yash dayal,ms dhoni
yash dayal,ms dhoni PT Desk
T20

’ஒரு போட்டியிலேவா’ - துஷார் தேஷ்பாண்டேவுக்கு தோனி செய்ததை யாஷ் தயாளுக்கு ஏன் பாண்ட்யா செய்யவில்லை?

Prakash J

நடப்பு ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான 13வது லீக் போட்டியின் கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 5 சிக்ஸர்களை பறக்கவிட்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வெற்றிபெறச் செய்ததுடன், ஒரேநாளில் ஹீரோவாகவும் ஜொலிக்கத் தொடங்கினார் ரிங்கு சிங். ஆனால் அதே சமயம், துரதிஷ்டவசமாக 5 சிக்ஸர்களை கொடுத்து மோசமான சாதனை படைத்து வெற்றியை தாரை வார்த்த யாஷ் தயாளை குஜராத் டைட்டன்ஸ் ரசிகர்கள் வருத்தத்துடன் விமர்சித்தனர்.

அதேநேரத்தில், ’இதைப் பற்றி கவலைப்படாமல் நிச்சயமாக உங்களால் கம்பேக் கொடுக்க முடியும்’ என கொல்கத்தா அணி நிர்வாகம் அவரை ஆறுதல்படுத்தியுள்ளது. என்றாலும், இன்று நடைபெறும் 18வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக குஜராத் அணி யாஷ் தயாளை விலக்கியுள்ளது.

கடந்த சீசனில் முதல்முறையாக ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி 9 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை எடுத்து குஜராத் முதல் முறையாகக் கோப்பை வெல்ல முடிந்தளவுக்கு சிறப்பான பங்காற்றிய யாஷ் தயாள், கடந்த போட்டியில் ரன்களை வாரி வழங்கியதற்காக இந்த முறை கழட்டிவிடப்பட்டிருக்கிறார். இதையடுத்து, இன்றைய போட்டியில் மட்டுமா அல்லது எஞ்சியிருக்கும் போட்டிகளிலிருந்தும் அவர் விலக்கி வைக்கப்படுவாரா எனச் சந்தேகம் எழுந்துள்ளது.

”கிரிகெட்டில் சறுக்குவதும் சாதிப்பதும் என்பதும் இயல்பான விஷயமே. இது, உலகளவில் எல்லா வீரர்களுக்குமே நடந்துள்ளது. அதற்காக ஒரு போட்டியிலேயே எந்த வீரரின் வளர்ச்சிக்கும் முடிவு கட்டிவிடக் கூடாது. இதற்கு எத்தனையோ உதாரணங்களைக் கூறலாம். அதிலும் டி20 கிரிக்கெட் அசுர வளர்ச்சி பெற்றபிறகு இதுபோன்ற சாதனைகள் எல்லாம் சர்வசாதாரணமாகி வருகின்றன. டி20யைப் பொறுத்தவரை, கடைசிப் பந்துவரை பேட்டர்களின் கையே ஓங்கியிருக்கிறது. ஆனாலும், பந்துவீச்சாளர்கள் தங்களால் முடிந்தவரை போராடுகின்றனர். இந்த விஷயத்தில் யாஷுக்கு முன்னர் எத்தனையோ பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.

ஐபிஎல்லிலேயே இப்படி பேசும் உலகம் 2016 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியை மறந்திருக்க மாட்டார்கள். அந்தப் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் வீசிய கடைசி ஓவரில் கார்லஸ் ப்ரத்வெய்ட் அடுத்தடுத்த 4 சிக்ஸர்கள் வீசி அவரையே கண்கலங்க வைத்தார். அதுபோல், 2007 டி20 உலக கோப்பையில் யுவராஜ் சிங், ஸ்டுவர்ட் ப்ராட் பந்துவிச்சில் 6 சிக்ஸர்களை அடித்தார். ஆனால், இவர்கள் எல்லாம் அதிலிருந்து மீண்டு, தன்னுடைய பந்துவீச்சில் மெருகேற்றி, அதற்குப் பிறகு பல சாதனைகளைப் படைத்த வீரர்களாய் வலம் வருகின்றனர். ஆக, யாஷும் இதையெல்லாம், ஒரு தூசியாகத் தட்டிவிட்டு அடுத்தகட்டத்துக்கு மெருகேற வேண்டும்” என கிரிக்கெட் வல்லநர்கள் ஆலோசனை கூறுகின்றனர். அதுபோல், ”யாஷை இந்தப் போட்டியுடன் ஒதுக்கி வைத்துவிடாமல், அணி நிர்வாகமும் கேப்டனும் வாய்ப்பு அளிக்க வேண்டும்” எனக் கூறுகின்றனர்.

இது ஒருபுறமிருக்க மறுபுறம், ரிங்கு சிங், யாஷ் தயாள் இருவருமே சிறந்த நண்பர்கள் என அறியப்படுகின்றனர். அவர்கள் இருவரும் உத்தரப் பிரதேசத்திற்காக பல போட்டிகளில் ஒன்றாக விளையாடி வெற்றிகளைப் பெற்றுத் தந்திருக்கிறார்கள். அதனால்தான், அந்தப் போட்டியில் வாட்டத்துடன் இருந்த யாஷ் தயாளுக்கு சக நண்பரான ரிங்கு சிங் குறுஞ்செய்தி அனுப்பி அவரை ஆறுதல்படுத்தியிருந்தார். அவர் அனுப்பி செய்தியில், ‘கிரிக்கெட்டில் இது நடக்கிற ஒன்றுதான். ‘கடந்த ஆண்டு நீங்கள் சிறப்பாக விளையாடி இருந்தீர்கள்’ என அவருக்கு அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் கிரிக்கெட் வீரரும் யாஷின் தந்தையுமான சந்தர்பால் தயாள்கூட தன் மகன் வருத்தப்பட்டதைக் கண்டு ஆறுதல் கூறியிருந்தார். அவர், “கிரிக்கெட்டில் இது ஒன்றும் புதிதல்ல. பந்து வீச்சாளர்கள் தாக்கப்படுவது சகஜம்தான். பிரபலமான பந்துவீச்சாளர்களுக்கும் இது நடந்துள்ளது. கடினமாய் உழை. எங்கு தவறு செய்திருக்கிறாய் என்று பார். ஆனால் கிரிக்கெட்டில் இது முதல் முறை அல்ல என்பதை நினைவில் கொள்” எனச் சொல்லி இதனால் பாதிக்கப்பட்ட மிகப் பிரபலமான வீரர்களின் மோசமான சாதனைகளையும் நினைவுகூர்ந்துள்ளார்.

ஆம், உண்மையில் கிரிக்கெட் மட்டுமல்ல, வீரர்கள், மனிதர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் எதில் வீழ்ந்தாலும் அதிலிருந்து மீண்டுவர முடியும் என்பது வரலாறு நமக்குக் கற்றுத் தரும் பாடம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக குஜராத் அணிக்கு எதிரான முதல் போட்டியில் இம்பேக்ட் வீரராக களமிறங்கியவர் துஷார் தேஷ்பாண்டே. முதல் போட்டியிலேயே அதிக ரன்களை வாரி வழங்கினார். ஆனாலும், கேப்டன் தோனி அவருக்கு அடுத்தடுத்த போட்டிகளில் வாய்ப்பு கொடுத்தார். துஷாராவும் தன்னுடைய திறமையை நிரூபிக்க தொடங்கியுள்ளார். ஆனால், கடந்த போட்டியில் ரன்களை விட்டுக் கொடுத்ததற்காக யாஷ் தயாளை உடனே பாண்ட்யா நீக்கிவிட்டதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.