Chris Gayle & Virat Kohli
Chris Gayle & Virat Kohli  File Image
T20

'விராட் கோலி சாதனையை முறியடிக்க திரும்பவும் வர்றேன்' - கிறிஸ் கெயில்

Justindurai S

நடப்பு ஐபிஎல் சீசனின் கடைசி லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி கண்ட ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு, பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த விராட் கோலி தனி ஆளாக நின்று போராடி 61 பந்துகளில் 101 ரன்கள் குவித்தார். இதில் 13 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். இந்த போட்டியில் விராட் கோலி பதிவு செய்த சதத்துடன் சேர்த்து ஐபிஎல் வரலாற்றில் மொத்தமாக 7 சதங்களை பதிவு செய்துள்ளார்.

kohli

இதன் மூலம் கிறிஸ் கெயிலின் சாதனையை கோலி தகர்த்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் கிறிஸ் கெயில் 6 சதம் அடித்த நிலையில், தற்போது விராட் கோலி 7 சதம் அடித்திருக்கிறார். இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் 5 சதங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். மேலும், ஷிகர் தவான் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோருக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகளில் தொடர்ச்சியாக சதம் அடித்த மூன்றாவது பேட்டர் என்ற பெருமையையும் விராட் கோலி படைத்தார்.

இந்த நிலையில், ஓய்வில் இருந்து மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பிவந்து விராட் சாதனையை முறியடிப்பேன் என நகைச்சுவையாக பேசியுள்ளார் கிறிஸ் கெயில். ஜியோ சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிறிஸ் கெயில் பேசுகையில் “விராட் கோலியை ஒருபோதும் சந்தேகிக்க வேண்டாம். அதுவொரு அருமையான இன்னிங்ஸ். கோலி சிறப்பாக விளையாடினார். உங்களுக்கு தெரியும், அவர் தனது அணியை வெற்றிகரமான நிலைக்கு கொண்டு வந்துள்ளார். விராட் கோலி மற்றும் ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் இருவரும் மிகவும் நன்றாக பேட்டிங் செய்தார்கள். என்னுடைய சாதனையை கோலி கடந்துவிட்டார். நான் ஓய்வில் இருந்து மீண்டும் கிரிக்கெட் விளையாட வருகிறேன். அடுத்த வருடம் விராட் சாதனையை முறியடிப்பேன்” என நகைச்சுவையாக பேசினார்.

Chris Gayle

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான கிறிஸ் கெயில் ஐபிஎல் கிரிக்கெட்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக 2011 முதல் 2017ஆம் ஆண்டு வரை ஆடினார். கிறிஸ் கெயிலும் விராட் கோலியும் ஆர்.சி.பி. அணியில் 6 ஆண்டுகள் சக வீரர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பு ஐபிஎல் சீசனில் விராட் கோலி 14 இன்னிங்ஸ் விளையாடி உள்ளார். அதன் மூலம் 639 ரன்களை அவர் பதிவு செய்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 53.25. இதில் 65 பவுண்டரி மற்றும் 16 சிக்ஸர்களை அவர் பதிவு செய்துள்ளார். 2 சதம் மற்றும் 6 அரை சதங்கள் இதில் அடங்கும். ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக கடந்த 2008 சீசன் முதல் நடப்பு சீசன் வரையில் 7,263 ரன்கள் குவித்துள்ளார் கோலி.