பல அவமானங்கள், விமர்சனங்களைக் கடந்து ஒரு வழியாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. 18 வருட கனவு நிறைவேறி கோப்பை கைகளில் தவழும் நேரத்தில் வெற்றிக் கொண்டாட்டமானது முழுமையாக 24 மணி நேரம் கூட நீடிக்கவில்லை.. இத்தனை வருட காத்திருப்புக்குப் பிறகு கிடைத்த வெற்றி கூடவே துயரத்தையும் நினைவுபடுத்துமென்று ஆர்சிபி ரசிகர்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.
முறையான பாதுகாப்போடு திட்டமிட்டு சரியாக நடத்தி இருந்தால் 11 அப்பாவி ரசிகர்களின் உயிர்கள் பலியாகி இருக்காது.
உயிரிழந்தவர்கள் அனைவருமே இளம் வயதினர்தான். எவ்வளவோ ஆசையாக கொண்டாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அவர்கள் வந்திருப்பார்கள். ஆனால், சில மணி நேரங்களில் கொண்டாட்ட களமே மயானம் போல் ஆகிவிட்டது.
இந்த சோக நிகழ்வுக்கு யார் பொறுப்பேற்பது என்ற விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. துணை முதல்வர் டிகே சிவக்குமார் உடனடியாக மன்னிப்புக் கேட்டார். நாங்கள் இதை நியாயப்படுத்த விரும்பவில்லை, இது நடந்திருக்கவே கூடாது என்று முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.
ஆனால், ஆளும் காங்கிரஸ் கட்சியை பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் காட்டமாக விமர்சித்து வருகிறார்கள்.
நிச்சயம், ஆர்சிபி நிர்வாகம் மற்றும் பெங்களூர் நகர நிர்வாகம் (அரசு தரப்பு) என இருதரப்பினரும் இதில் பொறுப்பேற்றே ஆக வேண்டும். இருப்பினும், குறிப்பிட்ட அந்த நேரத்தில் யார் சரியான முடிவு எடுக்கவில்லை என்பதை விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
நீதிமன்றத்திலும் தற்போது இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. நீதிமன்றமும் அரசு மற்றும் கிரிக்கெட் நிர்வாகிகளுக்கு கேள்வி எழுப்பி விளக்கம் கேட்டுள்ளது. கர்நாடக அரசும் பலர் மீது வழக்குப் பதிவு செய்ததோடு பெங்களூரு காவல்துறையினர் பலர் மீது நடவடிக்கையும் எடுத்துள்ளது.
இத்தகைய சூழலில்தான் இன்று காலை முதலே எக்ஸ் தளத்தில் #arrestviratkohli என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டில் இருந்து வருகிறது. அதில் வரும் படங்களையும், கருத்துக்களையும் ஆர்சிபி நிர்வாகத்தினர் பார்க்க நேர்ந்தால் நிச்சயம் மனம் நொந்துபோவார்கள். கோப்பை வென்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியாததோடு இப்படியான ஒரு துயரத்திற்கான பழியையும் சுமக்க வேண்டிய நிலை வந்துவிட்டதே என்று அவர்கள் வேதனைப்படுவார்கள். ஆனால், இந்த ஹேஷ்டேக்கில் இருக்கும் பதிவுகள் பல திட்டமிட்ட ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. விராட் கோலி மீதுள்ள ஏதோ ஒரு வன்மத்தில் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அவர்கள் ஐடிக்களை சோதித்து பார்த்தாலே அது புரிகிறது.
நிச்சயம் தவறு நடந்திருக்கிறதுதான். ஆனால், விராட் கோலியை அதற்கு பொறுப்பேற்க சொல்வது முற்றிலும் நியாயமற்ற ஒன்று. எல்லா வீரர்களை போலவே அவரும் வெற்றியை கொண்டாடவே நினைத்திருப்பார். ஆனால், ஆர்சிபி அணி நிர்வாகம் மற்றும் பெங்களூரு நிர்வாகத்தினர் செய்த தவறுகளுக்காக எப்படி விராட் கோலி மேல் முழு குற்றத்தையும் சுமத்துவது.
