Sanju Samson
Sanju Samson Twitter
T20

6 போட்டியில் 5ல் தோல்வி! சஞ்சு சாம்சன் அதை செய்திருக்க கூடாது! - முன்னாள் நியூசி. வீரர் விமர்சனம்!

Rishan Vengai

பவுலிங், பேட்டிங் என அனைத்து கட்டங்களையும் டிக் செய்திருக்கும் ராஜஸ்தான் அணி, தொடக்கத்தில் வலுவான அணியாகவும், கோப்பையை வெல்லக்கூடிய ஒரு அணியாகவும் தெரிந்தது. ஆனால், போகப்போக மோசமாக செயல்பட்டு வரும் அந்த அணி, தொடர்ந்து சொதப்பி வருகிறது. இந்த ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் 5 போட்டிகளில் 4-ல் வெற்றிபெற்று, முதலிடத்தை தக்கவைத்திருந்தது.

Rajasthan Royals

அப்படியே இரண்டாம் பாதியை எடுத்துக்கொண்டால், ராஜஸ்தான் அணியின் ஆட்டம் அப்படியே தலைகீழாக மாறிப்போய் உள்ளது. பிற்பாதியில் 6 போட்டிகளில் விளையாடியிருக்கும் நிலையில், ஒன்றில் மட்டுமே வெற்றிபெற்று, 5 போட்டிகளில் படுதோல்வியை சந்தித்துள்ளது. அதிலும் 2 முறை 212, 214 என வலுவான ரன்களை அடித்திருந்த போதிலும், தோல்வியை தழுவியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர் தோல்வியின் தாக்கம் அதிகமாகவே வெளிப்பட்டது!

சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 215 என்ற பெரிய இலக்கை நிர்ணயித்த போதும், ராஜஸ்தான் அணி பவுலிங்கில் கோட்டை விட்டது. அடுத்தடுத்து 4 போட்டிகளில் தோல்வியை தழுவியிருந்த நிலையில், வீரர்கள் மற்றும் கேப்டன் சஞ்சு சாம்சன் உட்பட, அனைவருமே அழுத்தத்தோடு விளையாடியது மைதானத்தில் தெரிந்தது.

Rajasthan Royals

அதன் காரணமாகவே, ஆட்டத்தில் பல தவறுகளை ராஜஸ்தான் அணி செய்தது. சிறந்த விக்கெட் கீப்பரான சஞ்சு சாம்சன், கேட்ச்-ரன் அவுட் என கிடைத்த வாய்ப்பை எல்லாம் தொடர்ந்து கோட்டை விட்டார். அதே அழுத்தத்தின் காரணமாகவே, சந்தீப் ஷர்மாவும் கடைசி நேரத்தில் நோ-பாலை வீசி, போட்டியையே மாற்றிவிட்டார். ஏற்கனவே மும்பை அணிக்கு எதிரான போட்டியிலும், 212 ரன்களை அடித்திருந்த நிலையில், போட்டியை கோட்டைவிட்டிருந்தது ராஜஸ்தான் அணி. இந்நிலையில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சஞ்சு சாம்சனின் கேப்டன்சியை விமர்சனம் செய்துள்ளார், முன்னாள் நியூசிலாந்து வீரரான சைமன் டவுல்.

இம்பேக்ட் வீரரை எதற்காக அணியில் எடுத்தார்கள்?

ரவிச்சந்திரன் அஸ்வினிற்கு பதிலாக, இம்பேக்ட் வீரராக ஒபேட் மெக்காய் களம் இறங்கினார். ஆனால், மெக்காய் தனது முதல் ஓவரில் 13 ரன்களை விட்டுக்கொடுத்தபிறகு, அவரை அப்படியே பயன்படுத்தாமல் நிறுத்திவிட்டார் கேப்டன் சஞ்சு சாம்சன். அவருக்கு பதிலாக 19ஆவது ஓவரை வீசிய குல்திப் யாதவ், 3 சிக்சர்கள், 1பவுண்டரி என விட்டுக்கொடுத்து 22 ரன்களை வாரிவழங்கினார்.

Simon Doull

இந்நிலையில் சஞ்சு சாம்சனை விமர்சித்திருக்கும் சைமன் டவுல், “ஒபேட் மெக்காயை அவர்கள் ஏன் ஆட்டத்தில் கொண்டு வந்தார்கள் என்றே எனக்கு புரியவில்லை. அவர் முதல் ஓவரை வீசிய போது, ​​அது ஒரு விக்கெட்டாக இருந்திருக்க வேண்டும். அந்த விக்கெட்டை சஞ்சு சாம்சன் கோட்டைவிட்ட பிறகுதான், அவர் 13 ரன்களுக்குச் சென்றார். ஆனால் டெத் ஓவர்களில் அவரை ஏன் பயன்படுத்தவில்லை என்றே எனக்கு புரியவில்லை, வேரியேசன்கள் மற்றும் நல்ல வேகத்தை வைத்திருக்கும் அவர் கடைசி ஓவரில் வீசியிருக்க வேண்டும். இது மிகவும் பெரிய தவறு. இதற்கு கேப்டன் தான் பொறுப்பேற்க வேண்டும். முழுக்க முழுக்க இது சஞ்சு சாம்சனின் பிழை” என்று தெரிவித்துள்ளார்.