Arjun Tendulkar  PTI
T20

'நானும் அப்பாவும் கிரிக்கெட் குறித்து நிறைய பேசுவோம்' - அர்ஜூன் டெண்டுல்கர் நெகிழ்ச்சி

கடைசி ஓவரை வீசிய அர்ஜூன் டெண்டுல்கர், மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

Justindurai S

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி. இப்போட்டியில் மும்பை அணியின் இளம் வீரரும், சச்சின் மகனுமான அர்ஜுன் டெண்டுல்கர் முதல் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். போட்டியில் 2.5 ஓவர்களை வீசிய அர்ஜுன் டெண்டுல்கர், 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். அதில் 9 டாட் பால்களும் அடங்கும்.

Arjun Tendulkar | Sachin Tendulkar

6 பந்துகளில் 20 ரன் தேவைப்பட்ட நிலையில் 20வது ஓவரை வீசிய அர்ஜூன் டெண்டுல்கர், மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியை உறுதி செய்தார். கடைசி ஓவரில் புவனேஷ்வர் குமாரின் விக்கெட்டை அர்ஜுன் வீழ்த்தியபோது, மும்பை அணியின் டிரஸ்ஸிங் அறையில் அவரது தந்தையும் கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் இருந்தார்.

வெற்றிக்குப் பின் பேசிய அர்ஜூன் டெண்டுல்கர் ” ஐபிஎல் முதல் விக்கெட்டை பெற்றது மிகவும் சிறப்பாக இருக்கிறது. நான் என் கையில் இருப்பதைக் கொண்டு திட்டத்தை செயல்படுத்துவதில் கவனம் செலுத்த நினைத்தேன். எங்களுடைய திட்டம் பந்தை வைடாக வீசி மைதானத்தின் நீளமான பக்கத்திற்கு பேட்ஸ்மேனை அடிக்கச் செய்வது ஆகும். நான் பந்து வீசுவதை விரும்புகிறேன்.

Arjun Tendulkar | Sachin Tendulkar

கேப்டன் ஆட்டத்தின் எந்தப் பகுதியில் பந்த வீச அழைத்தாலும் நான் அதை ஏற்று திட்டத்திற்கு தகுந்தாற்போல் பந்த வீச விரும்புகிறேன். நானும் எனது தந்தையும் கிரிக்கெட் குறித்து நிறைய பேசுவோம். அதேபோல் ஆட்டத்திற்கு முன்பு என்ன மாதிரி உத்திகளை கையாளலாம் என்று விவாதிப்போம். மேலும் ஒவ்வொரு போட்டிக்கும் முன்பாக நான் எதில் பயிற்சி செய்ய வேண்டும் என்று அவர் எனக்கு கூறுவார். நான் பந்தை ரிலீஸ் செய்வதிலும், மற்றும் சரியான லைன் லென்தில் வீசுவதிலும் கவனம் செலுத்தினேன்'' என்றார்.