Play offs race
Play offs race  File image
T20

ஒரே ஒரு தோல்வியில் மாறிப்போன MI-ன் பிளே ஆஃப் வாய்ப்பு - 3 இடங்களுக்கு மல்லுக்கட்டும் 7 அணிகள்!

சங்கீதா

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு நடப்பு ஐபிஎல் சீசன் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்துள்ளது. அதுவும் லீக் சுற்றுப் போட்டிகள் முடிவடைய உள்ள நிலையில் பிளே ஆஃப்க்காக ஒவ்வொரு அணியும் மல்லுக் கட்டி வருகிறது. அதனால், ஒவ்வொரு போட்டியும் திக் திக் நொடிகளுடனே முடிவடைகிறது. ஒவ்வொரு போட்டியும் எந்த அளவிற்கு முக்கியம்னா ஒரே ஒரு போட்டியில் வெற்றி பெற்று ஏழாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு வந்த மும்பை அணி ஒரே ஒரு தோல்வியால் பிளே ஆஃப்க்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற நிலைக்கு வந்துவிட்டது. இப்படி நொடிக்கு நொடி பரபரப்பாக செல்லும் நடப்பு ஐபிஎல் சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற எந்தெந்த அணிகளுக்கு எல்லாம் எவ்வளவு எவ்வளவு வாய்ப்புகள் இருக்கிறது என்பதை விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.

1. குஜராத் டைட்டன்ஸ்

2022-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் முதல் ஆளாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. நடப்பாண்டில் அந்த அணி இதுவரை 13 போட்டிகளில் விளையாடி, 9 வெற்றிகள் மற்றும் 4 தோல்விகளுடன் 18 புள்ளிகள் எடுத்து பிளே ஆஃப் சுற்றில் முதல் ஆளாக தனது இடத்தை பதிவுசெய்துள்ளது.

Gujarat Titans

இந்த அணி, தனது கடைசி லீக் போட்டியை வரும் ஞாயிற்றுக்கிழமை விளையாட உள்ளது. ஆர்.சி.பி. அணியுடனான அந்தப் போட்டியில் ஜெயித்தாலும், தோற்றாலும் குஜராத் அணிக்கு கவலையில்லை. எனினும், குஜராத் அணி வெற்றிபெற்று, ஆர்.சி.பி. அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பில் கடும் நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது.

2. சென்னை சூப்பர் கிங்ஸ்

புள்ளிப்பட்டியலில் 15 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கும் சென்னை அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற 93 சதவிகிதம் வாய்ப்பு இருக்கிறது. இதுவரை அந்த 13 ஆட்டங்களில் விளையாடி, 7 வெற்றிகள், 5 தோல்விகளை சந்தித்துள்ளது. இதில் லக்னோ அணியுடனான போட்டி மழைக் காரணமாக கைவிடப்பட்ட நிலையில், தலா ஒரு புள்ளிகள் இரு அணிக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

Chennai Super Kings

தனது கடைசி லீக் போட்டியில், சென்னை அணி, டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் மோதவுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால், சென்னை அணி 17 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தை தக்கவைத்துக் கொள்ளும். அதேவேளையில் தோற்கும்பட்சத்தில், அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறாமல் வெளியேறவும் வாய்ப்பிருக்கிறது.

MS Dhoni

ஏனெனில், +0.381 என்ற நல்ல நெட் ரன் ரேட்டுடன் சிஎஸ்கே இருந்தாலும் தோல்வி பெறும் பட்சத்தில், 15 புள்ளிகள் மட்டுமே கிடைக்கும். இதனால், அந்த அணிக்கு டஃப் கொடுக்கும் வகையில், லக்னோ, மும்பை, பெங்களூரு, பஞ்சாப் உள்ளிட்ட அணிகள் வரிசைக்கட்டி நிற்கின்றன.

3. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

நேற்று மும்பை உடனான போட்டியில் வெற்றிபெற்றதை அடுத்து பிளே ஆஃப் ரேஸில் லக்னோ அணியும் உள்ளது. சென்னை அணியைப் போன்றே, லக்னோ அணியும் இதுவரை 13 போட்டிகளில் விளையாடி, 7 வெற்றிகள், 5 தோல்விகளுடன், மழைக் காரணமாக கைவிடப்பட்ட போட்டிக்கு வழங்கப்பட்ட ஒரு புள்ளியையும் சேர்த்து 15 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.