ஜூன் 3 ஆம் தேதி இரவு 11 மணியளவில் ஆர்சிபி அணி பஞ்சாப்பை வீழ்த்தி கோப்பையை உறுதி செய்கிறது. கோப்பை வென்ற அடுத்த நொடியில் இருந்தே கர்நாடக மாநிலம் முழுவதும் வெற்றி கொண்டாட்டம் களைகட்டியது. பெங்களூரு நகரை சொல்லவே வேண்டாம். அவ்வளவு கூட்டம். பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி வாழ்த்துகள் சொல்லி ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் மூழ்கி திளைத்தார்கள். கிட்டத்தட்ட விடியும் வரை இந்த கொண்டாட்டம் பல இடங்களில் நீடித்தது. அன்று விடியும் பொழுதே பெங்களூரு போலீசார் நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்பு பணியில் இருந்தார்கள். இப்படி இருக்கையில், புதன்கிழமை மதியம் ஆர்சிபி அணி பெங்களூரு வந்தடைந்தது.
வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பெங்களூருவில் திறந்தவெளிப் பேருந்தில் அவ்வணி வீரர்கள் வெற்றி பேரணி நடத்த திட்டமிட்டனர். அந்தப் பேரணி விதான சவுதாவில் தொடங்கி, சின்னசாமி மைதானத்தில் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் கட்டுக்கடங்காத கூட்டத்தின் காரணமாக பெங்களூரு போலீசார் அதற்கு அனுமதி மறுத்துவிட்டனர். இருப்பினும், மாலை 6 மணியளவில் சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வு நடப்பதற்கு முன்பாகவே நிலைமை கைமீறிபோய்விட்டது. 4 மணிக்கெல்லாம் கூட்டநெரிசலில் சிக்கி பலர் மயக்கமடைந்தனர். இத்தகைய சூழலில் இந்த நிகழ்வு நிச்சயம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சில நிமிடங்களிலேயே அவர்கள் நிகழ்வை முடித்திருந்தாலும் அதற்குள்ளாக பல உயிர்கள் பலியாகிவிட்டது.
இருவகையான தகவல்கள் இந்த விவகாரத்தில் வெளியாகி வருகிறது. கர்நாடக காவல்துறை தரப்பில், ‘இப்பொழுது வேண்டாம்.. வார இறுதியில் கொண்டாட்ட நிகழ்வை வைத்துக் கொள்ளலாம்’ என்று கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் பெங்களூரு அணி நிர்வாகம் சார்பில் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே நிகழ்வு அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கு பெரிய சிக்கல் என்னவென்றால் நகரின் பல்வேறு நகரங்களில் விடிய விடிய நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த நிலையில் உடனே பாதுகாப்பு ஏற்பாடு செய்வது என்பது மிகவும் சிக்கலான விஷயம். இதனை புரிந்து கொள்ளாமல் நடந்ததே இந்த துயரம்.
அதேபோல், ஆர்சிபி அணியின் வெற்றியில் கர்நாடக அரசு ஒரு கிரிடிட் எடுத்துக் கொள்ள விரும்பியதாகவே தெரிகிறது. அதனால்தான் துணை முதல்வர் கர்நாடக கொடியுடன் சென்று ஆர்சிபி வீரர்களை வரவேற்றார். ஆனால், நிலைமை கைமீறி போன பிறகும் அவர்களால் உறுதியாக முடிவை எடுக்க முடியாமல் போனது தவறுதான்.
இதில் விராட் கோலியை மட்டும் குறிவைத்து தாக்குவது நிச்சயம் திட்டமிட்ட வன்மமாகவே தெரிகிறது. குறிப்பாக இந்துத்துவா ஆதரவாளர்கள் பலர் விராட் கோலி மீது திட்டமிட்டு தாக்கி பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். இது உண்மையில் தவிர்க்க வேண்டிய விஷயம். இந்திய அணிக்காக சாதனைகள் பல செய்த வீரர்கள் கொச்சைப்படுத்துவது ஏற்க முடியாது.