இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடுகிறது.
முதலில் தொடங்கப்பட்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகள் கொல்கத்தா மற்றும் சென்னை ஆடுகளங்களில் நடைபெற்றன. இரண்டு போட்டியிலும் அசத்தலான வெற்றியை பதிவுசெய்த இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி மோதும் 3வது டி20 போட்டியானது ராஜ்கோட்டில் இன்று நடைபெற்று வருகிறது. பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட முகமது ஷமி தன்னுடைய கம்பேக் போட்டியில் இன்று களமிறங்கினார்.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்ந்தெடுக்க இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய பென் டக்கெட் அதிரடியாக விளையாடி 26 பந்தில் 7 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 51 ரன்கள் அடித்து அசத்தினார். அவருடன் இணைந்து ஜோஸ் பட்லரும் பவுண்டரி சிக்சர் என அடிக்க, சரியான நேரத்தில் இந்திய அணி விக்கெட்டை எடுத்துவந்து அசத்தியது.
10 ஓவரில் 87 ரன்கள் என இங்கிலாந்து நல்ல நிலையில் இருந்தாலும், அவர்களின் மிடில் ஆர்டர் வீரர்களால் வருண் சக்கரவர்த்தியை எதிர்த்து விளையாடமுடியவில்லை. தொடர்ந்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து வீரர்களுக்கு தண்ணி காட்டினார்.
ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் 5 சிக்சர்களை விளாசிய லிவிங்ஸ்டன் 43 ரன்கள் அடிக்க இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்துள்ளது.