ashwin csk web
T20

’CSK-ஐ விட்டு வெளியேறுங்கள் அஸ்வின்..’ - ரசிகர் கருத்துக்கு வருத்தமாக பேசிய அஸ்வின்!

2025 ஐபிஎல் தொடரில் மோசமான செயல்திறனை வெளிப்படுத்திய சிஎஸ்கே அணி, ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக கடைசி இடத்தில் முடித்தது.

Rishan Vengai

விளையாடிய 16 ஐபிஎல் சீசன்களில் 12 முறை பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 10 முறை ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாடி 5 முறை கோப்பையும் வென்று அசத்தியுள்ளது.

இப்படி ஐபிஎல் கிரிக்கெட்டின் ஜாம்பவான் அணியாக வலம்வரும் சிஎஸ்கே, 2025 ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. 16 வருட ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணி 10வது இடத்தில் முடித்தது இதுவே முதல்முறை.

ராகுல் திரிபாதி

இந்த கடினமான சூழலில் சிஎஸ்கே அணியில் சரியாக விளையாடாத தீபக் ஹூடா, ராகுல் திரிப்பாத்தி, அஸ்வின் முதலிய வீரர்கள் மீது ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்திவருகின்றனர்.

அந்தவகையில் ’சிஎஸ்கே அணியை விட்டு வெளியேறுங்கள் அஸ்வின்’ என்று கருத்திட்ட ரசிகருக்கு வருத்தமாக பதிலளித்துள்ளார் சென்னை அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்.

உங்களைவிட 100% அதிகமாக வருந்துகிறேன்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2025 மெகா ஐபிஎல் ஏலத்தில் அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு விலைக்கு வாங்கியது. சிஎஸ்கே கோப்பை வென்ற சீசன்களில் முக்கியமான வீரராக இருந்த அஸ்வின், மீண்டும் அணிக்கு திரும்பி அவருடைய அனுபவத்தைப் பயன்படுத்தி சிறப்பாக செயல்படுவார் என்ற எதிர்ப்பார்ப்பு எல்லோருக்கும் இருந்தது.

ஆனால் அஸ்வின் விளையாடிய 9 போட்டிகளில் 40.42 சராசரியுடன் வெறும் 7 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். மேலும் பவர்பிளேவில் பந்துவீசும்போது இடதுகை வீரர்களுக்கு எதிராக கூட அதிகப்படியான ரன்களுக்கு சென்றார். இந்த ஆண்டு சிஎஸ்கே அணி மோசமான செயல்படுவதற்கு மிடில் ஆர்டரில் சிறப்பாக பந்துவீசாத அஸ்வின் ஒரு காரணம் என்று கூறினால் பொய்யாகாது.

இப்படியான சூழலில் அஸ்வினின் யூடியூப் சேனல் வீடியோ ஒன்றில் கருத்திட்ட சென்னை ரசிகர் ஒருவர், “டியர் அஸ்வின் அண்ணா, எங்களுடைய அன்பான சிஎஸ்கே அணியை விட்டு வெளியேறுங்கள்” என்று கூறியிருந்தார்.

ashwin csk

இதற்கு வருத்தமாக பேசிய அஸ்வின், “நீங்கள் சிஎஸ்கே அணி மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறீர்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் உங்களை விட 100 மடங்கு அணியை நான் அதிகமாக நேசிக்கிறேன். உங்களுக்கு எப்படி வருத்தம் இருக்கிறதோ, அதேபோல தான் ஒரு சாம்பியன் அணி மோசமாக முடித்ததை பார்க்க எனக்கும் வருத்தமாக இருக்கிறது. 2009, 2010 என அணி கடினமான சீசன்களை கொண்டிருந்தபோதும் நான் அணியில் இருந்தேன், கோப்பை வென்றபோதும் அணியில் இருந்தேன்.

உங்களுக்கு மட்டும்தான் வருத்தம் இருக்கிறது, விளையாடிய வீரர்கள் எல்லோரும் வருத்தமே படாமல் அணியில் ஜாலியாக இருக்கிறார்கள் என்று நினைக்காதீர்கள். இங்கு எல்லோருக்கும் வருத்தம் இருக்கிறது, அதற்காக ஒரு மூலையில் உக்கார்ந்து அழுதுகொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அடுத்து உங்களை எப்படி தயார் செய்யவேண்டும், அணிக்காக சிறந்ததை எப்படி கொடுக்க வேண்டும் என்பதை மட்டுமே யோசிக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.