dhoni
dhoni R Senthil Kumar
T20

CSKvMI | மும்பையவே ரெண்டு கொட்டு கொட்டியாச்சு... அடுத்து என்ன கப் தான..!

ப.சூரியராஜ்

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

ஐ.பி.எல்லின் அசல் எல் க்ளாஸிகோ, சென்னை சூப்பர் கிங்ஸ் வெர்சஸ் மும்பை இந்தியன்ஸ் போட்டி நேற்று மதியம், சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. கடந்த 13 ஆண்டுகளும் சேப்பாக்கம் வருகிற மும்பை இந்தியன்ஸ், `டிக் டிக்' என கதவைத் தட்ட, `யாரது' என கேட்கிறார்கள் சென்னை சூப்பர் கிங்ஸ். `பல்தான்ஸ்' என மும்பை சொல்ல, `என்ன வேணும்' என பம்முகிறது சென்னை. `பாயின்ட் வேணும்' என சொல்லும் மும்பை, பாயின்ட்டை எடுத்துக்கொண்டு ஓடிவிடுகிறது. இந்த துயர வரலாற்றை இன்றாவது மாற்றி எழுதுவார்களா சென்னை சூப்பர் கிங்குகள் என கண்ணீர் விட்டது மஞ்சள் படை. `நீங்களாவது சைக்கிள்ல லைட் இல்லாமதான் வர்றீங்க. நாங்க சைக்கிளே இல்லாம வரோம்' என பவுலிங்கை நினைத்து நொந்து போயிருந்தது சூப்பர் கிங்ஸ். என்னதான் நடந்தது நேற்று?

Dhoni | Rohit Sharma

டாஸ் வென்ற தல, பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தார். க்ரீனும் கிஷனும் மும்பையின் இன்னிங்ஸைத் துவங்க, பெருங்காய சஹர் முதல் ஓவரை வீசினார். முதல் ஓவரிலேயே கிஷன் ஒரு பவுண்டரியும், க்ரீன் ஒரு பவுண்டரியும் அடித்தனர். இரண்டாவது ஓவரை வீசவந்தார் தேஷ்பாண்டே. `பர்பிள் கேப் பவுலர்லாம் வெச்சிருக்கீங்க' என மும்பை ரசிகர்கள் அங்கலாய்ப்பாக சொல்ல, `ஆரஞ்சு கேப்பும் சேர்த்து கொடுக்கணும். அவ்ளோ ரன் கொடுத்துருக்காப்டி' என வருத்தபட்டார்கள் சென்னை ரசிகர்கள். 2வது ஓவரிலேயே க்ரீனின் விக்கெட்டைத் தூக்கினார் துஷார். க்ளீன் போல்டு!

சஹரின் அடுத்த ஓவரில், கிஷனும் அவுட். கேட்ச் பிடித்தது தீக்‌ஷனா! `எங்க பெரிய பையன் வந்துட்டான். நீங்க எல்லோரும் காலிடா' என பல்தான்கள் அலற, அதே ஓவரில் தில் ஸ்கூப்பையும், மேக்ஸி ஷாட்டையும் மிக்ஸியில் போட்டு அடித்து அவுட் ஆக, மீண்டும் ஒரு வாத்து முட்டையுடன் பெவிலியனுக்கு திரும்பினார் ரோகித். `16 வாத்து முட்டை, பெறுவாழ்வு பண்ணை' என விவசாய இதழின் அட்டையில் அவர் இடம் பிடித்தாலும் ஆச்சரியமில்லை. துஷார் வீசிய 4வது ஓவரில் 3 ரன்கள் மட்டுமே. சஹரின் 5வது ஓவரில், ஒரு பவுண்டரி அடித்தார் வதேரா. துஷாரின் 6வது ஓவரில், சூர்யகுமாருக்கு ஒரு பவுண்டரி கிடைத்தது. பவர்ப்ளேயின் முடிவில் 34/3 என பரிதாபமாக துவங்கியிருந்தது மும்பை இந்தியன்ஸ்.

