Dhoni
Dhoni PTI
T20

‘சேப்பாக்கம் எங்க கோட்டை...’ அன்புடென் ஆர்ப்பரித்த மஞ்சள் படை... குகைக்கு திரும்பும் சிங்கம்! #IPL2023

ப.சூரியராஜ்
சிங்கம் தன் குகைக்கு திரும்பிவிடுமா? சிலந்தி தன் வலையைப் பின்னிவிடுமா? சூப்பர் கிங்ஸ் தன் அன்புடெனுக்கு வந்துவிடுமா? எனும் நீண்டநாள் கேள்விக்கு, `இந்த ஆண்டு வரும்' என பதில் சொன்னதிலிருந்தே ரசிகர்கள் திளைத்து திக்குமுக்காடி நின்றார்கள்.

கிட்டதட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு, முழுமையான இருக்கைகளோடு, சென்னை சூப்பர் கிங்ஸுக்கு பெரிய விசில் அடிக்க காத்திருந்த மஞ்சள் படைக்கு, நேற்றைய இரவு மகிழ்ச்சிகரமாக அமைந்தது. நடப்பு ஐ.பி.எல் தொடரின் ஆறாவது போட்டியில், ஏழாம் நம்பர் வீரனைக் காண மதியமே மைதானத்தை சூழ்ந்துவிட்ட ரசிகர்கள், `தோனி தோனி' என சேப்பாக்கத்தில் அலறியது, வில்லிவாக்கத்தில் எதிரொலித்தது. தானா சேர்ந்த கூட்டத்தின் துணையோடு, லக்னோவை எதிர்கொண்டது சென்னை அணி.

CSK

அணியில் எவ்வித மாற்றமும் இன்றி சென்னை அணியும், உனத்கட்டுக்கு பதில் யாஷ் தாகூருடன் லக்னோ அணியும் களமிறங்கின. டாஸ் வென்ற சூப்பர் ஜெயன்ட், சூப்பர் கிங்ஸை பேட்டிங் ஆட அழைத்தது. முதல் ஓவர் வீசுவதற்கு முன்பே கால பைரவரின் வாகணம் பிட்சுக்குள் ஓடிவர, 5 நிமிடம் காலதாமதத்துடன் தொடங்கியது போட்டி.

ராக்கெட் ருத்துவும், கான்வேயும் சென்னையின் இன்னிங்ஸை ஒபன் செய்ய, மேயர்ஸ் முதல் ஓவரை வீசினார்.

பவுண்டரிகள் ஏதுமின்றி ஆறு ரன்கள். 2வது ஓவரை வீசவந்த ஆவேஷ்கான், முதல் பந்தை ரொம்பவே ஆவேசமாக வீசிவிட, விலகிச்சென்று அகலபந்தாகி பவுண்டரிக்குள் விழுந்தது. லக்னோ அணியில் தலைவர் ராகுல், இது அகலபந்து கிடையாதென மேல்முறையீட்டுக்குச் செல்ல, தீர்ப்பு பாதகமாய் முடிந்தது. `ஆரம்பமே அலைக்கழிப்பா இருக்கே' என லக்னோ ரசிகர்கள் கொசுபேட்டைக் கொண்டு தலையில் அடித்துக்கொண்டார்கள்.

LSG

ஓவரின் மூன்றாவது மற்றும் நான்காவது பந்தை பாயின்ட் மற்றும் எக்ஸ்ட்ரா கவர் திசையில் பவுண்டரிக்கு விரட்டினார் கான்வே. மேயர்ஸ் வீசிய 3வது ஓவரின் இரண்டாவது பந்தை பவுண்டரிக்கு தெறித்து ஒடவைத்தார் ருத்து. 4வது ஓவரை வீசவந்த க்ருணாலுக்கு ஒரு பவுண்டரியை சாத்துக்குடி பையில் போட்டு அனுப்பிவைத்தார் ருத்துராஜ். 5வது ஓவரை வீச கிருஷ்ணப்பா கௌதமை அழைத்தார் ராகுல்.

