DC
DC Ravi Choudhary, PTI
T20

DCvPBKS | ‘இத எதிர்பார்க்கலல...’ பஞ்சாப் அணியை நொறுக்கிய டெல்லி!

ப.சூரியராஜ்

‘அய்யா எல்லா டீம் கூடவும் விளையாடி பார்த்து, அவருக்கு யாரைப் பிடிச்சுருக்கோ, அவங்களைதான் ப்ளே ஆஃப் அனுப்புவார்’ என டெல்லி கேபிடல்ஸுக்கும் சன்ரைசர்ஸுக்கும் மீம் போட துவங்கிவிட்டார்கள் மக்கள். இந்த இரண்டு அணிகளுமே ‘நான் மட்டும் கொளுத்திக்கமாட்டேன். கொளுத்திட்டு வந்து உங்களைத்தான் கட்டிப்பிடிப்பேன்’ மோடில்தான் விளையாடுகின்றன.

நேற்றிரவு, தர்மசாலாவில் நடந்த போட்டியில் அடிக்குற குளிருக்கு டெல்லி கொளுத்தியது. பஞ்சாப் தப்பித்ததா?

PBKS

டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ், பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தது. தனது நான்கு பேர் நான்கு விதமாக ஆடும் அயல்நாட்டு பேட்ஸ்மேன்களில் மிட்ஷெல் மார்ஷுக்கு காயம் ஏற்பட்ட காரணத்தினால் ப்ரித்வி ஷாவுடன் ஓபனிங் இறங்கினார் வார்னர். சுட்டிக்குழந்தை சாம் முதல் ஓவரை வீசினார். முதல் ஓவரில் 4 ரன்கள் மட்டுமே. ரபாடாவின் 2வது ஓவரில் 2 ரன்கள் மட்டுமே. அசுர வேகத்தில் ரபாடா வீசிய பந்துகள்தான் பேட்களை அடித்தது. பேட், பந்துகளை அடிக்கவில்லை. சாம் கரணின் 3வது ஓவரில், தொடர்ந்து இரண்டு பவுண்டரிகள் அடித்து பவுண்டரி கணக்கைத் துவங்கினார் வார்னர். ஸ்ரூவ்வ்...

4வது ஓவர் வீசவந்த ரபாடாவை பவுண்டரியுடன் வரவேற்றார் ஷா. அதே ஓவரில், பளீரென இரண்டு சிக்ஸர்களை அடித்தார் வார்னர். சிறுவர் சிங்கின் 5வது ஓவரில், தொடர்ந்து இரு பவுண்டரிகள், அடுத்து ஒரு சிக்ஸர் என கல்லா கட்டினார் ஷா. இன்னொரு பக்கம், 6வது ஓவர் வீசவந்த எல்லீஸை வைத்து எதிர்கடை போட்டார் வார்னர். தொடர்ந்து இரண்டு பவுண்டரிகள். பவர்ப்ளே முடிவில் 61/0 என அட்டகாசமான தொடங்கியது டெல்லி கேபிடல்ஸ்.

DC

பாம்பு சாஹரின் 7வது ஓவரில் இரண்டு பவுண்டரிகளை வெளுத்தார் ஷா. அர்ஷ்தீப்பின் 8வது ஓவரில் பவுண்டரிகள் ஏதுமின்றி 5 ரன்கள் மட்டுமே. சாஹரின் 9வது ஓவரில் ஷா ஒரு பவுண்டரி அடித்தார். 10வது ஓவரின் முதல் பந்து, வார்னர் கொடுத்த கேட்சை கோட்டைவிட்டார் ராகுல் சாஹர். பவுலர் எல்லீஸ் நொந்துப்போனார். 10 ஓவர் முடிவில் 93/0 என வலுவாக ஆடியது டெல்லி. சாம் கரணின் 11வது ஓவரில், வார்னரின் விக்கெட் சாய்ந்தது. அற்புதமான கேட்ச் பிடித்து, ‘கில்லிடா’ என தொடையைத் தட்டினார் தவான். அடுத்து களமிறங்கிய ரைலி ரூஸோ, அதே ஓவரில் இரண்டு பவுண்டரிகளை வெளுத்துவிட்டு டெல்லி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். சாஹரின் 12வது ஓவரில் 5 ரன்கள் மட்டுமே கிடைத்தது.

