Dhoni Entry Decibel
Dhoni Entry Decibel Twitter
T20

விமான சத்தத்தை மிஞ்சிய தோனிக்கான கோஷங்கள்! அதிர்ச்சியூட்டும் டெசிபல் அளவு!

Rishan Vengai

2023 ஐபிஎல்லை பொறுத்தவரை பல சுவாரசியமான நிகழ்வுகள் நடந்திருந்தாலும், இன்னும் இறுதிப்போட்டி வரையிலும் தொடர்ந்துவரும் ஒரேயொரு ஆச்சரியமான விசயம் என்னவென்றால் அது தோனிக்காக எழுப்பப்படும் ஆதரவு கோஷங்கள் தான். இது வெறும் சிஎஸ்கே அணிக்கான ஆதரவு மட்டும் தான் என்று சொல்லிவிட முடியாது, மாறாக தோனி எந்த ஒரு ஆடுகளத்திற்கு சென்றாலும் அங்கும் அதிகளவிலான ஆதரவை பெற்றுவருகிறார்.

தோனிக்கான ஆதரவு குரல் என்று சொல்வதை விட, அவருக்காக எழுப்பப்படும் சத்தத்தின் டெசிபல் அளவானது காதை பிளக்கும் அளவிற்கு இருந்துவருகிறது. அதிரும் சத்தத்தின் அளவானது இந்திய ரசிகர்கள் தோனியை எந்தளவு விரும்புகிறார்கள் என்பதற்கு ஒரு சாட்சியாக இருந்துவருகிறது. அதுவும் சென்னை சேப்பாக்கம் அளவிற்கு ஈடாக டெல்லி மற்றும் லக்னோ ஆடுகளத்தில் கிடைக்கப்பட்ட ஆதரவு கோஷங்களானது, 117 மற்றும் 120 டெசிபல் அளவை எட்டியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதை பிளக்கும் தோனியின் டெசிபல் அளவுகள்!

2023 ஐபிஎல் தொடரின் ஒவ்வோரு போட்டியிலும் தோனி பேசும் போதோ அல்லது களத்திற்கு பேட்டிங் செய்ய வரும்போதோ எழுப்பப்பட்ட சத்தத்தின் டெசிபல் அளவானது, காதுகள் பாவமில்லையா என்னும் அளவிற்கு மிகவும் அதிகமான அளவில் பதிவாகியுள்ளது.

MS Dhoni

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டிருக்கும் தரவின் படி, இந்த ஐபிஎல் தொடரில் பதிவான தோனியின் டெசிபல் அளவுகள், 112, 120, 117, 115, 115, 112, 112, 112, 117, 112, 117, 120, 115, 120" என அதிகளவில் பதிவாகியுள்ளது.

விமானத்தின் சத்தத்தை மிஞ்சிய தோனியின் டெசிபல் அளவுகள்!

தோனிக்கான சத்தமானது 3 முறை 120 டெசிபல் வரையிலும், 3 முறை 117 டெசிபல் வரையிலும் பதிவாகியுள்ள நிலையில், அது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் அளவிற்கு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த டெசிபலானது விமான சத்தத்தின் அளவைவிட அதிகமாகவும், 100 டெசிபல் வரை வெளிப்படுத்தும் விமான தாங்கி கப்பலின் சத்தத்தை மிஞ்சியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு விமானத்தின் சத்தமானது புறப்படுவதற்கு முன் 60-65 டெசிபலாகவும், பறக்கும் போது 80-85 டெசிபலாகவும், தரையிறங்கும் போது 75-80 டெசிபலாகவும் பதிவாகிறது. மற்ற விமானங்களின் அளவானது, அந்தந்த திறனுக்கு ஏற்ப மாறுபடும்.

Flight

மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு சாதரண கேட்கும் திறனானது 30 டெசிபல், வழக்கமான பேச்சு 60 டெசிபலாக இருந்துவருகிறது. இந்நிலையில் 70 டெசிபல்களுக்கு மேல் கேட்கப்படும் அதிகளவிலான சத்தமானது, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு செவித்திறனை சேதப்படுத்துகிறது. ஆனால் 120 டெசிபல் மற்றும் அதற்கு மேலான அதிக சத்தமானது காதுகளை உடனடியாகவே சேதப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உடனடி நடவடிக்கையாக பின்பற்றப்படுவது, 80 டெசிபல்களுக்கு மேல் கேட்கும் ஒலியை எந்தநிலையிலும் பரிந்துரைக்காமல் இருப்பது தான்.

CSK

இந்நிலையில், தோனிக்காக எழுப்பப்படும் சத்தமானது, மனித காதுகளுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இருந்தாலும், தல தோனிக்காக எழுப்பப்படும் கர்ஜனைகளும், உணர்ச்சிமிக்க ஆரவாரங்களும் ஆரோக்கியமற்ற ஒரு சத்தம் என்று அழைத்தால் அவருடைய ரசிகர்கள் மிகவும் வேதனை படுவார்கள்.

பேச்சாளர் பேசுவது கேட்காமல் ஸ்பீக்கரின் சத்தத்தை அதிகரித்த தோனி!

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் ரசிகர்களின் சத்தமானது இதுவரை இல்லாத அளவு 120 டெசிபலாக பதிவானது. அப்போது போட்டி முடிவுக்கு பின்னர் தோனி நேர்காணல் கொடுத்தார். அப்போது தொகுப்பாளர் பேசுவது கேட்காததால், ஸ்பீக்கரின் சத்தத்தை தோனியே அதிகரித்தார்.

அதுமட்டுமல்லாமல் டெல்லிக்கு எதிரான போட்டியில் ரசிகர்களின் சத்தத்திற்கு இடையில், பேசமுடியாமல் தொகுப்பாளர் வெறும் சைகையில் பேட்டிங்கா பவுலிங்கா என்று கேட்க, தோனியும் பேட்டிங் என சைகையிலேயே காமித்தார்.

இன்னொரு போட்டியில் தோனி களத்திற்கு பேட்டிங் செய்ய உள்ளே வரும் போது, மீண்டும் 120 டெசிபலாக சத்தம் பதிவானது.