Ruturaj

2021 சீசனின் தன்னை பென்ச்சில் அமர வைத்து வாட்டர் பாட்டில் தூக்க வைத்த சென்னை அணியை தொன்னையில் போட்டு தின்றுவிடுவது எனும் முடிவோடு வந்தார். ஆனால், ருத்துராஜ் வேறொரு முடிவில் இருந்தார். ஓவரில் இரட்டைப்படை எண் கொண்ட மூன்று பந்துகளில், மூன்று சிக்ஸர்களைப் பறக்கவிட்டார் ருத்து.

மஞ்சள் படை ஒரே கத்து!
Ruturaj

கடந்த மேட்சில் கலக்கிய மார்க் வுட், பவர்ப்ளேயின் கடைசி ஓவரை வீசவந்தார். முதல் பந்து, எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பவுண்டரி அடித்தார் கான்வே. இரண்டாவது பந்து, பைஸ் பட்டு பவுண்டரிக்கு ஓடியது. மூன்றாவது பந்து பேக்வார்டு ஸ்கொயரில் ஒரு பவுண்டரி. பிறகு, ஐந்தாவது பந்தில் ருத்துராஜ் ஒரு சிக்ஸர். பவர்ப்ளேயின் முடிவில் 79/0 என செமத்தியாக ஆடிக்கொண்டிருந்தது சென்னை. இதுதான் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது பவர்ப்ளேயில் அடித்த அதிகபட்ச ஸ்கோர்.

யாஷ் தாகூர் வீசிய 7வது ஓவரில் 7 ரன்கள் மட்டுமே. அடுத்து க்ருணால் வந்தார் பந்து வீச. முதல் பந்தை சிங்கிளுக்கு தட்டி, 25 பந்தில் தனது அரைசதத்தை நிறைவு செய்தார் ருத்துராஜ். நான்காவது பந்தையும் ஆறாவது பந்தையும் சிக்ஸருக்கு வெளுத்துவிட்டார் கான்வே. யாஷ் தாகூர் வீசிய 9வது ஓவரில் 9 ரன்கள் மட்டுமே. எப்படியோ, ஒருவழியாக ரவி பிஷ்னோயை பந்து வீச அழைத்தார் ராகுல்.

LSG

`சார்பட்டா' கலையரசனைப் போல இதுக்குதான் காத்துகினு இருந்தேன் என தோள்களை சுழற்றிக்கொண்டு வந்தார் பிஷ்னோய். முதல் பந்திலேயே ருத்துராஜ் அவுட்!

CSK vs LSG

பத்து ஓவர் முடிவில் 114/1 என அட்டகாசமான நிலையில் இருந்தது சென்னை. 11வது ஓவரை வீசவந்தார் மார்க். முதல் பவுண்டரியை விரட்டிவிட்ட கான்வே, அடுத்த பந்தே அவுட்டானார். `ஏலே கான்வே, ஏன்வே?' என சென்னை ரசிகர்கள் வருத்தம் அடைந்தார்கள். க்ருணால் எங்கிருந்தோ ஓடிவந்து, டைவ் அடித்து அட்டகாசமான கேட்சைப் பிடித்தார்.

12வது ஓவரை வீசவந்தார் பிஷ்னோய். வெறும் 5 ரன்கள் மட்டுமே. டூபேவும் மொயினும் களத்தில் நின்றார்கள். 13வது ஓவர் வீசவந்த யாஷ் தாகூரை, ஒரு சிக்ஸர் ஒரு பவுண்டரி என வெளுத்தார் டூபே. பிஷ்னோய் வீசிய 14வது ஓவரில், இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்தை சிக்ஸருக்கு தூக்கி கடாசினார் டூபே. ஐந்தாவது பந்தில் அவரும் அவுட்!

