ஒரு ஃபினிசராக சர்வதேச கிரிக்கெட்டிலும், ஐபிஎல் கிரிக்கெட்டிலும் எம்எஸ் தோனி ஏற்படுத்தி வைத்திருக்கும் லெகஸியானது, வேறு எந்த உலக வீரரும் நெருங்க முடியாத ஒன்றாக இருந்துவருகிறது. அதிலும் 19வது மற்றும் 20வது ஓவரில் 43 வயதாகும் தோனி மட்டுமே அதிக சிக்சர்கள் அடித்த வீரராக ஐபிஎல் வரலாற்றில் வலம்வருகிறார். டெத் ஓவரில் அதிகப்படியாக 183 சிக்சர்களை அடித்திருக்கும் தோனிக்கு அடுத்த இடத்தில் 127 சிக்சர்களுடன் அதிரடி வீரர் கிரன் பொல்லார்டு நீடிக்கிறார். இப்படியான ஒரு மரபை கொண்டிருப்பதால் தான், சிஎஸ்கே அணியில் வேறுஎந்த பேட்ஸ்மேனும் அடிக்காத போதும் கூட, தோனி ஏன் இண்டண்ட் காமிக்கவில்லை என்ற ஆதங்கத்தை சிஎஸ்கே ரசிகர்கள் வெளிப்படுத்தினர்.
ஆனால் எப்படி சிஎஸ்கே அணியின் சிறந்த பந்துவீச்சானது, அவர்களின் மோசமான பேட்டிங்கால் மறைக்கப்பட்டதோ, அப்படித்தான் விக்கெட் கீப்பிங், பேட்டிங் என அவருடைய வேலையை சரியாக செய்த ஒரே வீரராக இருந்த தோனியும் மறைக்கப்பட்டார். அதை உணராத சில ரசிகர்கள் தோனியை கடுமையான சொற்களால் வசைபாடினர். சிஎஸ்கே அணியின் தொடர்ச்சியான 5 தோல்விகளும் அதற்கு பெரிய காரணமாக அமைந்தது.
இந்த கடினமான சூழலில் 5 தொடர் தோல்விக்கு பிறகு வெற்றியை தேடி களம்கண்ட தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது.
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வுசெய்தார். சிஎஸ்கே அணியில் அஸ்வின், கான்வே இருவரும் வெளியேற்றப்பட்டு 20 வயது இளம்வீரரான ஷைக் ரஷீத் மற்றும் ஆல்ரவுண்டர் ஜேமி ஓவர்டன் இருவரும் அணியில் இடம்பிடித்தனர். மிகச்சரியான பிளேயிங் லெவன் கலவையோடு களம்கண்ட சென்னை அணி, சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியது.
முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு ஒரு அசாத்தியமான கேட்ச் மூலம் எய்டன் மார்க்ரமை 6 ரன்னில் வெளியேற்றிய திரிப்பாத்தி முதல் ஓவரிலேயே விக்கெட்டை எடுத்துவந்தார். அடுத்து களத்திற்கு வந்த நிக்கோலஸ் பூரன் 2 பவுண்டரிகளை விளாசினாலும் அவரை 8 ரன்னில் அவுட்டாக்கிய அன்சுல் கம்போஜ் கலக்கிப்போட்டார்.
விரைவாகே லக்னோ அணி இரண்டு முக்கியமான விக்கெட்டுகளை இழந்தாலும் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என இண்டண்ட் காமித்த மிட்செல் மார்ஷ் ஆபத்தான வீரராக தெரிந்தார். ஆனால் அவருடைய மிடில் ஸ்டம்பை தகர்த்த ஜடேஜா 30 ரன்னில் வெளியேற்றி அசத்தினார். மார்ஷ் வெளியேறினாலும் அடுத்து களத்திற்கு வந்த ஆயுஸ் பதோனி ஓவர்டன் வீசிய அடுத்தடுத்த 2 பந்தில் தொடர்ச்சியாக 2 சிக்சர்களை பறக்கவிட்டு மிரட்டினார்.
அதற்குபிறகு 2 முறை அம்பயரால் அவுட் கொடுக்கப்பட்ட போதும் DRS மூலம் தப்பித்த ஆயுஸ் பதோனி, 22 ரன்னில் இருந்தபோது ஜடேஜாவிடம் சிக்கினார்.
ஒருபுறம் வரிசையாக விக்கெட்டுகள் சரிந்தாலும் தனியொரு ஆளாக போராடிய கேப்டன் ரிஷப் பண்ட் 4 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என வெளுத்துவாங்க 20 ஓவர் முடிவில் லக்னோ அணி 166 ரன்களை அடித்தது. ரிஷப் பண்ட் 63 ரன்கள் அடித்து அசத்தினார்.
