Sai Sudharsan
Sai Sudharsan Twitter
T20

IPL-ல் கெத்து காட்டும் தமிழக வீரர் சாய் சுதர்சன்! ஆழ்வார்பேட்டை அணியில் விளையாடிய சிறுவனின் கிரிக்கெட் பயணம்!

Rishan Vengai

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இடது கை பேட்டர்கள் அதிகம் இல்லை என்றாலும், இதுவரைக்கும் இருந்த இடது கை பேட்டர்கள் எல்லாம் நட்சத்திர வீரர்களாகவும், ஜாம்பவான் வீரர்களாகவும் தான் தங்களை நிலைநிறுத்தி உள்ளார்கள். அந்த வரிசையில் சவுரவ் கங்குலி, யுவராஜ் சிங், கவுதம் காம்பீர், சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவான் போன்ற மேட்ச் வின்னர்களை கடந்து வந்த இந்திய அணி, தற்போது ரிஷப் பண்ட் மற்றும் இஷான் கிஷன் போன்ற இளம் வீரர்களை அடுத்த தலைமுறை வீரர்களாக கொண்டுள்ளது. ரிஷப் பண்ட் மிடில் ஆர்டரில் வருவதால், இடது கை ஓபனர்களை பொறுத்தவரையில் ஷிகர் தவானுக்கு பிறகு யார் அடுத்த வீரர் என்ற கேள்வி இருந்துகொண்டே இருக்கிறது.

ஏனென்றால் இஷான் கிஷான் தற்போது டி20 வடிவத்திற்கு மட்டும் தான் அடுத்த வீரராக பார்க்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த சாய் சுதர்சன் தொடர்ந்து சிறப்பாக செயல்படும் பட்சத்தில், அவர் இந்திய அணியின் அடுத்த எதிர்காலமாக இருப்பார் என்று பல முன்னாள் வீரர்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர்.

ஆழ்வார்பேட்டை அணியில் விளையாடிய சிறுவனின் ஐபிஎல் வரையிலான பயணம்!

Sai Sudharsan

2001ஆம் வருடம் சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்த சாய் சுதர்சன், 14 வயதுக்குட்பட்டோருக்கான தமிழ்நாடு அணியிலிருந்து தான் தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். திருவெல்லிக்கேனி ப்ரெண்ட்ஸ் அணியில் முதலில் கிரிக்கெட் விளையாட தொடங்கிய சாய், 2019ஆம் ஆண்டு 19வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார். பின்னர் ஆழ்வார்பேட்டை சிசி அணிக்காக 2019-2020 பாளையம்பட்டி ஷீல்ட் ராஜா என்ற டோர்னமன்ட்டில் விளையாடிய சாய், அந்த தொடரில் 52 சராசரியுடன் 635 ரன்களை குவித்து அசத்தினார்.

ரஞ்சிக்கோப்பையின் அறிமுக போட்டியிலேயே சதம் விளாசிய சாய் சுதர்சன்!

தமிழ்நாடு அணிக்காக விஜய் ஹசாரே தொடரில் கடந்த 2021ஆம் ஆண்டு அறிமுகமான சாய் சுதர்சன், ரஞ்சிக்கோப்பையில் 2022ஆம் ஆண்டு அறிமுகமானார். ரஞ்சிக்கோப்பையின் முதல் போட்டியில் ஹைத்ராபாத் அணிக்கு எதிராக விளையாடிய அவர், அறிமுகமான முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார். 273 பந்துகளை சந்தித்து 18 பவுண்டரிகள், 1 சிக்சர் என விளாசி 179 ரன்களை குவித்த சாய் சுதர்சன், முதல் போட்டியிலேயே ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து தொடர் முழுக்க சிறப்பான பேட்டிங்கை வெளிக்காட்டிய அவர், அறிமுக ரஞ்சி தொடரிலேயே 7 போட்டிகளில் மட்டும் 63 சராசரியுடன் 572 ரன்களை குவித்து அசத்தினார்.

Sai Sudharsan

ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் கடந்த வருட ஐபிஎல் தொடரில் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் காயம் காரணமாக போட்டியிலிருந்து வெளியேறிய நிலையில், அவருக்கு மாற்றுவீரராக களத்திற்குள் நுழைந்தார் சாய். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில் 4 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 31 ரன்களை அடித்து தன்னுடைய சிறப்பான பங்களிப்பை அளித்தார். அந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதுவரை 7 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியிருக்கும் சாய், 45 சராசரியுடன் 2 அரைசதங்களுடன் 229 ரன்கள் அடித்துள்ளார்.