திடீரென மொயின் அலி களத்தில் முகமது அலியாக மாறினார். பட்டாம்பூச்சியைப் போல் பறந்து குளவியைப் போல் அவர் கொட்டிய கொட்டில் ஹாட்ரிக் பவுண்டரிகளைத் தாரை வார்த்துக் கொடுத்தார் ஆவேஷ்.
LSG

மீண்டும் பிஷ்னோவைக் கொண்டுவந்து, மொயின் அலியின் விக்கெட்டையும் தூக்கினார் ராகுல். ஆவேஷ் வீசிய 17வது ஓவரில், ஒரு பவுண்டரியை அடித்துவிட்டு அடுத்த பந்திலேயே அவுட்டும் ஆனார் பென் ஸ்டோக்ஸ். ஜடேஜாவும் ராயுடுவும் களத்தில் இருந்தார்கள். 18வது ஓவர் வீசவந்த வுட்டை சிக்ஸருடன் வரவேற்றார் ராயுடு. 4வது பந்தில் இன்னொரு சிக்ஸர். 19வது ஓவரில், தாகூரிடமிருந்து ஒரு பவுண்டரியை அள்ளினார். ஆவேஷ் கானை அனுப்பிவிட்டு ஆயுஷ் பதோனியை இம்பாக்ட் வீரராக உள்ளே கொண்டுவந்தது லக்னோ அணி.

வுட் வீசிய முதல் பந்திலேயே ஜடேஜா அவுட். அடுத்துதான் வந்தார் தல தோனி.

Dhoni
ஒட்டுமொத்த சேப்பாக்கமும் ஆர்பரித்தது.

ஓவரின் இரண்டாவது பந்தை டீப் தேர்ட் மேன் திசையில் ஒரு வெட்டு வெட்டினார். சிக்ஸருக்கு பறந்தது. அடுத்த பந்தை, இன்னொரு பக்கம் சிக்ஸருக்கு வெளுத்தார். அன்புடென் அலறியது. 4வது பந்தில் அவுட். 20 ஓவர் முடிவில், 217/7 என இன்னிங்ஸை முடித்துக்கொண்டது சென்னை அணி.

MS Dhoni

218 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் கனவோடு களமிறங்கியது லக்னோ. ராயுடுவுக்கு பதிலை துஷார் தேஷ்பாண்டேவை உள்ளே கொண்டுவந்தார் தோனி. அம்பத்தி ராயுடுவுக்கு பதிலாக `இம்பாக்ட் ப்ளேயர் புகழ்' துஷார் தேஷ்பாண்டேவை இம்பாக்ட் ப்ளேயராக அழைத்துவந்தார்.

சென்னை அணியின் சம்பிரதாயப்படி தீபக் சஹார் முதல் ஓவரை வீச, கே.எல்.ராகுலும் காயல் மேயர்ஸும் ஆட்டத்தை துவங்கினர். முதல் ஓவரின் நான்காவது பந்தில், ஒரு பவுண்டரி அடித்தார் ராகுல். பென் ஸ்டோக்ஸ் இரண்டாவது ஓவரை வீசவந்தார். பாயின்ட்டில் ஒரு பவுண்டரி, மிட் ஆஃபில் ஒரு பவுண்டரி, லாங் ஆஃபில் ஒரு சிக்ஸர் என வெரைட்டியான ஸ்ட்ரோக்ஸால் ஸ்டோக்ஸை வெச்சி செய்தார் மேயர்ஸ். சேப்பாகம் மைதானம் கப்சிப் என்றானது.

