அவனிஷ், எம்.எஸ். தோனி
அவனிஷ், எம்.எஸ். தோனி pt web
T20

இன்றைய போட்டியில் தோனி இல்லையா? மாற்று விக்கெட் கீப்பர் களமிறக்க வாய்ப்பு? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Angeshwar G

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தான் எதிர்கொண்ட இரு போட்டிகளையும் வென்ற ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் முறையே கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் உள்ளன.

இந்நிலையில், 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் 13 ஆவது போட்டி விசாகபட்டினத்தில் ஒய் எஸ் ஆர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள சென்னை அணியும், ஒன்பதாவது இடத்தில் உள்ள டெல்லி அணியும் மோதுகின்றன. தொடர்ந்து இரு தோல்விகளுக்குப் பின், தங்களது முதல் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் களமிறங்குகிறது ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி.

சென்னை அணி மோதிய கடந்த இரு போட்டிகளிலும் தோனி பேட்டிங் செய்யவில்லை என அவரது ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

இந்நிலையில், இன்றைய போட்டியில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக சென்னை அணியில் மாற்றுவிக்கெட் கீப்பராக உள்ள அவனிஷ் (Aravelly Avanish) களமிறங்குவார் என்று கூறப்படுகிறது. சென்னையின் மற்றொரு விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டிருந்த டெவான் கான்வேவும் காயத்தின் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளதால், அவினாஷ் இன்று களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போட்டிக்கு முந்தைய பயிற்சியில் அவனிஷ் தொடர்ச்சியாக ஈடுபட்டார். ஆனால் தோனி ஈடுபடவில்லை என்றும் தகவல்வெளியாகியுள்ளது. சென்னை அணி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்களில் கூட, அவனிஷ் பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளது. இதன்பின்பே, தோனி களமிறங்கமாட்டாரோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அவினாஷ் சென்னை அணிக்காக 20 லட்சத்திற்கு வாங்கப்பட்டார். 2024 ஆம் ஆண்டு நடந்த 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் விளையாடியவர். பேட்டிங்கில் இதுவரை சிறப்பான இன்னிங்ஸ்கள் ஆடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தோனி

தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றபின், முழுக்க முழுக்க தனது கவனத்தை ஐபிஎல் போட்டிகளுக்காக மட்டுமே செலுத்திவருகிறார். கடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில் வென்ற பின் கூட அவரது ஓய்வு குறித்து பேசபட்டது. அப்போது கூட, ரசிகர்களுக்காக இன்னொரு சீசன் விளையாட முயற்சி செய்ய வேண்டும் என்றே தெரிவித்திருந்தார். எனவே அவர் விளையாடுவது முழுக்க முழுக்க ரசிகர்களுக்காக மட்டுமே. எனவே அவர் எந்த ஒரு போட்டியையும் மிஸ் செய்ய மாட்டார் என்றும் சிலர் தெரிவிக்கின்றனர். எது எப்படி இருந்தாலும் தோனி களமிறங்காமல் இருந்தால் அவரது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் தான்.

பேட்டிங் செய்யாவிட்டாலும் களத்தில் தங்கள் ஆதர்சன நாயகன் இருந்தால் போதும் என்று ரசிகர்கள் தங்களை சமாதானபடுத்திக் கொண்டு இருந்தனர். அதற்கு விருந்தாகத்தான் அந்தப் போட்டியில் தோனி பிடித்த கேட்ச் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. தோனி எப்படியாவது இந்தப் போட்டியில் பேட்டிங் செய்வாரா என்ற ஏக்கத்தில் இருந்து தற்போது எப்படியாவது இந்தப் போட்டியில் விளையாடுவாரா என்று யோசிக்கும் நிலைக்கு ரசிகர்கள் வந்துவிட்டனர்.

இருப்பினும் தோனியின் இறுதி காலகட்டம் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் முன் இருக்கும் மிகப்பெரிய பொறுப்பு தன்னுடைய அணியை தயார் செய்துவிட்டு செல்வதுதான். அதற்கான முயற்சியில் அவர் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பதை ரசிகர்கள் நிச்சயம் புரிந்து கொள்வார்கள்.