Arjun Tendulkar
Arjun Tendulkar  PTI
T20

ஒரே ஓவரில் 31 ரன்கள்.. மோசமான பந்துவீச்சு சாதனையில் இணைந்தார் அர்ஜுன் டெண்டுல்கர்!

Prakash J

ஐபிஎல் நடப்பு சீசனில், ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர், மும்பை அணியில் இடம்பிடித்து விளையாடி வருகிறார். கடந்த 16ஆம் தேதி, கொல்கத்தா அணிக்கு எதிராக ஐபிஎல் தொடரில் முதல் முறையாக அறிமுகமான அர்ஜுன், அந்தப் போட்டியில் 2 ஓவர்கள் வீசி 17 ரன்களை வழங்கியிருந்தார். அதைத் தொடர்ந்து ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்ற 25வது லீக் போட்டியிலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக விளையாடும் வாய்ப்பைப் பெற்றார். அந்தப் போட்டியில் கடைசி ஓவரை வீசிய, அர்ஜுன் 5 ரன்களை மட்டும் வழங்கி, 2 (1 ரன் அவுட்) விக்கெட்களையும் பறித்து மும்பை அணியின் வெற்றிக்கும் வித்திட்டார். அந்தப் போட்டியில் மொத்தம் 2.5 ஓவர்கள் வீசி 18 ரன்களை வழங்கியதுடன் 1 விக்கெட்டையும் அர்ஜுன் கைப்பற்றியிருந்தார். கேப்டன் ரோகித் சர்மாகூட, அர்ஜுனைப் பாராட்டி இருந்தார்.

அதேநேரத்தில், ஹைதராபாத்துக்கு எதிராக முதல் ஓவரை புதிய பந்தில் வீசிய அர்ஜுன், முதலில் 125 – 130+ கி.மீ வேகத்தில் வீசினாலும் கடைசிப் பந்தை சோர்ந்துபோய் வெறும் 107.2 கி.மீ வேகத்திலேயே வீசினார். இது கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் ரசிகர்களிடம் விமர்சனத்துக்குள்ளானது. வளரும் இளம்வீரரான அர்ஜுன், கிரிக்கெட்டில் நீடிக்க வேண்டுமானால் இதுபோன்ற தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும். சில பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என ஆலோசனை கூறியிருந்தனர்.

இந்த நிலையில், அர்ஜுன் டெண்டுல்கர் இன்றைய போட்டியில் பந்துவீச்சில் சொதப்பியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. முதல் 2 ஓவர்களில் 11 ரன்களை மட்டுமே வழங்கியிருந்த அர்ஜுனுக்கு 3வது ஓவரை வழங்கினார் ரோகித். அதாவது போட்டியின் 16வது ஓவரை வீசினார் அர்ஜுன். அதில்தான் 31 ரன்களை வாரி வழங்கியுள்ளார். முதல் பந்தில் 6 ரன்களையும், 2வது பந்தில் வைடாக ஒரு ரன்னையும் ஒரு பந்தையும் வழங்கினார். மீண்டும் 2வது (ரீபால்) பந்தில் 1 பவுண்டரி, 3வது பந்தில் 1 ரன், 4வது பந்தில் மீண்டும் ஒரு பவுண்டரி, 5வது பந்தில் சிக்ஸரையும் வழங்கிய அவர் கடைசிப் பந்தை நோபாலாக வீச அதில் ஒரு பவுண்டரியும் நோபாலுக்கு என ஒரு ரன்னும் கிடைத்தது. தவிர அதற்கு ரீ பால் வீசியபோது ப்ரி ஹிட்டில் மீண்டும் ஒரு பவுண்டரி போனது. இதனால் அந்த ஓவரில் 31 ரன்களை வாரி வழங்கியுள்ளார். இதையடுத்து, அவருக்கு 4வது ஓவரை வீசுவதற்கு ரோகித் சர்மா வாய்ப்பு தரவில்லை.

இதன்மூலம், ஐபில் தொடரில் ஒரு ஓவரில் அதிக ரன்களை வாரி வழங்கிய மும்பை அணி பந்துவீச்சாளர் என்ற பட்டியலில் 2வது இடம்பிடித்தார். இதற்கு முன்பு டேனியல் சாம்ஸ், கடந்த ஆண்டு 35 ரன்களை கொல்கத்தா அணிக்கு எதிராக வழங்கியுள்ளார். ஒட்டுமொத்தமாக பார்க்கையில் 37 ரன்களுடன் ஹர்ஷல் பட்டேல்,2011ம் ஆண்டு கொச்சி அணியில் விளையாடிய பிரஷாத் பரமேஸ்வரனும் முதலிடத்தில் உள்ளனர். இந்த சீசனில் குஜராத் அணியின் யாஷ் தயாள் 31 ரன்களை கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.