ரிங்கு சிங்
ரிங்கு சிங் file image
T20

”நிறைய கடன்கள் இருந்தது; இப்போது குடும்ப கஷ்டம் முடிந்தது”- சிக்ஸர்களால் வறுமையை உடைத்த ரிங்கு சிங்!

Prakash J

டி20யில் அதிரடி காட்டினால் ஒரேநாளில் ஹீரோவாக முடியும் என்பதற்குச் சமீபத்திய உதாரணம், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருக்கும் வீரரான ரிங்கு சிங். அவர், கடந்த 9ஆம் தேதி குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 6 பந்துகளில் 29 ரன்கள் தேவை என்ற நிலையில், கடைசி 5 பந்துகளையும் சிக்ஸருக்குத் தூக்கி அணியை வெற்றிபெற வைத்தார்.

Rinku Singh

இதன்மூலம் பல்வேறு சாதனைகளையும் படைத்ததுடன், கிரிக்கெட் வல்லுநர்களின் பாராட்டு மழையிலும் நனைந்தார். ஐசிசிகூட, 2016ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இதேபோன்று கடைசி ஓவரில் 4 சிக்ஸர் அடித்து அணியை வெற்றிபெற வைத்த மேற்கிந்திய தீவு அணி வீரர் பிராத்வெயிட் புகைப்படத்துடன் ரிங்கு சிங்கையும் இணைத்து பாராட்டியிருந்தது.

இதுகுறித்து அவருடைய இணையத் தேடலும் அதிகரிக்கத் தொடங்கியது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ரிங்கு சிங், கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் ஒரு தந்தைக்கு மகனாகப் பிறந்தவர். கூடவே, தந்தைக்கு உதவியாகவும் பணிகளைச் செய்துள்ளார். அதேநேரத்தில் கிரிக்கெட் விளையாடியதற்காக தந்தையிடம் அடியும் வாங்கியுள்ளார். என்றாலும் தந்தையைத் தவிர அவருடைய மற்ற குடும்ப உறுப்பினர்கள் உதவியுள்ளனர். என்றாலும், குடும்ப கஷ்டத்திற்காக துப்புரவு பணிவரை செய்துள்ளார். பிறகு, ஐபிஎல்லில் அவர் கால்பதித்த பிறகே அவருடைய குடும்பம் நல்ல நிலைக்கு வந்துள்ளது.

தன்னுடைய கடந்தகால வாழ்க்கை குறித்து ரிங்கு சிங் பேட்டியளித்திருப்பது வைரலாகி வருகிறது. இதுகுறித்து அவர், “நான் என் குடும்பத்திற்காக எல்லாவற்றையும் செய்கிறேன். இப்போது என் குடும்ப கஷ்டம் முடிந்துவிட்டது. என் தந்தையை வேலையை விட்டுவிடச் சொன்னேன். அவர் 30 வருடங்களாக வேலை செய்கிறார். நான் அவரை விட்டுவிடச் சொன்னபோது, அவர் என்னைத் தொடர வலியுறுத்தினார்.

RInku SIngh

நானும் என் சகோதரர்களும் எங்கள் தந்தையுடன் வீடு வீடாகச் சென்று கேஸ் சிலிண்டர்களை விநியோகித்தோம். எனது தந்தை நான் கிரிக்கெட் விளையாடுவதை எதிர்த்தார். நான் அவருடன் பணிபுரிந்து பணம் சம்பாதிக்க வேண்டும் என அவர் விரும்பினார். ஆனால், எனக்கு அம்மா ஆதரவாக இருந்தார்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ”என் வாழ்க்கையில் இதுதான் சிறந்த இன்னிங்ஸ். தற்போது கொல்கத்தா அணியில் விளையாடுவதற்குத்தான் தீவிரம் கவனம் செலுத்தி வருகிறேன். என்னுடைய இளைய சகோதரர் கிரிக்கெட் விளையாடுவதை ஆர்வமாகக் கொண்டுள்ளார். ஐபிஎல் அணியில் அவர் இடம்பெறுவதற்கு கடினமாக உழைக்க வேண்டும். திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். ஐபிஎல்லில் நுழைவது என்பது கடினமான காரியம். முதலில் அவர், உள்ளூர்ப் போட்டிகளில் சிறப்பாய்ச் செயல்பட வேண்டும். நான் விளையாடி 6-7 ஆண்டுகள் ஆகிறது. சிறப்பாக விளையாடுவதற்கு அணியின் ஆதரவும் தேவை" என்று தெரிவித்துள்ளார்.