2025 ஐபிஎல் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் டைட்டன்ஸ், ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் 3 அணிகளும் அடுத்த சுற்றான பிளேஆஃப்க்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில், கடைசி இடத்திற்கு மும்பை, டெல்லி மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது.
ஆனால் நேற்றைய சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோற்ற லக்னோ அணி தொடரிலிருந்து 5வது அணியாக வெளியேறியது. இந்த போட்டியின் போது லக்னோ அணி சுழற்பந்துவீச்சாளர் திக்வேஷ் ரதி மற்றும் சன்ரைசர்ஸ் அணியின் பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா இருவரும் மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
லக்னோ அணி 205 ரன்கள் அடித்த போதும், ஹைத்ராபாத் அணியின் பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா 20 பந்திலேயே 6 சிக்சர்கள் 4 பவுண்டரிகள் என அதிரடிகாட்டி 59 ரன்கள் குவித்து ஆட்டத்தை SRH பக்கம் திருப்பிவிட்டார்.
நீண்டநேரம் லக்னோ அணிக்கு தண்ணிகாட்டிய அபிஷேக் சர்மாவை சுழற்பந்துவீச்சாளர் திக்வேஷ் அவுட்டாக்கி வெளியேற்றினார். எப்போதும் போல ’நோட் புக்கில் கையெழுத்து போடும்’ கொண்டாட்டத்தை வெளிப்படுத்திய திக்வேஷ், அதனுடன் சேர்த்து ’கெளம்பு கெளம்பு, வெளியே போ’ என கைக்காட்டி உசுப்பேற்றினார்.
இதைப்பார்த்த அபிஷேக் சர்மா மிகுந்த கோவத்துடன் திக்வேஷ் இடம் சண்டைக்கு வர, இரண்டு வீரர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இருவரும் மோதிக்கொள்ளும் விதமாக செல்ல, நடுவர்கள் மற்றும் சக வீரர்கள் அனைவரும் சேர்ந்து தடுத்து நிறுத்தி அனுப்பிவைத்தனர். ஆனாலும் நீண்டதாக முடிவைத்திருக்கும் திக்வேஷை பார்த்து, பின்பக்க முடியை இழுப்பதுபோல சைகை காட்டியபடியே அபிஷேக் சர்மா வெளியேறினார். இது சிறிதுநேரம் களத்திலேயே பரபரப்பை ஏற்படுத்தியது.
போட்டி முடிந்தபிறகும் நீண்ட நேர வாக்குவாதம் செய்தபிறகே திக்வேஷ்-அபிஷேக் இருவரும் கைகளை குலுக்கினர்.
நேற்றைய போட்டியில் ஐபிஎல் விதிமுறையை மீறியதற்காக போட்டிக்கட்டணத்தில் திக்வேஷ் ரதிக்கு 50% அபராதமும், அபிஷேக் சர்மாவிற்கு 25% அபராதமும் விதிக்கப்பட்டது. அதனுடன் சேர்த்து திக்வேஷ்க்கு 2 டிமெரிட் புள்ளியும், அபிஷேக் சர்மாவிற்கு 1 டிமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் திக்வேஷ் தன்னுடைய செலப்ரேஷன் மூலம் ஐபிஎல் விதிமுறையை மீறியதற்காக 3 டிமெரிட் புள்ளிகளை பெற்றிருந்த நிலையில், தற்போது மொத்தம் 5 டிமெரிட் புள்ளிகளை பெற்றுள்ளார். அதனால் அவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மே 22-ம் தேதி நடக்கவிருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் திக்வேஷ் விளையாட அனுமதிக்கப்பட மாட்டார்.