Deepak Chahar | Rohit Sharma

ஜடேஜாவின் 7வது ஓவரில், வதேரா ஒரு பவுண்டரியைத் தட்டினார். மொயினை அழைத்து 8வது ஓவரை கொடுத்தார் தோனி. ஸ்கை ஒரு பவுண்டரியும், வதேரா ஒரு பவுண்டரியும் பறக்கவிட்டனர். ஜட்டுவின் 9வது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே. 10வது ஓவரை வீசவந்தார் தீக்‌ஷனா. சூர்யகுமாருக்கு ஒரு பவுண்டரி கிடைக்க, பார்ட்னர்ஷிப்பும் அரைசதத்தை எட்டியது. 10 ஓவர் முடிவில் 64/3 என கியரை மாற்றாமல் உருட்டியது மும்பை இந்தியன்ஸ். ஜட்டுவின் 11வது ஓவரை பவுண்டரியுடன் தொடங்கினார் வதேரா. அதே ஓவரில் ஸ்கையின் விக்கெட்டைக் கழட்டினார் ஜட்டு.

Suryakumar Yadav

ஸ்டெம்ப் தெறித்தது. கீழே இருக்கும் ஸ்கை ஏமாற்றிவிட்டது, மேலிருக்கும் ஸ்கைதான் இனி காப்பாற்றவேண்டும் என வேண்டினார்கள் பல்தான்கள். தீக்‌ஷனாவின் 12வது ஓவரில் 3 ரன்கள் மட்டுமே. தோனியின் செல்லப்பிள்ளை பதிரனா, 13வது ஓவரை வீசினார். 5 ரன்கள் மட்டுமே கிடைத்தது. தீக்‌ஷனாவின் 14வது ஓவரில், வதேரா பல மாமாங்கத்திற்கு பிறகு ஒரு பவுண்டரி அடித்தார். பதீரனாவின் 15வது ஒவரில் 93/4 என இன்னும் கியரை மாற்றவில்லை மும்பை.

தீக்‌ஷனாவின் 16வது ஓவரில், இன்னிங்ஸின் முதல் சிக்ஸரை அடித்தார் வதேரா. அதே ஓவரில் ஸ்டப்ஸ் ஒரு பவுண்டரியும் வெளுத்தார். உடனே, தீக்‌ஷனாவுக்கு பதில், ராயுடுவை இம்பாக்ட் வீரராக உள்ளே அழைத்து வந்தார் தோனி. ஜடேஜாவின் 17வது ஓவரில், வதேரா தனது அரைசதத்தை நிறைவு செய்தார். கூடுதலாக, மூன்று பவுண்டரிகள் கிடைத்தது அவருக்கு! பதிரனாவின் 18வது ஓவரில், வதேரா அவுட்! மிடில் ஸ்டெம்ப் தெறித்தது. அடுத்த ஓவரில், டேவிட்டின் விக்கெட்டைத் தூக்கினார் தேஷ்பாண்டே. அடுத்த பந்து, அர்ஷான் கானின் கேட்சை தவறவிட்டார் டூபே. அடுத்த பந்தில் ஸ்டப்ஸ் ஒரு பவுண்டரியை பறக்கவிட்டார். கடைசி ஓவரை பதிரனா வீச, முதல் பந்தில் அர்ஷாத் கான் அவுட். 4வது பந்து ஸ்டப்ஸ் அவுட். 5 ரன்கள் மட்டுமே விட்டுகொடுக்க, 139/8 என சுமாரன ஸ்கோரே அடித்திருந்தது மும்பை.

