cskvdc bcci
T20

டி20 போட்டியா? டெஸ்ட்டா? மறந்துபோன CSK பேட்ஸ்மேன்கள்! உடைகிறதா தோனி கட்டமைத்த கோட்டை?

2025 ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 25 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

Rishan Vengai

உடைகிறதா தோனி கட்டமைத்த கோட்டை!

எம்எஸ் தோனியின் கேப்டன்சியின் கீழ் விளையாடும் வரை சிஎஸ்கே அணி தலைசிறந்த அணியாக விளங்கியது. 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது, இதுவரை 10 முறை இறுதிப்போட்டிக்கும், 12 முறை பிளே ஆஃப்க்கும் தகுதிபெற்றுள்ளது. இதில் பங்கேற்ற முதல் 10 ஐபிஎல் சீசனிலும் பிளே ஆஃப்க்கு முன்னேறிய ஒரே அணியாக ஐபிஎல் வரலாற்றில் தனித்துவமான சாதனை படைத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

தோனி

ஆனால் 2023 ஐபிஎல் தொடரில் சென்னை அணி தோனி தலைமையில் கோப்பை வென்றதற்குப்பிறகு, 2024 ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்சியில் சுமாரான ஆட்டத்தை கொண்டிருந்தது சிஎஸ்கே. அது நடப்பு 2025 ஐபிஎல் சீசனில் மாறும், சிஎஸ்கே அணி வெற்றிப்பாதைக்குதிரும்பும் என்று காத்திருந்த சென்னை ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ள சென்னை அணி, டி20 கிரிக்கெட்டை எப்படி விளையாடவேண்டும் என்பதையே மறந்துவிட்ட ஒரு அணியாக மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறது.

250 ரன்களுக்கு மேல் அடித்தாலும் அதை மீண்டும் திருப்பி அடிக்கும் ஒரு ஆக்ரோசமான ஆட்டத்தை மற்ற அணிகள் வெளிப்படுத்திவரும் சூழலில், கடந்த 6 ஆண்டுகளில் ஒருமுறை கூட 175 ரன்களுக்கு மேல் சேஸ்செய்யாத அணியாக படுமோசான சாதனையை பின்தொடர்ந்து வருகிறது சிஎஸ்கே அணி.

வென்று காட்டிய சிஎஸ்கே

ஒரு காலத்தில் ’சிஎஸ்கே எப்படியும் இறுதிப்போட்டிக்கு வந்துவிடும்; எதிர்த்து விளையாட போகும் அணி எது?’ என்ற கேள்வியை எழுப்பும் வகையில் பலம்வாய்ந்த அணியாக வலம்வந்த சிஎஸ்கே அணி, 2025 ஐபிஎல் தொடரில் படுமோசமாக செயல்படுவது சிஎஸ்கே அணியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்த்து களம்கண்டது ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

183 ரன்கள் அடித்த டெல்லி..

டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்து விளையாடியது, தொடக்க வீரராக களமிறங்கிய ஜேக் பிரேசரை 0 ரன்னில் வெளியேற்றிய கலீல் அகமது சிறப்பான தொடக்கத்தை சிஎஸ்கே அணிக்கு ஏற்படுத்தி கொடுத்தார். முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தாலும், அடுத்து ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் மற்றும் அபிஷேக் போரல் இருவரும் சிக்சர் பவுண்டரி என பறக்கவிட்டு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 4 பவுண்டரிகள் 1 சிக்சர் என விளாசிய அபிஷேக் போரல் ஆபத்தான வீரராக தெரிய, அவரை சரியான நேரத்தில் 33 ரன்னில் வெளியேற்றினார் ஜடேஜா.

kl rahul

ஒருபக்கம் நிலைத்து நின்று ஆடிய கேஎல் ராகுல் 6 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என நாலாபுறமும் சிதறடித்து 77 ரன்கள் அடிக்க, மறுமுனையில் சிறப்பான பங்களிப்பு வழங்கிய அக்சர் பட்டேல் 21, சமீர் ரிஸ்வி 20, ஸ்டப்ஸ் 24 ரன்கள் என அடித்து அசத்த 20 ஓவரில் 183 ரன்களை சேர்த்தது டெல்லி கேபிடல்ஸ் அணி. சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய பதிரானா 200 ரன்னுக்கு மேல் டார்கெட் செல்லாமல் கட்டுப்படுத்தினார்.

சிஎஸ்கே படுதோல்வி.. 6 ஆண்டாக தொடரும் சோகம்!

சிஎஸ்கே அணி 2019-ம் ஆண்டுக்கு பிறகு கடைசி 9 போட்டிகளில் 175 ரன்னுக்கு மேல் சேஸ்செய்து வென்றதே இல்லை என்ற மோசமான சாதனையை வைத்திருக்கும் நிலையில், அதனை உடைத்து தொடர் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்ப்பார்ப்புடன் பேட்டிங் செய்தது.

RuturajGaikwad

ஆனால் ரச்சின் ரவீந்திரா, டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட்,, ஷிவம் துபே, ரவிந்தீர ஜடேஜா என அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களுக்கு வெளியேறி படுமோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ஒரு கட்டத்தில் விளையாடுவது டி20 போட்டியா? டெஸ்ட் போட்டியா? என குழம்பிபோகுமளவு மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் ‘இவங்களுக்கு டி20 கிரிக்கெட் ஆடத்தெரியுமா? தெரியாதா’ என்ற கேள்வியை எழுப்புமளவு ஒரு கிரிக்கெட்டையே விளையாடினர்.

64 பந்துகளில் 75 ரன்கள் அடித்து 5 விக்கெட்டுகளை இழந்த சிஎஸ்கே அணி தடுமாற, ஒருமுனையில் தட்டித்தடுமாறி பேட்டிங் செய்த விஜய் ஷங்கர் 43 பந்தில் அரைசதம் அடித்தார். இது ஐபிஎல் கிரிக்கெட்டில் சிஎஸ்கே அணிக்காக அடிக்கப்பட்ட மந்தமான அரைசதமாக பதிவுசெய்யப்பட்டது. இறுதிவரை நிதானமாக டெஸ்ட் போட்டியிலிருந்து முன்னேறி ஒருநாள் கிரிக்கெட் ஆடிய விஜய் ஷங்கர் 69 ரன்களும், தோனி 30 ரன்களும் அடிக்க 20 ஓவரில் 158 ரன்கள் மட்டுமே அடித்த சிஎஸ்கே அணி படுதோல்வியை சந்தித்தது. இது சென்னை அணிக்கு நடப்பு ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் தோல்வியாகும்.

CSKvDC

25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற டெல்லி கேபிடல்ஸ் அணி விளையாடிய 3 போட்டியிலும் தோல்வியே பெறாமல் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. சிஎஸ்கே அணி  8வது இடத்தில் நீடிக்கிறது.

கம்பேக் கொடுக்குமா மஞ்சள் படை?

175 ரன்னுக்கு மேல் அடித்தால் சேஸ் செய்யாத அணி என்ற மோசமான சாதனையை 10வது போட்டியிலும் தொடர்ந்து வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

ருதுராஜ் கெய்க்வாட்

மோசமான கேப்டன்ஸி, சிறந்த பிளேயிங் லெவன் தேர்வுசெய்வதில் தோல்வி, டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டம் என அணி முழுவதும் குறைகளை கொண்டிருக்கும் சிஎஸ்கே அணி, விரைவில் கம்பேக் கொடுக்கவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பில் சிஎஸ்கே ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.