ஐபிஎல்லின் 10 அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஒன்றாக உள்ளது. இவ்வணி கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடப்புத் தொடரின்போது கோப்பையை முதல்முறையாகக் கைப்பற்றி உச்சி முகர்ந்தது. இந்தச் சூழலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாளும் இவ்வணியில் இடம்பிடித்துள்ளார். இவர் மீது, பெண் ஒருவர் திருமண மோசடிப் புகார் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த அந்தப் பெண், முதலமைச்சரின் ஆன்லைன் குறை தீர்க்கும் போர்டல், ஐஜிஆர்எஸ் மூலம் புகார் அளித்திருந்தார்.
அந்தப் பெண் தனது புகாரில், கடந்த ஐந்து ஆண்டுகளாக கிரிக்கெட் வீரருடன் உறவில் இருந்ததாகவும், அப்போது தான் மனரீதியாகவும், உடலரீதியாகவும் சுரண்டப்பட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். காவல் துறை இந்த வழக்கைச் சரியாகக் கையாளாத காரணத்தினாலேயே அவர் முதல்வரின் தனிப் பிரிவை நாடியதாகக் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரின் தனிப்பிரிவு உத்தரவிட்டது.
இதையடுத்து, கடந்த ஜூலை 6ஆம் தேதி காஜியாபாத் மாவட்டத்தில் உள்ள இந்திராபுரம் காவல் நிலையத்தில் யாஷ் தயாள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை யாஷ் மறுத்துள்ளார். மேலும், அவருடைய புகாருக்கு யாஷ் அளித்துள்ள பதில் புகாரில், ”அந்தப் பெண் தனது ஐபோன் மற்றும் மடிக்கணினியைத் திருடி, பொய்யான சாக்குப்போக்கின்கீழ் தன்னிடமிருந்து பணம் கடன் வாங்கியுள்ளார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார். மேலும், தன்னைக் கைது செய்வதைத் தடுத்து நிறுத்தவும், தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரை ரத்து செய்யவும் யாஷ் தயாள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சித்தார்த்த வர்மா மற்றும் நீதிபதி அனில் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “உங்களை ஒரு நாள், 2 நாள், 3 நாள் ஏமாற்றியிருக்கலாம். ஆனால் 5 வருடங்களாக ஏமாற்ற முடியாது. நீங்கள் 5 வருடங்களாக ஓர் உறவில் நுழைகிறீர்கள் என்றால், அவரை 5 வருடங்கள் ஏமாற்ற முடியாது" என கருத்து தெரிவித்த அவர்கள், கிரிக்கெட் வீரர் யாஷ் தயாளைக் கைது செய்யத் தடை விதித்தனர்.