கடைசி பந்துவரை அனல் பறக்கும் போட்டி, விறுவிறுப்பான ரன்சேஸிங், 300 ரன்களை நோக்கிய பேட்டிங் என நவீனகால ஐபிஎல்லானது 2.O வெர்சனாக மிரட்டிவருகிறது. இப்படியான பரபரப்பான சூழல் இருந்தபோதிலும் ஒரு சூப்பர் ஓவரை கடைசியாக ஐபிஎல் பார்த்து 4 ஆண்டுகள் ஆகிறது.
இந்த சூழலில் பேட்டிங்கிற்கு சாதகமான அருண் ஜெட்லி மைதானத்தில் மோதிய டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள், 4 வருடத்திற்கு பிறகு ஒரு சூப்பர் ஓவர் போட்டியை ரசிகர்களுக்கு விருந்தாக படைத்துள்ளன.
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 188 ரன்கள் குவித்தது. தொடக்க வீரராக களமிறங்கிய ஜேக் ஃபிரேசர் 9 ரன்கள் மட்டுமே அடித்து எப்போதும் போல நடையை கட்டினார். அடுத்து களமிறங்கிய கருண் நாயர் கடந்த போட்டியில் அடித்தது போல பட்டையை கிளப்ப போகிறார் என்று எதிர்ப்பார்த்த போது, 0 ரன்னில் வெளியேறி ஏமாற்றினார்.
தனியொரு ஆளாக பவர்பிளேவில் டாமினேட் செய்த அபிஷேக் போரல், துஷார் தேஸ்பாண்டே வீசிய ஒரே ஓவரில் 4 பவுண்டரிகள் 1 சிக்சர் என பறக்கவிட்டு 23 ரன்கள் விளாசி மிரட்டிவிட்டார். அவருடன் கைக்கோர்த்த கேஎல் ராகுல் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என பாசிட்டிவாக தொடங்கினாலும், அதற்குபிறகு நிறைய டாட் பந்துகளை சந்தித்த அவர் 118 ஸ்டிரைக் ரேட்டில் சுமாரான பேட்டிங்கையே வெளிப்படுத்தி 38 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார்.
ஒருபக்கத்தில் ரன்வேகத்தை குறையவிடாமல் பார்த்துகொண்ட அபிஷேக் போரல் 49 ரன்னில் வெளியேற, டெல்லி கேபிடல்ஸ் அணி இக்கட்டான நிலைமைக்கு சென்றது.
முக்கியமான தருணத்தில் கைக்கோர்த்த கேப்டன் அக்சர் பட்டேல் மற்றும் ஸ்டப்ஸ் இருவரும் 4 சிக்சர்கள் 6 பவுண்டரிகள் என வெளுத்துவாங்க 14 ஓவரில் 100 ரன்கள் மட்டுமே அடித்திருந்த டெல்லி அணி, அடுத்த 6 ஓவரில் 80 ரன்களை அடித்து மிரட்டியது. 20 ஓவர் முடிவில் 188 ரன்களை அடித்தது டெல்லி அணி.
200 ரன்களுக்கு மேல் செல்லவேண்டிய போட்டியை 188 ரன்களுக்குள் கட்டுப்படுத்திய ராஜஸ்தான் அணி வெற்றியை பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் இரண்டாவதாக பேட்டிங் செய்தது.
அதற்கு தகுந்தார் போல் தொடக்க ஜோடியாக களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும், பவர்பிளேவிலேயே 5 சிக்சர்களை பறக்கவிட்டு ரன்வேட்டை நடத்தினர். வெறித்தனமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்தஜோடி விக்கெட்டையே விட்டுக்கொடுக்காமல் 6 ஓவரில் 63 ரன்களை குவிக்க, டெல்லி அணியின் எந்த பவுலராலும் இவர்களை தடுத்து நிறுத்தமுடியவில்லை.
2 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என விளாசி செம டச்சில் இருந்த சஞ்சு சாம்சனுக்கு தசை இழுத்துப்பிடித்து வலி ஏற்பட, ரிட்டயர்ட் ஹர்ட்டாகி பேட்டிங் செய்யமுடியாமல் வெளியேறினார். விக்கெட்டை எடுக்க முடியாமல் தடுமாறிய டெல்லி அணிக்கு இந்த நிகழ்வு சாதகமாக மாறியது. அடுத்த வீரராக களமிறங்கிய ரியான் பராக் 11 பந்துக்கு 8 ரன்கள் மட்டுமே அடித்து போல்டாகி வெளியேறினார்.
ஆனால் அடுத்த விக்கெட்டுக்கு கைக்கோர்த்த ஜெய்ஸ்வால் மற்றும் நிதிஷ் ரானா இவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி, ராஜஸ்தான் அணியை வெற்றிக்கு அருகாமையில் எடுத்துவந்து வெளியேறினார். ஜெய்ஸ்வால் 4 சிக்சர்களுடன் 51 ரன்களும், நிதிஷ் ரானா 6 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 51 ரன்களும் அடித்து அசத்தினர். போதாக்குறைக்கு அடுத்து களத்திற்கு வந்த துருவ் ஜூரலும் இரண்டு சிக்சர்களை பறக்கவிட, கடைசி 6 பந்துக்கு 9 ரன்களே தேவை என்ற நிலைக்கு சென்றது போட்டி.
