rcb, ambati rayudu
rcb, ambati rayudu twitter
T20

“16 ஆண்டுகளாக RCB தோற்பதற்கு இதுதான் காரணம்” - அம்பத்தி ராயுடு

Prakash J

நாடாளுமன்றத் தேர்தல் ஒருபுறமிருக்க, மறுபுறம் ஐபிஎல் தொடரும் ரசிகர்களுக்கு விருந்து படைத்துவருகிறது. கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றுவரை (ஏப்ரல் 3) 16 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இதில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் தாம் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. 3வது இடத்தில் சென்னை அணி உள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ்

இந்த நிலையில் ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 3 தோல்வி, 1 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.

அதில் கடைசியாக லக்னோவுக்கு எதிரான போட்டியில் 182 ரன்களை இலக்காக கொண்டு சேசிங் செய்த பெங்களூருவுக்கு விராட் கோலி, கேப்டன் டு பிளிஸ்சிஸ், கேமரூன் க்ரீன், கிளன் மேக்ஸ்வெல் போன்ற நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தைக் கொடுத்தனர். இதனால் பெங்களூரு அணி, அந்த போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதையடுத்து அந்த அணி மீது கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது.

இதையும் படிக்க: அரவிந்த் கெஜ்ரிவாலின் ஐபோன் பாஸ்வேர்டு கேட்ட அமலாக்கத்துறை - கைவிரித்த ஆப்பிள் நிர்வாகம்!

இதுகுறித்து தற்போது பேசியுள்ள சென்னை அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு, “ஆர்சிபி அணியின் பந்துவீச்சாளர்கள் எப்போதுமே குறிப்பிட்ட அளவினைவிட அதிகமாக ரன்களை வாரி வழங்குகிறார்கள். பேட்டர்களும் குறைவான ரன்களையே அடிக்கிறார்கள். அழுத்தமான நேரங்களில் அந்த அணியில் யார் பேட்டிங் செய்கிறார்கள்? இளம் இந்திய வீரர்களும் தினேஷ் கார்த்திக்கும்தான்!

இந்த ஐபிஎல் தொடரில், ஆர்.சி.பி அணியின் சர்வதேச வீரர்கள் அனைவரும் டிரெஸ்ஸிங் ரூமில் இருக்கிறார்கள். மஹிபால் லோம்ரோர் இம்பேக்ட் வீரராக களமிறங்கி 230 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடுகிறார்.

தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தினால்தான் ஒரு போட்டியாவது ஆர்சிபி வென்றிருக்கிறது. பவர்பிளேவில் எளிதாக ரன்களை அடிக்க முடியும். மூத்த வீரர்கள் அங்கு களமிறங்கி ரன்களை அடிப்பதொன்றும் பெரிய விஷயமில்லை. அது எளிதானது.

கேக்கின் மீதிருக்கும் கிரீமினை டாப் ஆர்டர்கள் சுவைத்துவிட்டு மீதியை இளம் வீரர்களுக்கு அளிப்பதனாலயே ஆர்சிபி அணி இதுவரை கோப்பையை வெல்லவில்லை. இப்படியே இருந்தால் இனியும் அந்த அணி வெற்றி பெறாது.

இது இன்று மட்டும் நடக்கவில்லை. பதினாறு ஆண்டுகளாக ஆர்.சி.பி அணியின் கதை இதுதான்” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதையும் படிக்க: RSS, சங்பரிவார், பாஜக நிர்வாகிகளுக்குச் சொந்தமான 62% சைனிக் பள்ளிகள்.. RTI மூலம் வெளியான தகவல்!