது கூட நான் இதையேதான் கூறினேன். கொண்டாட்டங்களை விட மக்களின் வாழ்க்கை முக்கியமானது.
நீங்கள் வெற்றி ஊர்வலங்களை கட்டுப்பாட்டுடன் நடத்தத் தயாராக இல்லை என்றால், அந்த கொண்டாட்டத்தை நடந்த முன்னேறியிருக்கக் கூடாது. இதுபோன்ற விஷயங்களில் நாம் இன்னும் பொறுப்பாக இருக்க முடியும்” என்று கம்பீர் பேசியுள்ளார்.