167 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய சிஎஸ்கே அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய இளம்வீரர் ஷைக் ரஷீத் மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் அதிரடியான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். அடுத்தடுத்து 6 பவுண்டரிகளை விரட்டிய ரஷீத் சிறந்த திறமையான வீரராக அடையாளம் காணப்பட்டார், அதேநேரத்தில் ரச்சின் ரவீந்திராவும் 5 பவுண்டரிகளை விரட்ட 6 ஓவரில் 59 ரன்களை சேர்த்தது சென்னை அணி.
ஆனால் இந்த சீசன் முழுவதும் பவர்பிளேவிற்கு பிறகு ரன்களை அடிக்க சிரமப்பட்ட சிஎஸ்கே அணி, இந்த போட்டியிலும் மோசமாகவே செயல்பட்டது. ரஷீத் 27 ரன்னிலும், ரச்சின் 37 ரன்னிலும் அவுட்டாகி வெளியேற, அடுத்து களத்திற்கு வந்த ராகுல் திரிப்பாத்தி 10 பந்துக்கு 9, ஜடேஜா 11 பந்துக்கு 7 , விஜய் ஷங்கர் 8 பந்துக்கு 9 ரன்கள் என படுமோசமான பேட்டிங்கை வெளிப்படுத்த சிஎஸ்கே அணி மொத்தமாக சரிந்தது. தேவைப்படும் ரன்ரேட்டும் 11 ரன்களை தொட்டது.
போதாக்குறைக்கு ஷிவம் துபேவிற்கும் பேட்டில் பந்துபடாமல் 28 பந்துக்கு 25 ரன்கள் என தடவிக்கொண்டிருந்தார் துபே. கடைசி 5 ஓவருக்கு 56 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலைமைக்கு ஆட்டம் செல்ல, முடிஞ்சு போச்சு 6வது தொடர் தோல்வியை சிஎஸ்கே சந்திக்கபோகிறது என்ற எண்ணத்திற்கே ரசிகர்கள் சென்றனர்.
ஆனால் 7வது வீரராக களத்திற்கு வந்த 43 வயதான தோனி, வந்ததிலிருந்தே சிக்சர் பவுண்டரி என நாலாபுறமும் சிதறடித்து 7 பந்தில் 19 ரன்கள் என துவம்சம் செய்ய, ஆட்டம் சிஎஸ்கேவின் பக்கம் திரும்பியது. அடுத்தடுத்த ஓவரில் 13 ரன்கள், 12 ரன்கள் என விரட்டிய தோனி ஆட்டத்தை சிஎஸ்கேவின் கைகளில் எடுத்துவர 18வது ஓவரை சிறப்பாக வீசிய ஆவேஷ் கான், கடைசி 2 ஓவருக்கு 24 ரன்கள் என இழுத்துப்பிடித்தார்.
19வது ஓவரை போட்டியில் 3 ஓவரில் 18 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ரவி பிஸ்னோய்க்கு ரிஷப் பண்ட் கொடுப்பார் என்று பார்த்தால், ஷர்துல் தாக்கூரின் கைகளில் பந்தை கொடுத்து தவறான முடிவை எடுத்தார். கேப்டனாக ரிஷப் பண்ட் செய்த இந்த தவறு லக்னோ அணியை தோல்வியின் பக்கம் கொண்டு சென்றது. முக்கியமான தருணத்தில் நோ பால் வீசிய ஷர்துல் தாக்கூர் அதில் சிக்சரையும் விட்டுக்கொடுக்க 19வது ஓவரில் மட்டும் 19 ரன்களை அடித்தது சிஎஸ்கே. கடைசி 6 பந்துக்கு 5 ரன்கள் என போட்டி மாற, 11 பந்தில் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 236 ஸ்டிரைக் ரேட்டில் 26 ரன்கள் அடித்த தோனி சிஎஸ்கே அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.
தனியாளாக சிஎஸ்கேவிற்கு வெற்றியை தேடித்தந்த தோனி 6 வருடத்திற்கு பிறகு ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார். 6 வருடத்திற்கு பிறகு ஆட்டநாயகன் விருதை வென்றாலும் அதிக ஆட்டநாயகன் விருது வென்ற விராட் கோலியின் சாதனையை சமன்செய்து அசத்தினார் தோனி. அதிக ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய வீரர்களில் 19 எண்ணிக்கையுடன் ரோகித் சர்மா முதலிடத்திலும் 18 எண்ணிக்கையுடன் தோனி மற்றும் கோலி இரண்டாவது இடத்திலும் நீடிக்கின்றனர்.
அதுமட்டுமில்லாமல் இன்றைய போட்டியில் ஃபீல்டிங் மூலம் 200வது விக்கெட்டை வீழ்த்திய தோனி, இதை செய்த முதல் வீரராக மாறி சாதனை படைத்தார். ஒட்டுமொத்தமாக இன்றைய நாள் தோனியின் நாளாக அமைந்தது.
எத்தனை முறை அவமானப்படுத்தப்பட்டாலும், எத்தனை முறை உன்னால் முடியாது என உதாசினப்படுத்தப்பட்டாலும் 43 வயதாகும் தோனி என்ற இந்த குதிரை இன்னும் பந்தயம் அடித்துவருகிறது.