dhoni, matheesha pathirana
dhoni, matheesha pathirana file image
T20

’எங்களுக்கு கிடைத்த திறமையான வீரர்’.. தோனியால் பட்டை தீட்டப்படும் பதிரானா - குஷியில் இலங்கை அணி!

Prakash J

ஐபிஎல் தொடர் வேகம் பிடித்து வரும் நிலையில், ஒவ்வோர் அணிகளும் புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களை இடம்பிடிப்பதற்காகப் போராடி வருகின்றன. அதற்காக அணி வீரர்களும், அணியினரும் போட்டிபோட்டு திறமையை நிரூபித்து வருகின்றனர். சில சமயங்களில் அணிக்காக ஒருசிலர் வீரர்கள் தங்கள் பங்களிப்பை அதிகம் செலுத்திவருகின்றனர். அந்த வகையில், நிறைய ஐபிஎல் வீரர்களை உதாரணமாகச் சொல்லலாம். அதில் ஒருவராக சென்னை அணியில் இடம்பிடித்திருக்கும் இலங்கை வீரர் மதிஷா பதிரானா உள்ளார். இவர், இலங்கையின் இன்னொரு மலிங்கா எனப் புகழப்படுகிறார்.

சென்னை அணியால் ரூ. 20 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்ட பதிரானா, கடந்த ஆண்டு ஐபிஎல் முதல் அவ்வணியில் விளையாடி வருகிறார். 2020 மற்றும் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற U19 உலகக்கோப்பை தொடர்களில் இலங்கை அணிக்காகச் சிறப்பாகச் செயல்பட்டவர், பதிரானா. குறிப்பாக, 19 வயதான அவர், 2022 U19 உலகக் கோப்பை தொடரில் 4 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்.

இவர், சென்னை அணியில் விளையாடுவது சிறப்பாகப் பார்க்கப்படுகிறது. அதிலும் கடந்த போட்டியில் இவர் சிறப்பாகப் பந்துவீசி சென்னை அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். கடந்த போட்டியில் சன் ரைசர்ஸ் அணி குறைவான ரன்களை எடுக்க, இவருடைய சிறப்பான பந்துவீச்சும் ஒரு காரணம்.

அதிலும் கடைசி ஓவரை வீசிய இவர், வெறும் 7 ரன்களை மட்டுமே வழங்கி, ரன் அவுட் மூலம் 1 விக்கெட்டையும் கைப்பற்றினார். மொத்தத்தில் 4 ஓவர்கள் வீசி 22 ரன்களை மட்டுமே வழங்கி 1 விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார்.

எப்போதுமே கடைசி பவர் பிளே ஓவர்களில் எந்த அணி வீரர்களும் பந்துவீச்சை அடித்து நொறுக்கத்தான் செய்வார்கள். அதிலும் முதல் இன்னிங்ஸ் என்றால் சொல்லவே வேண்டாம். ஆனால், அப்படியான சூழ்நிலையிலும் பதிரானா சிறப்பாகப் பந்துவீசி ரன்களை அதிகம் கொடுக்காமல் கட்டுப்படுத்தினார். இதன்மூலம் தோனி மனதில் மட்டுமல்ல, சென்னை அணி ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தார்.

Dhoni

இதுகுறித்து பேசிய மதிஷா பதிரானா, ”நான் வீசிய முதல் இரண்டு ஓவர்களில் 28 ரன்கள் விட்டுக் கொடுத்ததால் கடைசி ஓவரை வீச சற்று பதற்றமாக இருந்தேன். ஆனால், கேப்டன் தோனி, ’நிதானமாய் இரு; உன் திறமையில் நம்பிக்கை வைத்து பந்துவீசு; பயப்படாதே. கிரிக்கெட்டில் எதுவும் நடக்கும்’ என்றார். அதன்பிறகே சிறப்பாகப் பந்துவீசினேன்” எனத் தெரிவித்திருந்தார்.

பதிரானாவின் பந்துவீச்சு குறித்து கேப்டன் தோனி, “மதீஷா பதிரானா போன்ற ஒரு பந்துவீச்சாளரின் ஆக்சனை பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ள சற்று நேரம் பிடிக்கும். ஏனெனில், அவரிடம் நிறைய வேரியேஷங்கள் உள்ளன. அத்துடன் அவரிடம் நல்ல வேகமும் இருக்கிறது. இதற்கு முன்னதாக நாம் மலிங்காவை பார்த்திருக்கிறோம்.

MS Dhoni

அவரது வித்தியாசமான ஆக்சன் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சிக்கலை ஏற்படுத்தும். அதேபோன்று மதீஷா பதிரானா வித்தியாசமான ஆக்‌ஷனோடு நல்ல லைனில் வீசுகிறார். இப்படி அவர் தொடர்ச்சியாகச் சிறப்பாக பந்துவீசினால் அவரை எதிர்கொள்வது பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக அமையும். நிச்சயம் அவர் எங்களுக்குக் கிடைத்த நல்ல ஒரு திறமையான வீரர்” எனப் பாராட்டியிருந்தார்.

தோனி, ஏற்கெனவே கிரிக்கெட் உலகுக்குச் சிறப்பான வீரர்களைத் தரக்கூடியவர் என்ற பெயர் இருக்கிறது. அந்த வகையில் பதிரானாவை, தோனி வெளிப்படையாகவே பாராட்டியிருப்பது கிரிக்கெட் உலகில் பேசுபொருளாகி வருகிறது. இந்த நிலையில், பிரபல கிரிக்கெட் விமர்சகரான ஹர்ஷா போக்ளேவும் மதிஷாவைப் பாராட்டியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ”இலங்கை ரசிகர்களே... உங்களுக்காக ஒரு வைரத்தை தோனி பட்டை தீட்டிக் கொண்டிருக்கிறார். அவர், நிச்சயம் இலங்கை அணிக்காக மாபெரும் செயல்பாடுகளை வெளிப்படுத்துவார்; காத்திருங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.