குஜராத்தை தோற்கடித்தது சிஎஸ்கே ipl
T20

230 ரன்கள்| பேட்டிங், பவுலிங் இரண்டிலும் ரூல்செய்த CSK.. GT பரிதாப தோல்வி! MI, RCB-க்கு ஜாக்பாட்!

டெவால்ட் பிரேவிஸின் அதிரடியான பேட்டிங்கின் உதவியால் 230 ரன்கள் குவித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை 83 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அசத்தியுள்ளது.

Rishan Vengai

2025 ஐபிஎல் தொடரானது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 18வது ஐபிஎல் கோப்பைக்காக 10 அணிகள் போட்டிப்போட்ட நிலையில், குஜராத் டைட்டன்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் முதலிய 4 அணிகள் அடுத்தசுற்றான பிளேஆஃப்க்கு தகுதிபெற்று அசத்தியுள்ளன.

4 அணிகள் தகுதிபெற்றிருந்தாலும் டாப் 4 பட்டியலில் எந்த அணி எந்த இடத்தில் முடிக்கப்போகிறது என்ற போட்டியானது அதிகப்படியான விறுவிறுப்புடன் நடந்துவருகிறது.

பிசிசிஐ, ஐபிஎல்

தொடரிலிருந்து வெளியேறிவிட்ட லக்னோ அணி குஜராத் டைட்டன்ஸையும், சன்ரைசர்ஸ் அணி ஆர்சிபியையும், டெல்லி கேபிடல்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸையும் வீழ்த்தி அசத்த, டாப் 4 பட்டியலானது தலைகீழாக திரும்பியுள்ளது.

இந்த சூழலில் 18 புள்ளிகளுடன் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணி டாப் 2 இடங்களில் ஒன்றை பிடிக்கும் முயற்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடியது.

பிரேவிஸ் அதிரடியால் 230 ரன்கள் குவித்த சிஎஸ்கே!

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. பலம் வாய்ந்த டைட்டன்ஸ் அணியை சிஎஸ்கே வீழ்த்தினால், அது ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இரண்டு அணிகளுக்கும் சாதகமான சூழலை ஏற்படுத்தும் என்பதால் அதிகப்படியான எதிர்ப்பார்ப்புடன் போட்டி தொடங்கப்பட்டது.

விறுவிறுப்பாக தொடங்கிய போட்டியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஆயுஸ் மாத்ரே மற்றும் டெவான் கான்வே இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். அர்ஷத் கான் வீசிய ஒரே ஓவரில் 3 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் என பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டிய ஆயுஸ் மாத்ரே 28 ரன்களை விளாசினார். போட்டிப்போட்டுக்கொண்டு மாத்ரே மற்றும் கான்வே இருவரும் சிக்சர் பவுண்டரிகளாக அடிக்க 6 ஓவரில் 68 ரன்களை கடந்த சென்னை அணி, நடப்பு ஐபிஎல் சீசனில் சிறந்த தொடக்கத்தை பெற்றது.

3 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என விளாசிய மாத்ரே 34 ரன்கள் அடித்து வெளியேற, 6 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என வெளுத்துவாங்கிய கான்வே 35 பந்தில் 52 ரன்கள் அடித்து அசத்தினார். தொடர்ந்து வந்த உர்வில் பட்டேலும் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என விரட்ட 9 ஓவரிலேயே 100 ரன்களை கடந்தது சிஎஸ்கே.

ஆனால் சரியான நேரத்தில் துபே மற்றும் கான்வே இருவரையும் அடுத்தடுத்த ஓவரில் வெளியேற்றிய டைட்டன்ஸ் அணி கம்பேக் கொடுத்தது. இங்கிருந்து சென்னை அணியை கட்டுப்படுத்திவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த குஜராத் அணிக்கு, 5 சிக்சர்கள் 4 பவுண்டரிகள் என நாலாபுறமும் சிதறடித்து 19 பந்தில் அரைசதமடித்த டெவால்ட் பிரேவிஸ் தனியாளாக டைட்டன்ஸ் அணியை சுக்குநூறாக உடைத்தார். பிரேவிஸின் பேய் அடி பேட்டிங்கால் 230 ரன்களை குவித்து அசத்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

83 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி!

231 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய டைட்டன்ஸ் அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் சுப்மன் கில் 13 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுக்க, அடுத்தடுத்து வந்த பட்லர் 5 ரன்னிலும், ரூதர்ஃபோர்டு 0 ரன்னிலும் வெளியேறி ஏமாற்றினர். 30 ரன்னுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து டைட்டன்ஸ் அணி தடுமாற, 4வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த தமிழக வீரர்களான சாய் சுதர்சன் மற்றும் ஷாருக் கான் இருவரும் நம்பிக்கை அளிக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.

அடுத்தடுத்து 6 பவுண்டரிகளை சாய் சுதர்சன் விரட்ட, 2 சிக்சர்களை பறக்கவிட்ட ஷாருக் கான் மிரட்டினார். ஆனால் 11ஆவது ஓவரை வீசவந்த ரவீந்திர ஜடேஜா ஒரே ஓவரில் சாய் சுதர்சன் மற்றும் ஷாருக் கான் இருவரையும் வெளியேற்றி கலக்கிப்போட்டார். 86 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்த குஜராத் டைட்டன்ஸ் அணி, 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே அடித்தது.

83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடைசி லீக் போட்டியில் ஆரோக்கியமான வெற்றியுடன் விடைபெற்றது. ஆனால் 18 வருட ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக 10வது இடத்தில் முடித்து மோசமான சாதனை படைத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

18 புள்ளிகளுகளுடன் இருக்கும் குஜராத் அணி வெல்லவேண்டிய முக்கியமான போட்டியில் தோற்றுள்ளதால், டாப் 2 இடங்களை சீல்செய்ய முடியாத நிலைமைக்கு சென்றுள்ளது. ஒருவேளை அடுத்த போட்டியில் 17 புள்ளிகளுடன் இருக்கும் ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இரண்டு அணிகளும் வெற்றிபெற்றால் முதலிரண்டு இடங்களை பிடித்து அசத்தும்.

மாறாக பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான மோதலில் மும்பை அணி வெற்றிபெற்றால், அவ்வணி அதிகப்படியான ரன்ரேட் காரணமாக இரண்டாவது இடத்தை பிடிக்கும்.

இப்படியான சூழலில் ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் 3 அணிகளும் கடைசி லீக் போட்டியில் வெற்றியை தேடியே களம்காணவிருக்கின்றன.இது ரசிகர்களிடையே அதிகப்படியான எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.