13வது ஓவர் வீசவந்த ரபாடாவை, ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என சிதறடித்தார் ரூஸோ. சாஹரின் 14வது ஓவரையும் சிக்ஸருடன் துவங்கினார் ரைலி ரூஸோ. அந்த ஓவரில் ஷா தனது அரைசதத்தை நிறைவு செய்துவிட்டு, ஒரு பவுண்டரியுடன் ஓவரை முடித்தார். கரணின் 15வது ஓவரில் இன்னொரு சிக்ஸரைப் பறக்கவிட்டார் ரைலி. ஓவரின் கடைசிப்பந்தில், டெய்டேவிடம் கேட்ச் கொடுத்துவிட்டு நடையைக் கட்டினார் ஷா. 15 ஓவர் முடிவில் 148/2 என சிறப்பான நிலையில் இருந்தது டெல்லி.

DC

திடீரென ஹர்ப்ரீத் ப்ராரை அழைத்துவந்தார் தவான். ப்ராருக்கே அது அதிர்ச்சியாக இருந்தது என்றால், ரசிகர்களை நினைத்துப் பாருங்கள். 16வது ஓவரை அழகாக வீசி 6 ரன்கள் கொடுத்தார். எல்லீஸின் 17வது ஓவரில், தனது அரைசதத்தை நிறைவு செய்தார் ரைலி ரூஸோ. ப்ராரின் 18வது ஓவரிலும், ரூஸோ ஒரு பவுண்டரி அடித்தார். எல்லீஸின் 19வது ஓவரை ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என கெத்தாக தொடங்கி, இன்னொரு சிக்ஸருடன் கெத்தாக முடித்தார் சால்ட். அர்ஷ்தீப், ரபாடாவுக்கு எல்லாம் இன்னும் ஓவர்கள் மிச்சமிருக்க, மீண்டும் ப்ராரிடம் கொடுத்தார் தவான்.

DC vs PBKS

‘டர்பன் போட்டிருந்ததுல அர்ஷ்தீப்புக்கும் ப்ராருக்கும் இடையில தவான் கன்பீஸ் ஆகிட்டாரோ’ என ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள். ப்ராரை அழகான ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என வரவேற்றார் ரூஸோ. மூன்று பந்துகளுக்கு இடையில் இரண்டு அகலப்பந்துகள் வேறு. அடுத்து இரண்டு பந்துகளை சால்ட் டாட் பந்துகளாக்கி, கடைசி பந்தில் பவுண்டரி அடித்தார். கடைசி ஓவரில் மட்டும் 23 ரன்கள். 213/2 என இந்த சீசனில் தங்களது முதல் 200+ ஸ்கோரை எட்டியது டெல்லி.

இம்பாக்ட் வீரராக களமிறங்கிய ப்ரப்சிமரனும், தவானும் பஞ்சாப்பின் இன்னிங்ஸை துவங்கினார். முதல் ஓவரை வீச வந்தார் கலீல் அகமது. முதல் ஐந்து பந்துகள் டாட். கடைசிப் பந்தை அகலப்பந்து என்றார் அம்பயர். மேல் முறையீட்டுக்குச் சென்று சரியானப் பந்து என தீர்ப்பு வாங்கியது டெல்லி. ஆக, முதல் ஓவரே மெய்டன் ஓவர். இஷாந்த் சர்மா வீசிய 2-வது ஓவரின் முதல் பந்து, தவான் அவுட்! தங்க வாத்து ஒன்றை பெற்றுக்கொண்டு புறப்பட்டார். அதே ஓவரின் கடைசிப்பந்து ப்ரப்சிம்ரன் ஒரு பவுண்டரி அடித்தார். கலீல் அகமதின் 3வது ஓவரில், லெக் பைஸில் ஒரு ரன்னுடன் சேர்த்து 3 ரன்கள் மட்டுமே கிடைத்தது. இஷாந்தின் 4வது ஓவரை ஹாட்ரிக் பவுண்டரிகள் அடித்து முடித்தார் ப்ரப்சிம்ரன். 5வது ஓவர் வீசவந்த நோர்க்யாவை, ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என பறக்கவிட்டார் டெய்டே. ரபாடா மனதுக்குள் சிரித்துக்கொண்டிருந்தார். முகேஷ் குமாரின் 6வது ஓவரில், இன்னும் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என கலக்கினார் டெய்டே. பவர்ப்ளேயின் முடிவில் 47/1 என சுமாராக தொடங்கியிருந்தது பஞ்சாப்.

