Dinesh Karthik
Dinesh Karthik  Swapan Mahapatra, PTI
T20

”ஜெயிச்ச டீம்ல எல்லாத்துலயும் இது சரியா இருந்துச்சு” - DKவின் மோசமான பார்ம் குறித்து டூ பிளஸ்ஸிஸ்!

சங்கீதா

16-வது சீசனின் ஐபிஎல் தொடர் லீக் சுற்றுகள் கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதி துவங்கி, மே மாதம் 21-ம் தேதி வரை, அதாவது நேற்றுடன் முடிவடைந்துள்ளது. பரபரப்பாக நடைபெற்று வந்த இந்த லீக் சுற்றில் குஜராத், சென்னை, லக்னோ, மும்பை ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற்றுள்ளன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு, ராஜஸ்தான் உள்ளிட்ட அணிகள் எல்லாம் பிளே ஆஃப் வாய்ப்பை பெறாமல், லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளன.

RCB vs GT

இந்த சீசனின் கடைசி லீக் போட்டி நேற்று பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பிளே ஆஃப்-க்கு ஏற்கனவே தகுதிபெற்றுவிட்ட குஜராத் அணியும், கட்டாய வெற்றி என்ற முனைப்பில் பெங்களூரு அணியும் களமிறங்கின. ஆனால், இந்தப் போட்டியில் பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட் கோலி மட்டுமே சிறப்பாக ஆடிய நிலையில், மற்ற வீரர்கள் எல்லாம் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். குறிப்பாக, இந்த சீசனில் சிலப் போட்டிகளில் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய தினேஷ் கார்த்திக்கின் பேட்டிங் விதம் விமர்சனத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், நடப்புத் தொடரில் 4-வது முறையாக அவர் டக் அவுட் ஆகி, ரோகித் சர்மாவின் மோசமான சாதனையை முந்தியுள்ளார்.

அதாவது, ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை டக் அவுட் ஆன வீரர்களில் 17 முறை டக் அவுட் ஆகி, தினேஷ் கார்த்திக் முதலிடத்திலும், ரோகித் சர்மா 16 டக் அவுட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இதனைத் தொடர்ந்து, சுனில் நரேன் (15), மந்தீப் சிங் (15), கிளென் மேக்ஸ்வெல் (14), மணீஷ் பாண்டே (14), அம்பத்தி ராயுடு (14) இடத்திலும் உள்ளனர்.

குஜராத் அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் தோல்வியை தழுவியதை அடுத்து, பெங்களூரு அணியின் கேப்டன் டூ பிளஸ்ஸிஸ் பேட்டியளித்தபோது, விராட் கோலியை பாராட்டிய அதேசமயத்தில், தினேஷ் கார்த்திக்கின் ஃபார்ம் பற்றியும் பேசியுள்ளார்.

Faf du Plessis-Glenn Maxwell

அதில், “மிகவும் ஏமாற்றமளிக்கிறது. இன்று இரவு பலமான அணிக்கு எதிராக நாங்கள் விளையாடினோம். சுப்மன் அதிரடியாக விளையாடினார். எங்களது பேட்டிங்கில் பார்க்கும்போது முதல் 4 பேர் நன்றாக அணியில் பங்களித்தனர். சீசன் முழுவதும் மிடில் ஆர்டரில் சில ரன்களை நாங்கள் தவறவிட்டோம், குறிப்பாக இன்னிங்ஸின் பின் இறுதியிலும், மிடில் ஓவர்களிலும், நாங்கள் விரும்பிய அளவுக்கு விக்கெட்டுகளைப் பெறவில்லை. கோலி சீசன் முழுவதும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

கேம்களை முடிப்பதில், குறிப்பாக இன்னிங்சின் கடைசி சில ஓவர்களில் நாங்கள் இன்னும் முன்னேற வேண்டும். கடந்த ஆண்டு டிகே (தினேஷ் கார்த்திக்), கேமை அதிரடியாக பினிஷிங் செய்து அருமையாக விளையாடினார். ஆனால் இந்த சீசனில் அவர் அப்படி ஆடவில்லை. நீங்கள் வெற்றிபெறும் அணிகளைப் பார்த்தால், அவர்கள் ஐந்து, ஆறு மற்றும் ஏழு ஆகிய இடங்களில் சில நல்ல ஹிட்டர்களைக் கொண்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

RCB vs GT

மேலும், இந்த சீசனில் அதிகமுறை டக் அவுட் ஆன வீரர்களில், ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜோஸ் பட்லர் 5 முறை டக் அவுட்டாகி, முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் 4 முறை டக் அவுட்டாகி, தினேஷ் கார்த்திக் 2-ம் இடம் பிடித்துள்ளார்.

ஒரே சீசனில் அதிகமுறை டக் அவுட் ஆனவர்கள்;-

1. ஜோஸ் பட்லர் (ராஜஸ்தான் ராயல்ஸ்) - 2023 - 5 டக் அவுட்டுகள்

2. கிப்ஸ் (டெக்கான் சார்ஜர்ஸ்) - 2009 - 4 டக் அவுட்டுகள்

3. மிதுன் மன்ஹாஸ் (புனே வாரியர்ஸ்) - 2011 - 4 டக் அவுட்டுகள்

4. மணீஷ் பாண்டே (புனே வாரியர்ஸ்) - 2011 - 4 டக் அவுட்டுகள்

5. ஷிகார் தவான் (டெல்லி கேப்பிடல்ஸ்) - 2020 - 4 டக் அவுட்டுகள்

6. இயன் மோர்கன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) - 2021 - 4 டக் அவுட்டுகள்

7. நிக்கோலஸ் பூரன் (பஞ்சாப் கிங்ஸ்) - 2021 - 4 டக் அவுட்டுகள்

8. தினேஷ் கார்த்திக் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) - 2023 - 4 டக் அவுட்டுகள்

இதையடுத்து நீங்க கமெண்ட்ரி செய்யவே போய்விடுங்கள் தினேஷ் கார்த்திக் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த முறை பிளே ஆஃப் சென்ற பெங்களூரு அணி, இந்த முறை லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளது.