பாகிஸ்தானின் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், இந்தியா தாக்குதலைத் தொடங்கி பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது.
இதற்கு பாகிஸ்தான் ராணுவமும், இந்தியா மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை வீசி எதிர்தாக்குதலை தொடங்கியது. இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் உருவாகுமோ என்ற பதற்றமா சூழல் ஏற்பட்டது.
இதன்காரணமாக மே 8-ம் தேதி தர்மசாலாவில் நடைபெற்றுகொண்டிருந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியானது அசாதாரண சூழல் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது.
மேலும் ஐபிஎல் தொடரானது ஒருவாரம் தள்ளிப்போவதாகவும், இந்திய ராணுவத்திற்கு பிசிசிஐ துணைநிற்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள், மே 17-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படும் என்றும், இறுதிப்போட்டி ஜுன் 3-ம் தேதி நடத்தப்படும் எனவும் ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது.
அறிவிப்பின்படி, மீதமுள்ள மொத்தம் 17 போட்டிகள் 6 மைதானங்களில் நடைபெறும், மே 17, 2025 அன்று தொடங்கி ஜூன் 3, 2025 அன்று இறுதிப் போட்டியுடன் முடிவடையும். பிளேஆஃப்கள் போட்டிகளானது ‘ தகுதிச் சுற்று 1 - மே 29, எலிமினேட்டர் - மே 30, தகுதிச் சுற்று 2 - ஜூன் 1, இறுதி போட்டி - ஜூன் 3’ முதலிய தேதிகளில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் நாட்கள் தள்ளிப்போனதால் சர்வதேச போட்டிகள் காரணமாகவும், உடல் காயம் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக பல வெளிநாட்டு வீரர்கள் மீண்டும் இந்தியாவிற்கு திரும்ப முடியாமல் இருந்துவருகின்றனர். இதனால் ஒவ்வொரு ஐபிஎல் அணிகளும் அவர்களுடைய முக்கியமான வெளிநாட்டு வீரர்களை தவறவிடுவார்கள் என்பதால், தற்காலிக வீரர்களை இணைத்துக்கொள்ள ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ அனுமதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து கிறிக்பஸ் வெளியிட்டிருக்கும் செய்தியில், “மீதமிருக்கும் 2025 ஐபிஎல் போட்டிகளில் விளையாட வெளிநாட்டு வீரர்கள் கிடைக்கமாட்டார்கள் என்பதால் தற்காலிகமாக மாற்று வீரர்களை இணைக்க ஐபிஎல் அணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இணைக்கப்படும் வீரர்கள், நடப்பு ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாட அனுமதிக்கப்படுவார்கள். 2026 ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாட அனுமதிக்கப்பட மாட்டார்கள், மீண்டும் ஐபிஎல் ஏலத்திற்கு சென்றுதான் அந்த வீரர்கள் விளையாட முடியும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.