களத்தில் துருவ் ஜுரல் மற்றும் ஹெட்மயர் என்ற இரண்டு ஹிட்டர்கள் நிற்கும்போது எப்படியும் ராஜஸ்தான் அணிதான் வெற்றிபெறும் என்ற எண்ணமே எல்லோருக்கும் இருந்திருக்கும், ஆனால் ‘இருங்க பாய்’ என உயிரை கொடுத்து பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் வெறும் 8 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுக்க சூப்பர் ஓவருக்கு சென்றது போட்டி.
மிட்செல் ஸ்டார்க் யார்க்கர் பந்துகளாக வீசிய போதிலும் இரண்டு இரண்டு ரன்களாக தட்டித்தட்டி எடுத்த ஹெட்மயர் அணியை எப்படியாவது வெற்றிக்கு அழைத்துச்செல்லவேண்டிய போராட்டத்தில் இருந்தார். ஆனால் 2 பந்துக்கு 3 ரன்கள் என இருந்தபோது, பவுண்டரி லைனுக்கு அடித்துவிட்டு இரண்டு ரன்னுக்கு செல்வதற்கு ஹெட்மயர் ஓட, 2 ரன் முழுமையாக இருந்தபோதிலும் துருவ் ஜுரல் 1 ரன்னோடு நின்றுவிட்டார். அந்த ரன்னை அப்போதே ஓடியிருந்தால் கடைசி 1 பந்துக்கு 1 ரன்னை எளிதாக அடித்து ராஜஸ்தான் வெற்றிபெற்றிருக்கும். ஆனால் ’நான் அடிக்குறன் நின்னு வேடிக்கை மட்டும் பார்’ என்ற தொணியில் கடைசி பந்தை எதிர்கொண்ட ஜுரல் ‘பிரக்னண்ட் லேடீஸ், இதயம் பலவீனமானங்க இந்த ஃபினிசிங்க பார்க்காதீங்க’ என்ற காமெடியை போல் 2 ரன்னை அடிக்க முடியாமல் டெல்லி அணிக்கு போட்டியை கிஃப்ட் செய்தார்.
பரபரப்பாக தொடங்கிய சூப்பர் ஓவரிலும், நடப்பு போட்டியின் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்த ஜெய்ஸ்வாலையும், நிதிஷ் ரானாவையும் களமிறக்காமல், 9 ரன்களை அடிக்கமுடியாமல் தடவிக்கொண்டிருந்த ஹெட்மயரையும், 11 பந்துக்கு 8 ரன்களை அடித்த ரியான் பராக்கையும் களமிறக்கிய ராஜஸ்தான் அணி மோசமான திட்டத்தை செயல்படுத்தியது.
அழுத்தமான சூப்பர் ஓவரில் மிட்செல் ஸ்டார்க் நோ பால் ஒன்றை வீசிய போதிலும் 2 விக்கெட்டுகளை பறிகொடுத்த ராஜஸ்தான் அணி வெறும் 11 ரன்கள் மட்டுமே அடித்தது.
12 ரன்கள் அடித்தால் வெற்றி என பேட்டிங் செய்த டெல்லி அணியில் கேஎல் ராகுல் மற்றும் ஸ்டப்ஸ் இருவரும் களமிறங்கினர். பேட்டிங்கில்தான் ராஜஸ்தான் அணி தவறான வீரர்களை களமிறக்கியது என்றால், பவுலிங்கிலும் 20வது ஓவரில் 19 ரன்களை விட்டுக்கொடுத்த சந்தீப் ஷர்மாவின் கைகளில் பந்து கொடுக்கப்பட்டது. 8 எக்கானமியுடன் இன்றைய நாளின் சிறந்த பவுலரான ஆர்ச்சரின் கையில் பந்தை கொடுக்காமல் மீண்டும் மிகப்பெரிய தவறை செய்தது ராஜ்ஸ்தான்.
யாருக்கு வெற்றி என வீசப்பட்ட சூப்பர் ஓவரில் சந்தீப் சர்மாவிற்கு எதிராக கேஎல் ராகுல் பவுண்டரியும், ஸ்டப்ஸ் சிக்சரையும் பறக்கவிட டெல்லி கேபிடல்ஸ் அணி அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது. ’நீங்க கஷ்டப்பட்டுலாம் ஜெயிக்க வேணாம், கையிலிருக்கும் போட்டியை நாங்களே கிஃப்ட்டா தர்றோம்’ என செயல்பட்ட ராஜஸ்தான் அணி 7 போட்டியில் 5 தோல்விகளை அடைந்து புள்ளிப்பட்டியலில் 8வதுஇடத்திற்கு சரிந்துள்ளது.