CSK vs LSG

மீண்டும் வந்தார் சஹார். அவர் வீசுகிற வேகத்திற்கு அரைக்குழி பந்துகள் எல்லாம் போடுவதைப் பார்த்ததும், `மாமேய் எனக்கு நல்ல என்டர்டெயின்மென்ட் ஒன்னு மாட்டியிருக்கு' என்றார் மேயர்ஸ். ஒரு ஓவரில் மூன்று பவுண்டரி. தெறித்துக்கொண்டு ஓடியது. இப்போது, தேஷ்பாண்டேவை அழைத்து வந்தார் தோனி. சென்னை ரசிகர்கள் `ஒரு திகிலா இருக்கேப்பா' என நெஞ்சைப் பிடித்தார்கள். 2 நோ பால், ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 18 ரன்களை மேயர்ஸுக்கு வாரி வழங்கினார். தேஷ்பாண்டே இன்னும் திருந்தலை மாமா என ஆதங்கபட்டனர் சூப்பர் ரசிகர்கள்.

சஹார் வீசிய 5வது ஓவரில், மேயர்ஸ் மீண்டும் இரண்டு பவுண்டரிகளை அடித்தார். அதைப் பார்த்ததும் தனக்கும் பவுண்டரி அடிக்கும் ஆசைவர, ராகுலும் ஒரு பவுண்டரி அடித்து மகிழ்ந்தார். அவ்ளோதான் என சென்னை ரசிகர்களில் பலர் மனசு விட்டார்கள்.

பவர்ப்ளேயின் கடைசி ஓவரை வீசவந்தார் மொயின் அலி. முதல் பந்தில் சிங்கிள்தான் தட்டினார் மேயர். `வழக்கமா பவுண்டரிதானே அடிப்பீங்க. இதென்ன சிங்கிள் அடிக்குற கெட்ட பழக்கம்' என சென்னை ஃபீல்டர்களே பந்தை எடுத்து பவுண்டரிக்குள் எரிந்து 5 ரன்களை பெற்றுத்தந்தனர்.

LSG

21 பந்துகளில் அரைசதத்தைக் கடந்தார் மேயர்ஸ். ஆட்டத்தின் மூன்றாவது பந்தில்தான், நங்கூரத்தை நச்சென பாய்ச்சி ஆட்டத்தை தன் பக்கம் திருப்பியது சென்னை அணி. மேயர்ஸின் விக்கெட்டை அழகாய் திட்டமிட்டு கழட்டினார்கள். மொயின் அலியின் சுழலில் தூக்கி அடித்து கான்வேயிடம் கேட்ச் கொடுத்து கிளம்பினார் மேயர்ஸ். பவர்ப்ளேயின் முடிவில் 80/1 என பயமுறுத்தியது லக்னோ அணி.

சான்ட்னர் பந்து வீச வந்தார். ஓவரின் கடைசிப் பந்தில் ஹூடாவின் விக்கெட்டைக் கழட்டி `போடா' என பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். அந்த ஓவரில் மொத்தமே 2 ரன்கள்தான் விட்டுக்கொடுத்தார். மீண்டும் வந்தார் மொயின் அலி. இம்முறை கே.எல்.ராகுலின் விக்கெட்டை சாய்த்தார். 111.11 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிக்கொண்டிருந்த கே.எல்.ராகுலை ஏன் அவுட் செய்தீர்கள். அவர்தான் சென்னை அணிக்காக ஆட்டத்தை ஜெயித்து தரப்போகிறவர் என ரசிகர்கள் அப்செட் ஆனார்கள். ப்ச்ச்...

மொயின் அலி

சான்ட்னர் வீசிய 9வது ஓவரில், க்ரூணால் பாண்டியா ஒரு சிக்ஸரை தம் கட்டி அடித்தார். இந்தப் பக்கம் மொயின் அலியின் ஓவரில் ஒரு சிக்ஸரைப் பறக்கவிட்டார் ஸ்டாய்னிஸ். ஆனால், ஓவரின் கடைசிப்பந்தில் பாண்டியாவின் விக்கெட்டை கழட்டினார். இம்முறை தம் கட்டி அடித்தது, ஜடேஜாவின் கையில் சென்று விழுந்தது. சான்ட்னர் மீண்டும் வந்தார். வெறும் ஐந்து ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

தோனி, சேப்பாக்கம் மைதானட்தின் நட்ட நடுவில் நின்று, ஸ்பின்னர்களை வைத்து சிலந்த வலையை கட்டி முடித்திருந்தார். லக்னோ வீரர்கள் அதில் பொத்து பொத்தென விழுந்துக் கொண்டிருந்தார்கள்.