Matheesha Pathirana

சூர்யகுமாருக்கு பதிலாக அறிமுக வீரர் ராகவ் கோயலை இம்பாக்ட் வீரராக உள்ளே இறக்கினார் கேப்டன் ரோகித். ருத்து - கான்வே ஜோடி சென்னையின் இன்னிங்ஸைத் துவங்க, முதல் ஓவரை வீசினார் க்ரீன். இரண்டு பவுண்டரிகளை பறக்கவிட்டார் ருத்து. ஆர்ச்சரின் 2வது ஓவரில், கான்வே ஒரு பவுண்டரியைத் தட்டினார். அர்ஷத் கானின் 3வது ஓவரில், முதல் சிக்ஸை அடித்தார் ருத்து. அடுத்து அதே ஓவரில், இரண்டு பவுண்டரிகள், இரண்டு சிக்ஸர்கள் என அவதி அவதியாக பவுண்டரிகளை அடித்து நொறுக்கினார். இந்தப் பக்கம் ஆர்ச்சரின் ஓவரில், கான்வே இரண்டு பவுண்டரிகளை நொறுக்கிவிட்டார். 4வது ஓவரை வீசவந்தார் சாவ்லா. முதல் பந்திலேயே ருத்துராஜ் அவுட். பந்தை கொடியேற்றி, கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆர்ச்சரின் அடுத்து ஒவரில் 5 ரன்கள் கிடைத்தது. பவர்ப்ளேயின் முடிவில் 55/1 என அட்டகாசமாக தொடங்கியிருந்தது சூப்பர் கிங்ஸ்.

சாவ்லாவின் 7வது ஓவரில், ரஹானே ஒரு பவுண்டரி அடித்தார். ராகவின் இடக்கை சுழற்பந்தில் கான்வே ஒரு பவுண்டரி அடித்தார். சாவ்லாவின் அடுத்த ஓவரில், ரஹானே ஒரு சிக்ஸரைப் பறக்கவிட்டார். கொடுமையாக, அதே ஓவரில் எல்.பி.டபுள்யு முறையில் அவுட்டாகி வெளியேறினார் ரஹானே. மேல்முறையீட்டுக்குச் சென்றும் தீர்ப்பு அவருக்கு சாதகமாய் அமையவில்லை. ராகவ் கோயலின் 10வது ஓவரில், 3 ரன்கள் மட்டுமே. 10 ஒவர் முடிவில் 84/2 என அதிரடியைக் குறைத்திருந்தது சென்னை.

Piyush Chawla | Ajinkya Rahane

54 பந்துகளில் 52 ரன்கள் தேவை. சாவ்லாவின் 11வது ஓவரில், 4 ரன்கள். 12வது ஓவரில் 8 ரன்கள் கொடுத்தார் கோயல். ஸ்டப்ஸின் 13வது ஓவரில், இறங்கி வந்து ஒரு சிக்ஸர் அடித்தார் ராயுடு. சென்னை ரசிகர்கள் முகத்தில் லேசாக சிரிப்பு மலர, அடுத்த பந்திலேயே அவுட் ஆகி சிரித்துக்கொண்டே கிளம்பினார். கோயலின் 14வது ஓவரில், இரண்டு பிரம்மாண்ட சிக்ஸர்களைப் பறக்கவிட்டார் டூபே. ஆர்ச்சரின் 15வது ஓவரில் 4 ரன்கள். இன்னும் 30 பந்துகளில் 17 ரன்களே தேவை. ஸ்டப்ஸின் 16வது ஓவரில் 5 ரன்கள் மட்டுமே கிடைத்தது. மத்வாலின் 17வது ஓவரில், கான்வே அவுட். களமிறங்கினார் தல தோனி. ஒட்டுமொத்த சேப்பாக்கம் மைதானமும் அலறியது.

அர்ஷத் கானின் 17வது ஓவரில், டூபே ஒரு சிக்ஸர் அடித்தார். அடுத்த பந்து சிங்கிள் தட்டி, தலயிடம் ஒப்படைத்தார். தோனியும் சிக்ஸருக்கு பதில், சிங்கிளை தட்டி மேட்சை முடித்தார். 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆட்டத்தை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ். சிறப்பாக பந்து வீசிய பதிரனாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.