aswin and aswin family
aswin and aswin family file image
T20

வெற்றிக்காக போராடி அவுட்டாகிய அஸ்வின்.. தந்தைக்காக அழுது கண்ணீர் சிந்திய மகள்!

Prakash J

ஐபிஎல் தொடர், பல இளம் வீரர்களை உருவாக்கி வருவதோடு அல்லாமல், பல சரித்த சாதனைகளும் படைக்கப்பட்டு வருகின்றன. இதனால், ஐபிஎல் தொடருக்கு சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை எண்ணற்ற ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. வழக்கம்போலவே இந்த தொடரும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் மகள், அழுத காட்சி அனைத்து இதயங்களையும் கனக்கச் செய்தது.

நடப்பு ஐபிஎல் சீசனில், 32வது லீக் போட்டி இன்று (ஏப்ரல் 23) பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், விராட் கோலி தலைமையிலான (தற்காலிக) பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி, முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 77 ரன்கள் எடுத்தார்.

Virat Kohli | RCB

இந்தப் போட்டியில் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ராஜஸ்தான் தொடக்கம் முதலே சரவெடியாய் ரன் மழை பொழிந்தபோதும் இறுதியில் தோல்வியைக் கண்டது. அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்களை மட்டுமே எடுத்து 7 ரன்களில் தோல்வியைத் தழுவியது.

கடைசி ஓவரில் 20 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ராஜஸ்தான் அணியில் ஆடிவரும் தமிழக வீரரான அஸ்வின் முதல் பந்தை எதிர்கொண்டு பவுண்டரி அடித்தார். 2வது பந்தில் 2 ரன்கள் எடுத்தார். அப்போது ரன் அவுட் மிஸ்ஸானது. தொடர்ந்து 3வது பந்தை எதிர்கொண்ட அஸ்வின், அதிலும் ஒரு பவுண்டரி அடித்தார். அப்போது 3 பந்தில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில், 4வது பந்தை தூக்கியடித்தார், அஸ்வின். ஆனால், அது கேட்சாக மாற, அஸ்வின் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

அஸ்வின்,

இதனால் வெற்றி, பெங்களூரு அணி பக்கம் திரும்ப, அந்த மைதானத்தில் கூடியிருந்த அவ்வணி ரசிகர்கள் எல்லாம் உற்சாகத்தில் இருந்தனர். ஆனால், கைக்கு வந்த வெற்றி கை நழுவிப் போன வருத்தத்தில், அந்த துயரத்தைத் தாங்க முடியாது அஸ்வினின் மகள் கண்ணீர் விட்டு அழுதார். பின்பு, அஸ்வினின் மனைவி அவரது கண்ணீரைத் துடைத்து அவரை ஆறுதல் படுத்தினார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கு முன்பாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வின் ஆட்டமிழந்த போதும் அவரது மகள் மைதானத்தில் அழுத காட்சிகள் வைரல் ஆனது. அந்தப் போட்டியில் 3 பந்துகளில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி உட்பட 10 ரன்கள் எடுத்திருந்தார். இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது குறிப்பிடத்தக்கது.