DC vs PBKS

அக்ஸரின் 7வது ஓவரில், ப்ரப்சிம்ரனின் விக்கெட்டைத் தூக்கினார். நல்லதொரு கேட்சைப் பிடித்தார் யாஷ் தள். குல்தீப்பின் 8வது ஓவரில், லிவிங்ஸ்டோன் கொடுத்த கேட்சை, கோட்டைவிட்டார் நோர்க்யா. அக்ஸரின் 9வது ஓவரை பவுண்டரியுடன் தொடங்கினார் டெய்டே. குல்தீப்பின் 10வது ஓவரில், டெய்டே கொடுத்த கேட்சை கோட்டைவிட்டார் யாஷ் தள். குல்தீப் நொந்துப்போனார். அதே ஓவரில் லிவிங்ஸ்டோனும் ஒரு சிக்ஸர் அடிக்க, குல்தீப்பால் ஜீரணிக்கவே முடியவில்லை. 10 ஓவர் முடிவில் 75/2 என விரட்டிவந்தது பஞ்சாப்.

முகேஷின் 11வது ஓவரில், லிவிங்ஸ்டோன் ஒரு சிக்ஸரைப் பறக்கவிட்டார். ஓவரின் கடைசிப்பந்தில், கிட்டதட்ட இரண்டு ரன் அவுட் வாய்ப்புகளை ஒரே பந்தில் தவறவிட்டது டெல்லி கேபிட்டல்ஸ். ‘சகல, என் அடியை இன்னைக்கு பார்த்தது இல்லையே. டிரெஸ்ஸிங் ரூம்ல வெச்சி குத்துற குத்துல என்ன ஆகுறாய்ங்கனு மட்டும் பாரு’ என கங்குலியிடம் கடுப்பானார் பான்ட்டிங். அக்ஸரின் 12வது ஓவரை இரண்டு பவுண்டரிகளுடன் தொடங்கினார் டெய்டே. மூன்றாவது பந்தும் கொடியேறி ஆளில்லாத இடத்தில் விழ, அக்ஸருக்கு சிரிப்பு வந்துவிட்டது. அந்த ஓவரை ஒரு பவுண்டரியுடன் முடித்தார் லியாம். நோர்க்யா வீசிய 13வது ஓவரில், ஒரு சிக்ஸரைப் பறக்கவிட்டார் லிவிங்ஸ்டோன். அதே ஓவரில், தனது அரைசதத்தை நிறைவு செய்தார் டெய்டே. இந்த ஓவரில் பந்து கொடியேறி, ஆளில்லாத இடத்தில் விழுந்தது.

DC vs PBKS

குல்தீப்பின் 14வது ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டுமே. முகேஷின் 15வது ஒவரில் இரண்டு பவுண்டரிகள் கிடைக்க, `இனி பெரியவங்க வந்து அடிச்சுக்கட்டும். நாம வந்த வேலை முடிஞ்சது' என ரிட்டையர்டு அவுட் முறையில் வெளியேறினார் டெய்டே. 42 பந்துகளில் 55 ரன்கள் எடுத்திருந்த டெய்டேவை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்கள் பஞ்சாப் ரசிகர்கள். இன்னும் 30 பந்துகளில் 86 ரன்கள் தேவை. கிட்டதட்ட ஓவருக்கு 17 ரன்கள் அடிக்க வேண்டும் என்கிற நிலை.

