2024 சையத் முஷ்டாக் அலி டிரோபியானது நவம்பர் 23 முதல் தொடங்கி டிசம்பர் 15 வரை நடைபெறுகிறது. பரபரப்பாக நடந்துவரும் தொடரில் 38 அணிகள் கோப்பைக்காக போட்டிப்போட்ட நிலையில், தொடரானது காலிறுதிப்போட்டிகளை எட்டியுள்ளது.
இதுவரை 38 அணிகளிலிருந்து மத்திய பிரதேசம், சௌராஷ்டிரா, பெங்கால், பரோடா, மும்பை, விதர்பா, டெல்லி, உத்தரபிரதேசம் ஆகிய 8 அணிகள் காலிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன.
இந்நிலையில், 4 காலிறுதி ஆட்டங்கள் இன்று நடந்துவருகிறது. இதில் நடந்துமுடிந்துள்ள 3 காலிறுதி போட்டிகளில், சௌராஷ்டிராவை வீழ்த்தி மத்திய பிரதேச அணியும், பெங்காலை வீழ்த்தி பரோடா அணியும், விதர்பா அணியை வீழ்த்தி மும்பை அணியும் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன.
கடைசி காலிறுதி ஆட்டமானது டெல்லி மற்றும் உத்தரபிரதேச அணிகளுக்கு இடையே நடைபெற்றுவருகிறது.
இன்று நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி தொடரின் காலிறுதி போட்டி ஒன்றில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பையும், ஜிதேஷ் சர்மா தலைமையிலான விதர்பா அணியும் பலப்பரீட்சை நடத்தின.
பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த விதர்பா அணி அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 221 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அதர்வா தைதே 66 ரன்கள் குவித்தார்.
222 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரஹானே மற்றும் பிரித்வி ஷா இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 7 ஓவரில் 83 ரன்கள் சேர்த்தனர். 5 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என துவம்சம் செய்த பிரித்விஷா 26 பந்துக்கு 49 ரன்கள் விளாசி நல்ல அடித்தளத்தை அமைத்து வெளியேறினார்.
அதற்குபிறகு தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்திய அஜிங்கியா ராஹானே 10 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 84 ரன்கள் சேர்த்து அணியை வெற்றியின் அருகில் அழைத்துச்சென்றார்.
இறுதியாக வந்து அதிரடி காட்டிய சூர்யன்ஷ் ஷெட்ஜ் 38 ரன்கள், ஷிவம் துபே 37 ரன்கள் என மிரட்ட 19.2 ஓவரில் 224 ரன்கள் குவித்த மும்பை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரவெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது.
டிசம்பர் 13ம் தேதி நடைபெறவிருக்கும் முதல் அரையிறுதியில் ஹர்திக் பாண்டியாவின் பரோடா அணியை, ஸ்ரேயாஸ் ஐயரின் மும்பை அணி எதிர்கொள்ளவிருக்கிறது.