10 அணிகள் பங்கேற்று விளையாடும் 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர், தற்போது அடுத்தகட்டத்தை நோக்கிச் செல்கிறது. இந்த தொடரில், மைதானத்தில் ஓடுவது, நடப்பது, கை குலுக்குவது என செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் 'சம்பக்' என்ற ரோபோ நாய் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது, ரசிகர்களைக் கவர்ந்து இழுத்து வருகிறது. இந்த நிலையில், 'சம்பக்' என்ற பெயருக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில், 'டெல்லி பிரஸ் பத்ரா பிரகாஷன் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. 'சம்பக்' என்ற குழந்தைகள் இதழை நடத்திவரும் அந்த நிறுவனம், பிரபலமாக இருக்கும் தங்கள் பத்திரிகையின் பெயரை பயன்படுத்தி இருப்பதாக பி.சி.சி.ஐக்கு எதிராக மனு தாக்கல் செய்தது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பி, ”ரோபோ நாய்க்கு 'சம்பக்' என பெயர் சூட்டி இருப்பது, பிராண்ட் எனப்படும் பதிவு செய்யப்பட்ட வர்த்தக முத்திரையை மீறும் செயல். 'சம்பக்' என்ற பெயர் பிரபலமாக இருப்பதால் வணிக ரீதியான சுரண்டல் நடக்கிறது” என வாதம் வைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி பி.சி.சி.ஐ.,க்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜூலை 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
முன்னதாக, அந்த ரோபோ நாய்க்கு பெயரிடுவதற்காக பிசிசிஐ தங்கள் வலைத்தளத்தில் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது. அதில் ரசிகர்களிடமிருந்து அதிக வாக்குகளைப் பெற்ற 'சம்பக்' என்ற பெயரே, பொதுமக்களின் வாக்கெடுப்பின் அடிப்படையில் அதற்குப் பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.