ipl 2025 update web
T20

சென்னைக்கு வருகிறது IPL.. மீதி போட்டிகளை நடத்த BCCI திட்டம்! 3 மைதானங்கள் தேர்வு?

இந்தியா - பாகிஸ்தான் இரண்டு நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் நடத்த பிசிசிஐ முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rishan Vengai

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், இந்தியா தாக்குதலைத் தொடங்கி பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம், இந்தியா மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை வீசிப் நேற்று இரவு முதல் போரைத் தொடங்கியது. இதையடுத்து, இந்தியா அதற்குத் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருவதுடன், பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் ட்ரோன்களை வழிமறித்து தகர்த்து வருகிறது.

IPL 2025 Captains

இந்த நிலையில் போர் காரணமாக இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒரு வாரத்திற்கு தள்ளிவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்த சூழலில் மீண்டும் போட்டிகளை நடத்திமுடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீதி போட்டிகளை 3 மைதானங்களில் நடத்த திட்டம்..

18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர், கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 58 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இதில் தர்மசாலாவில் டெல்லி மற்றும் பஞ்சாப் இடையே நடைபெற்ற 58வது போட்டி, பாதியிலேயே ரத்து செய்யப்பட்டு, வீரர்களும் ஊழியர்களும், ரசிகர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த சூழலில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக ஒரு வாரத்திற்கு ஐபிஎல் போட்டிகள் நிறுத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. மேலும் இந்திய ராணுவத்திற்கு துணை நிற்பதாகவும் தெரிவித்தது.

ஆனால் அடுத்த மாதம் இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்குவதோடு, அடுத்தடுத்து பல சர்வதேச தொடர்கள் இருப்பதால் ஐபிஎல்லை பல சூப்பர் ஸ்டார் வீரர்கள் தவறவிடுவார்கள் என்பதால் இந்த மாதம் இறுதிக்குள் தொடரை முடிக்கவேண்டிய கட்டாயம் பிசிசிஐக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில் தற்போது வெளியாகியிருக்கும் தகவலின் படி, ஒருவாரத்தில் மீண்டும் ஐபிஎல் தொடர் தொடங்கிவிடும் என்றும், எனவே அதற்கு தயாராக இருக்குமாறு அனைத்து அணிகளுக்கும் பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஐபிஎல் தொடர் ஒருவாரத்தில் தொடங்கும் பட்சத்தில், ஒருநாளைக்கு 2 போட்டிகள் நடத்தப்பட அதிக வாய்ப்பிருப்பதாகவும், பெங்களூரு,
சென்னை, ஹைதராபாத் முதலிய 3 மைதானங்களில் போட்டிகள் நடைபெற வாய்ப்பிருப்பதாகவும்
கிறிக்இன்ஃபோ செய்தி வெளியிட்டுள்ளது.