matheesha pathirana
matheesha pathirana csk twitter page
T20

கடைசி பந்தை ஏன் ’யார்க்கர்’ ஆக வீசவில்லை பதிரானா? ரசிகர்களை புலம்ப வைத்த த்ரில் போட்டி!

Prakash J

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 41வது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மல்லுக்கட்டின. இதில் முதலில் பேட் செய்த சென்னை அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக டெவான் கான்வே ஆட்டமிழக்காமல் 52 பந்துகளில் 16 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 92 ரன்கள் எடுத்தார். பின்னர் 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், களமிறங்கிய பஞ்சாப் 20 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டிப்பிடித்ததுடன், அடுத்த சுற்றுக்கு முன்னேறும் நிலையில், சென்னை அணியுடனும் போட்டியில் உள்ளது.

குறிப்பாக, இன்றைய போட்டியில் 2வது இன்னிங்ஸை விளையாடிய பஞ்சாப் அணிக்கு, கடைசி 1 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. மற்ற 5 பந்துகளில் பவுண்டரியும், சிக்ஸரும் கொடுக்காமல் சிறப்பாகப் பந்துவீசி கட்டுக்குள் வைத்திருந்த மதீஷா பதிரானா, கடைசிப் பந்தையும் அருமையாக வீசி சென்னைக்கு வெற்றியைத் தேடித் தருவார் என கேப்டன் தோனி மட்டுமல்லாது, சென்னை ரசிகர்களும் நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.

MS Dhoni

ஆனால், அந்தப் பந்தை பதிரானா, ஸ்லோ பவுன்ஸாக வீச, அதை எதிர்கொண்ட சிக்கந்தர் ராசா ஸ்கொயர் லெக்கில் அடிக்க, அது எல்லைக் கோட்டை நோக்கி ஓடியது. அதைப் பிடிப்பதற்காக தீக்‌ஷனா எவ்வளவோ முயன்றும் தோற்றுவிட்டார். பந்து இறுதியில் பவுண்டரியைத் தொடுவதற்கு முன்பே, களத்தில் நின்ற இரு பேட்டர்களும் 3 ரன்கள் ஓடி வெற்றியைப் பெற்றுவிட்டனர். இதனால், தோனியின் நம்பிக்கையும் தகர்ந்தது; சென்னை ரசிகர்களும் இதயங்களும் சுக்குநூறாய் உடைந்தது.

இந்த தோல்வியைத் தாங்க முடியாத கிரிக்கெட் விமர்சகர்களும், ரசிகர்களும் பதிரானாவை, சமூக வலைதளங்களில் அன்பாக வறுத்தெடுக்க ஆரம்பித்தனர்.

”அந்த ஒரு பந்தை மட்டும் பதிரானா யார்க்கராக வீசி இருந்தால், வெற்றி சென்னை அணி திரும்பியிருக்கும். அவர், யார்க்கர் வீசாததே தோல்விக்குக் காரணம். இதுபோன்ற முக்கியமான போட்டிகளில் எல்லாம் பந்துவீச்சாளர்கள் ரன்கள் எடுக்க முடியாதபடி, விக்கெட்டைக் குறிவைத்து ’யார்க்கர்’தான் வீசுவர். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இலங்கை பந்துவீச்சாளர் மலிங்கா, கடைசிக்கட்டத்தில் எல்லா பந்துகளையும் யார்க்கராக வீசி, ரன்களைக் கட்டுப்படுத்துவதுடன் விக்கெட்டையும் எடுத்துவிடுவார். அவரைப்போலவே பந்துவீசும், அவர் மண்ணிலிருந்தே வந்திருக்கும் ’சின்ன மலிங்கா’ எனப் பெயரெடுத்திருக்கும் பதிரானா, இன்றைய போட்டியில் எல்லோரும் எதிர்பார்த்த கடைசிப் பந்தை யார்க்கராக வீசாததே தோல்விக்கு முக்கியக் காரணம்” என்கின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள்.