நோர்க்யாவின் 16வது ஓவரில், வாத்து முட்டையோடு கிளம்பினார் ஜித்தேஷ் சர்மா. அடுத்து களமிறங்கிய ஷாரூக், முதல் பந்திலேயே ஒரு சிக்ஸரை வெளுத்தார். கலீல் அகமதின் 16வது ஓவர், நோ பாலில் ஒரு பவுண்டரியுடன் தொடங்கியது. ஃப்ரீஹிட்டில் ஒரு பிரம்மாண்ட சிக்ஸர் அடித்தார் லிவிங்ஸ்டோன். அதே ஓவரில் ஷாரூக் அவுட்! ஆனால், லிவிங்ஸ்டோன் இன்னொரு சிக்ஸரும் அடித்தார். ஒரே ஓவரில் 1 விக்கெட் இழந்தாலும் 20 ரன்கள் கிடைத்தது. முகேஷின் 18வது ஓவரை சிக்ஸருடன் துவங்கினார் லிவிங்ஸ்டோன். 3வது பந்தை சாம் கரண் சிக்ஸருக்கு அனுப்ப, 5வது பந்தை லிவிங்ஸ்டோன் சிக்ஸருக்குப் பறக்கவிட்டார். ஒரே ஓவரில் 21 ரன்கள்! நோர்க்யாவின் 19வது ஒவரை பவுண்டரியுடன் தொடங்கிய சாம் கரண், அடுத்த பந்தில் அவுட் ஆனார். அதற்கடுத்த பந்தில், லிவிங்ஸ்டோனுக்கு ஸ்டிரைக் மாற்றிவிடும் முனைப்பில் ப்ராரும் ரன் அவுட் ஆனார். கடைசி மூன்று பந்துகளில், ஒரு ரன் மட்டுமே அடித்தார் லிவிங்ஸ்டோன். இந்த ஓவரில் 2 விக்கெட்களும் வீழ்ந்து 5 ரன்கள் மட்டுமே கிடைத்தது. கடைசி 6 பந்துகளில் 33 ரன்கள் தேவை.

DC vs PBKS

கடைசி ஓவரை வீசினார் இஷாந்த். முதல் பந்து டாட். 2வது பந்து சிக்ஸர். 3வது பந்து பவுண்டரி என கடமைக்கு அடித்துக்கொண்டிருந்தார் லிவிங்ஸ்டோன். அப்போதுதான் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. 4வது பந்து நோ பாலாகி, சிக்ஸரும் பறந்தது. 3 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தால் ஆட்டத்தில் இப்போது வெற்றி பெறலாம். ஃப்ரீஹிட்டை முற்றிலுமாக மிஸ் செய்தார் லிவிங்ஸ்டோன். ஆட்டத்தை வெல்ல முடியாது, ஒரு சிக்ஸர் அடித்தார் லிவிங்ஸ்டோன் தனது சதத்தை நிறைவு செய்யலாம். ஆனால், அதையும் செய்யவிடாமல் கடைசிப்பந்தில் விக்கெட்டைக் கழட்டினார் இஷாந்த். 15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி, ப்ளே ஆஃப் பயணத்திற்கு ஆப்பு அடித்தது டெல்லி. 37 பந்துகளில் 82 ரன்கள் விளாசிய ரைலி ரூஸோவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ஜெயித்த மகிழ்ச்சியோடு, அப்படியே சென்னையின் பக்கம் திரும்பினார்கள் டெல்லி ரசிகர்கள். ஆத்தி! ஆனால், இன்றைய மேட்சில் ராயல் சேலஞ்சர்ஸ் தோற்றாலே, சென்னையும் லக்னோவும் ப்ளே ஆஃபிற்குள் நுழைந்துவிடும். லக்னோ நுழைந்துவிடும் எனும் காரணத்தினாலேயே ராயல் சேலஞ்சர்ஸ் வெறிகொண்டு ஆடும். என்னவோ... மாம்பழம் சாப்பிட்டுவிட்டு மேட்சைப் பார்ப்போம்.