ஸ்டோனிஸ், படோனி, மேயர்ஸ்
ஸ்டோனிஸ், படோனி, மேயர்ஸ் lsg twitter page
T20

6 ரன்னில் முதலிடம் மிஸ். சென்னை அணியின் ரெக்கார்டை ஓரங்கட்டி ஐபிஎல் வரலாற்றில் முத்திரை படைத்த லக்னோ

Prakash J

உலகத்தில் எப்போதாவதுதான் அதிசயங்கள் நிகழும். ஆனால், ஐபிஎல்லில் தினம்தினம் அதிசயங்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. அதில் ஓர் அதிசயமாக இன்றைய போட்டி நடைபெற்று முடிந்துள்ளது. ஐபிஎல்லின் 38வது லீக் போட்டி, இன்று (ஏப்ரல் 28) மொகாலியில் நடைபெற்றது. இதில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ஷிகார் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் ஜெயித்த பஞ்சாப் அணி, ஐபிஎல்லில் சென்னை அணி படைத்த சாதனையை அது தகர்க்கப்போகுது என தெரியாமலேயே லக்னோ அணியை பேட்டிங் செய்ய பணித்தது. அதன்படி, தொடக்கம் முதலே அதிரடி காட்டிய லக்னோ அணி பேட்டர்கள், இறுதிவரை மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளைப் பறக்கவிட்டபடியும், ரசிகர்களைக் குஷிப்படுத்தியபடியும் இருந்தனர்.

தொடக்க பேட்டரும் கேப்டனுமான கே.எல்.ராகுல், 12 ரன்களில் வெளியேறினாலும் அடுத்து வந்த வீரர்கள் எல்லோரும் அதிரடியில் கலக்கினர். குறிப்பாக கெய்ல் மேயர்ஸ் (54 ரன்கள்), ஆயுஷ் படோனி (43 ரன்கள்), மார்கஸ் ஸ்டோனிஸ் (72 ரன்கள்), நிக்கோலஸ் பூரன் (45 ரன்கள்) ஆகியோர் சிறப்பான பங்களிப்பை அளிக்க, அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 257 ரன்களைக் குவித்தது.

KL Rahul

இதன்மூலம், இந்த ஐபிஎல் தொடரில் அந்த அணி அதிகபட்ச ரன்களைக் குவித்துள்ளது. தவிர, ஐபிஎல் தொடரில் அதிகபட்ச ரன்களைக் குவித்த இரண்டாவது அணியாகவும் லக்னோ அணி, சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற 33வது லீக் போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக 235 ரன்களை எடுத்து இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த அணியாக சென்னை அணி முதலிடத்தில் இருந்தது. ஆனால், ஐபிஎல்லில் எல்லாம் சாதனைகளும் என்றாவது ஒருநாள் முறியடிக்கப்படும் என்ற பார்வையில், 5 நாட்கள் முடிவதற்குள்ளேயே, இன்றைய போட்டியில் லக்னோ அணி, 257 ரன்களைக் குவித்து, இந்த சீசனில் அதிகபட்ச ரன்களை எடுத்த அணியாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.

Csk

இதன்மூலம் சென்னை அணி செய்த சாதனை தகர்க்கப்பட்டிருப்பதுடன், அந்த அணி, 2வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, 3வது இடத்தில் உள்ளது. அது, கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி கொல்கத்தாவுக்கு எதிராக 228 ரன்களை எடுத்திருந்தது.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் லக்னோ அணி இந்த ரன்களை எடுத்ததன் மூலம் மேலும் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. ஐபிஎல்லிலேயே அதிகபட்ச ரன்களைக் குவித்த அணியாக பெங்களூரு இன்றுவரை வலம் வருகிறது. அவ்வணி 263 ரன்களை எடுத்துள்ளது. தொடர்ந்து அந்த அணியே 248 ரன்களையும் எடுத்து இரண்டாவது இடத்தில் வலம் வந்தது. அதுபோல் சென்னை அணியும் 246 ரன்களை எடுத்து 3வது இடத்தில் வலம் வந்தது.

RCB players

ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ஆம், 2வது மற்றும் 3வது இடங்களை ஆக்கிரமித்திருந்த பெங்களூரு, சென்னை அணிகளைப் பின்னுக்குத் தள்ளி லக்னோ 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிகபட்ச ரன்களைக் குவித்த அணிகளில் லக்னோ 2வது இடத்தைப் பிடித்துள்ளது. அதன்படி 3வது இடத்தை பெங்களூருவும், 4வது இடத்தை சென்னை அணியும் பிடித்துள்ளன.

ஒருவேளை, ஸ்டோனிஸும் பூரனும் ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால், பெங்களூரு நிகழ்த்தியிருக்கும் சாதனையையே முறியடித்து, லக்னோ முதலிடத்திற்கும் முன்னேறியிருக்கும் என கிரிக்கெட் வல்லுநர்களும், ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.