இப்போது, ஹங்கர்கேக்கரை பந்து வீச அழைத்தார் தோனி. சிக்ஸர் டும் டும்... பவுண்டரி டும் டும்... என பூரன் அடித்த அடியில் தெறித்து ஓடின பந்துகள். 15 ரன்கள் இந்த ஓவரில் மட்டும். இப்போது, மீண்டும் சான்ட்னர் வந்தார். 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். லேசாக ஓட்டை விழுந்த வலையை மீண்டும் மொயின் அலியை அழைத்துவந்து சரி செய்தார். 14வது ஓவரில், ஸ்டாய்ன்ஸின் விக்கெட்டை கழட்டினார் மொயின் அலி. ஸ்டெம்ப் தெறித்தது. 15வது ஓவரை வீசிய ஜடேஜாவுக்கு இரண்டு பவுண்டரிகளை பரிசளித்தார் பூரன். 15 ஓவர் முடிவில் 150/5 என தடுமாறியிருந்தது லக்னொ. 30 பந்துகளில் 68 ரன்கள் தேவை எனும் நிலை.

CSK vs LSG

துஷார் தேஷ்பாண்டேவை அழைத்தார். `நல்லாதான போய்ட்டு இருந்துச்சு' என சென்னை ரசிகர்கள் தலையில் கை வைத்தார்கள். ஆனால், அவர்கள் மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு ஆச்சரியமான முறையில் பந்து வீசினார் தேஷ்பாண்டே. கடைசி ஓவரில் பூரனின் விக்கெட்டையும் கழட்டியவர், 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். மேட்ச் மொத்தமாக சென்னையின் கைகளுக்குள் வந்தது. `அப்படி நடந்தா என்ன பாஸ் த்ரில் இருக்கு என பந்து வீசவந்தார் சஹார். தொடர்ந்து மூன்று அகலப்பந்துகள்.

பிறகு ஒரு சிக்ஸர். மொத்தம் 18 ரன்களை விட்டுக்கொடுத்து லக்னோ அணியினரை மனதார வாழ்த்திச் சென்றார் சஹார். மீண்டும் தேஷ்பாண்டே வந்தார். இப்போது, சென்னை ரசிகர்களுக்கு அவர் மீது சிறு நம்பிக்கை துளிர்த்திருந்தது. அந்த நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக தேஷ்பாண்டே வழங்கிய அதிசய பொருள், வெறும் 7 ரன்கள். ஹங்கர்கேக்கர், ஆட்டத்தின் முக்கியமான 19 ஓவரை வீசினார். கொடுத்தது என்னவோ 9 ரன்கள்தான். அதில் 3 அகலபந்துகள். 6 பந்துகளில் 28 ரன்கள் தேவை. மீண்டும் வந்தார் தேஷ்பாண்டே.

CSK

முதல் பந்தே அகலபந்து, அதற்கு மாற்றாக வீசிய பந்து நோ பால் என தொடங்கினார். சென்னை ரசிகர்கள் பிரஷர் மாத்திரையை தேடினார்கள். 3வது பந்தில் பதோனி, தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். கடைசி இரண்டு பந்துகளை பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் விரட்டியபோதும், 205 ரன்கள் மட்டுமே எடுத்தது லக்னோ அணி. ஆட்டத்தை 12 ரன்கள் வித்தியாசத்தி வென்று இந்த சீசனின் முதல் வெற்றியை பதிவு செய்து,

சேப்பாக்கம் தங்களது கோட்டை என மீண்டும் நிரூபித்தது சூப்பர் கிங்ஸ்.

26 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தி, 19 ரன்களும் எடுத்திருந்த மொயின் அலி, ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இனிய ஆரம்பம்...