அவர் பெரிய சவால்களுக்கு தயாராக இருக்கிறார்! - சுனில் கவாஸ்கர்

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஓபனர்ஸ் விரிதிமான் சாஹா, கில் மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது குஜராத் டைட்டன்ஸ் அணி. அப்போது, கேன் வில்லியம்சனுக்கு மாற்றுவீரராக களமிறங்கிய சாய் சுதர்சன், போட்டியை வெல்வதற்கான பொறுப்பை தன் தோள்களில் தாங்கினார். சீரான ஆட்டத்தோடு அதிரடியான ஷாட்களையும் வெளிப்படுத்தி வெற்றிக்கு வித்திட்ட அவருடைய ஆட்டம், அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில் சாய்சுதர்சன் ஆட்டத்தை பார்த்து புகழ்ந்து தள்ளியுள்ளார் முன்னாள் இந்திய ஜாம்பவான் கிரிக்கெட்டர் சுனில் கவாஸ்கர்.

sai sudharsan

சாய் சுதர்சன் பற்றி பேசியிருக்கும் சுனில் கவாஸ்கர், “ சுதர்சன் தனது இன்னிங்ஸ் முழுவதும் மிகவும் கட்டுக்கோப்பாக விளையாடினார். தொடக்கத்தில் இன்னிங்ஸை கட்டமைப்பதில் கவனமாக செயல்பட்ட அவர், அன்ரிச் நார்ட்ஜேவின் பந்துவீச்சுக்கு முதலில் மரியாதை அளித்தார். பின்னர் அவருடைய கண்கள் நார்ட்ஜேவை கணித்துவிட்ட பிறகு, ​​அவருக்கு எதிராக தனது ஷாட்களை அற்புதமாக விளையாட ஆரம்பித்தார். அதை பார்ப்பதற்கு அவ்வளவு புத்திசாலித்தனமான கிரிக்கெட்டாக இருந்தது. சாய் சுதர்சனின் இந்த காம்-கம்போசர் பேட்டிங்கை பார்க்கும் போது, அவர் பெரிய சவால்களுக்குத் தயாராக இருப்பதைக் காட்டியுள்ளார். ஆனால் அவர் இதை தொடர்ச்சியாக செய்யவேண்டும். ஒரு சிறந்த வீரராக உருவெடுப்பதற்கான அத்தனை அம்சங்களையும் சுதர்சன் பெற்றுள்ளார். அவர் ஒரு சிறந்த பீல்டராக இருப்பது கூடுதல் பலம்.” என்று கூறியுள்ளார்.

சாய் சுதர்சன் ஒரு முழுமையான வீரராக இருக்கிறார்! - அனில் கும்ப்ளே

டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு பிறகு பேசியிருக்கும் அனில் கும்ப்ளே, “ சாய் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு முழுமையான வீரர் போல் விளையாடினார். வேகப்பந்து வீச்சுக்கு எதிராக மட்டுமல்லாமல், ஸ்விங்கிற்கு எதிராகவும் சிறப்பாக பேட்டிங் செய்கிறார். முதல் போட்டியில் ஒரு இம்பேக்ட் வீரராக களமிறங்கிய அவர், நிச்சயமாக ஒரு தாக்கத்தை உருவாக்கியிருந்தார். அதில் ஒரு அற்புதமான கேமியோ ரோல் பிளே செய்தார்.

sai sudharsan

ஆனால், இரண்டாவது போட்டியில் அதற்கும் ஒருபடி மேலாக சென்று அணியின் முக்கியமான வீரர்கள் அனைவரும் அவுட்டான போதும், நிலைத்து நின்று விளையாடி வெற்றியை தேடித்தந்தார். டைட்டன்ஸ் அணி சேஷிங்கிற்காக கட்டமைப்பதில் சிறப்பாக செயல்படுகின்றனர். அது சாய் சுதர்சன் வந்த பிறகு இன்னும் எளிதாகியுள்ளது” என்று புகழ்ந்து பேசினார்.

இன்னும் 2 வருடத்தில் அவர் இந்தியாவிற்காக விளையாடுவார்!- ஹர்திக் பாண்டியா

Sai Sudharsan

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக வெற்றிபெற்றதற்கு பிறகு பேசிய ஹர்திக் பாண்டியா சுதர்சனை பாராட்டி பேசினார். அப்போது பேசுகையில், “சாய் சுதர்சன் பயங்கரமாக பேட்டிங் செய்கிறார். கடந்த 2 வாரங்களில் அவர் வெளிக்காட்டி வரும் பேட்டிங்கானது, அவருடைய கடின உழைப்புக்கு கிடைத்த பலனாகும். என்னைப் பொறுத்தவரையில் அவர் இன்னும் 2 வருடத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக மிகப்பெரிய வீரராக உருவெடுப்பார். அதைத்தொடர்ந்து இந்தியாவிற்கும் அவர் சிறப்பாக விளையாடுவார்” என்று பேசியிருந்தார்.