கடந்த ஆண்டு கேரள அணிக்காக விளையாட சஞ்சு சாம்சன் கே.சி.ஏவால் ஒதுக்கி வைக்கப்பட்டதாகவும், அதனால் சாம்பியன்ஸ் டிராபிக்கான தேசிய அணிக்கான தேர்வைத் தவறவிட்டதாகவும் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் எஸ்.ஸ்ரீசாந்த் கிரிக்கெட் சங்கத்தின் மீது குற்றஞ்சாட்டியிருந்தார். இதையடுத்து, கேரள கிரிக்கெட் சங்கம் (KCA) எஸ்.ஸ்ரீசாந்தை மூன்று ஆண்டுகள் இடைநீக்கம் செய்துள்ளது. ஏப்ரல் 30 அன்று கொச்சியில் நடந்த கே.சி.ஏவின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
மேலும், அதிகாரப்பூர்வ அறிக்கை மூலம் மாநில கிரிக்கெட் அமைப்பால் பகிரப்பட்டது. அவர் சாம்சனை ஆதரித்தபோதிலும் சங்கத்திற்கு எதிராக தவறான மற்றும் அவதூறான அறிக்கைகள் தெரிவித்ததற்காகத்தான் ஸ்ரீசாந்த் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், பல தனிநபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் KCA அறிவித்துள்ளது.
தவிர, சஞ்சுவின் பெயரில் தங்களுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதாக சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், ஸ்ரீசாந்தின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, கே.சி.ஏ 2013ஆம் ஆண்டு அவர் சம்பந்தப்பட்ட ஸ்பாட் பிக்சிங் வழக்கை மேற்கோள் காட்டியுள்ளது. மேலும் அது, "ஸ்ரீசாந்த் மேட்ச் பிக்சிங் ஊழலில் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு சிறையில் இருந்தபோது, கே.சி.ஏ அதிகாரிகள் அவரைப் பார்வையிட்டு ஆதரித்தனர்" எனத் தெரிவித்துள்ளது.
இந்த விவரம் குறித்து அவரிடம் கேட்டதற்கு, “எனக்கு அது பற்றி எதுவும் தெரியாது" எனத் தெரிவித்ததாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஸ்ரீசாந்த் பிரச்னையில் சிக்குவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பு 2023ஆம் ஆண்டு, தற்போதைய இந்திய ஆண்கள் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீருடன் மைதானத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பாக லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் (எல்எல்சி) ஆணையர் அவருக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு முன்பு, 2013 ஐபிஎல் சீசனில் அவர் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.