2025 ஐபிஎல் தொடரானது மார்ச் 22-ம் தேதி முதல் தொடங்கி பரபரப்பாக நடைபெற்றுவருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலம்வாய்ந்த அணிகளாகவும், கோப்பை வெல்லக்கூடிய அணிகளாகவும் பார்க்கப்படுகின்றன.
அன்கேப்டு பிளேயர் விதிமுறை படி மீண்டும் சிஎஸ்கே அணிக்காக களம்கண்டிருக்கும் தோனி, 2025 ஐபிஎல் தொடரிலும் பங்கேற்று விளையாடுகிறார். இது கேப்டன் அல்லாமல் தோனியின் இரண்டாவது ஐபிஎல் சீசனாகும்.
கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் சிஎஸ்கே அணி பிளே ஆஃப்க்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்த நிலையில், சிஎஸ்கே அணியின் எதிர்காலம் குறித்தும், புதிய கேப்டனாக ருதுராஜை தேர்வுசெய்தது குறித்தும் முன்னாள் சிஎஸ்கே கேப்டன் தோனி நேர்காணலில் பேசியுள்ளார்.
சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் நியமிக்கப்பட்டது குறித்து பேசியிருக்கும் தோனி, ஒரு கேப்டனாக இருக்கும் வீரர், எந்தளவு பேட்டிங்கிலும் அணிக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் பேசியுள்ளார்.
அவருடைய இந்த பேச்சு சமீபத்திய ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக செயல்படாத ரோகித் சர்மாவை குறிப்பதாக சில ரசிகர்கள் கருத்திட்டு வருகின்றனர்.
கேப்டன்சி குறித்து பேசியிருக்கும் தோனி, “ஒரு வீரராக உங்களுடைய செயல்திறன் சிறப்பாக இல்லை, ஆனால் கேப்டனாக நீங்கள் சிறப்பாக செயல்படுகிறீர்கள் என்றால், அது அணிக்கு எப்போதும் பாதகமாகவே முடியும். கேப்டனாக இருக்கும் ஒரு வீரர், சிறந்த செயல்திறனையும் கொண்டிருந்தால்தான் அது அணிக்கு எப்போதும் சிறந்ததாக அமையும். முதலில் கேப்டனுடைய ஃபார்ம் முக்கியம், அதற்குபிறகு தான் கேப்டன்சி” என்று பேசியுள்ளார்.
இது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் மோசமான ஃபார்ம் காரணமாக கேப்டன்சியிலிருந்து விலகிய ரோகித் சர்மாவை தாக்கி பேசுவது போல் இருப்பதாக ரசிகர்கள் புதிய பிரச்னையை கிளப்பியுள்ளனர்.