Lucknow Super Giants

இந்த அணிக்கும் 93 சதவிகிதம் பிளே ஆஃப் செல்ல வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், +0.304 நெட் ரன் ரேட்டுகளுடன் இருந்தாலும், வரும் சனிக்கிழமை கொல்கத்தா அணியுடனான கடைசி லீக் போட்டியில், கிடைக்கும் வெற்றி, தோல்வியை பொறுத்தே இந்த அணியும் பிளே ஆஃப் வாய்ப்பு பெறும்.

4. மும்பை இந்தியன்ஸ்

லக்னோ அணியுடன் நேற்று நடைபெற்ற போட்டியில் தோல்வியடைந்ததை அடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு சற்று கடினமானதாக மாறியுள்ளது. இதுவரை 13 ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, 7 வெற்றிகள், 6 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

Mumbai Indians

வரும் ஞாயிற்றுக்கிழமை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான போட்டிக்குப் பிறகே மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு தெரியவரும். குறைவான, அதாவது -0.128 நெட் ரன் ரேட்டுகளே இருப்பதும் பிளே ஆஃப் வாய்ப்பை கடினமாக்கியுள்ளது. இந்த அணிக்கு 78.1 சதவிகிதம் வாய்ப்புள்ளது.

5. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் இருக்கும் ஆர்.சி.பி. அணிக்கு 43.8 சதவிகிதம் பிளே ஆஃப் செல்ல வாய்ப்புள்ளது. பிளே ஆஃப் ரேஸில் உள்ள அணிகளில், ஆர்.சி.பி. அணி இன்னும் இரண்டு போட்டிகளில் விளையாட உள்ளது. நாளை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதவுள்ள ஆர்.சி.பி அணி, வரும் ஞாயிற்றுக்கிழமை வலுவான குஜராத் அணியுடன் மோதவுள்ளது. இந்த இரு போட்டிகளிலும் வெல்லும் பட்சத்தில், ஆர்.சி.பி. அணி 16 புள்ளிகள் பெறும்.

Royal Challengers Bangalore

இதனால், நெட் ரன் ரேட் அடிப்படையிலும், சென்னை, லக்னோ, மும்பை, பஞ்சாப் அணிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்தும் இந்த அணி பிளே ஆஃப் செல்ல காத்திருக்க வேண்டியிருக்கும். மேலும் இந்த அணி ஒரு போட்டியில் தோல்வியடைந்தாலும், மும்பை அணி மற்றும் பஞ்சாப் அணியின் வெற்றியை பொறுத்து தகுதிபெறும் வாய்ப்பை பெறும்.

6. ராஜஸ்தான் ராயல்ஸ்

வெற்றி, தோல்வி என்று மாறி மாறி வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் ஆளாக பிளே ஆஃப் வாய்ப்பை பெறும் என்று எதிர்பார்த்த நிலையில், கடைசி சிலப் போட்டிகளில் மோசமான தோல்வியை தழுவியதை அடுத்து, புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்திற்கு சரிந்துள்ளது. இந்த அணிக்கு 18.8 சதவிகிதம் இன்னும் வாய்ப்புள்ளது.

Rajasthan Royals

ஏனெனில், +0.140 என்ற நெட் ரன் ரேட்டுடன் இருக்கும் ராஜஸ்தான் அணி, வரும் வெள்ளிக்கிழமை பஞ்சாப் அணியுடன் மோதவுள்ளது. இந்தப் போட்டியில் ஜெயிக்கும் பட்சத்தில், மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியைப் பொறுத்து பிளே ஆஃப் வாய்ப்பு இருக்கும். தோற்கும் பட்சத்தில், 12 புள்ளிகளுடன் ரேஸிலிருந்து வெளியேறும்.

7. கொல்கத்தா அணி

13 போட்டிகளில் 6் வெற்றிகள், 7 தோல்விகள் என கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. இந்த அணி, வரும் சனிக்கிழமை லக்னோ அணியுடன் மோதவுள்ளது.

Kolkata Knight Riders

கடைசி லீக் போட்டியான இந்தப் போட்டியில் வெற்றிப்பெற்றாலும், கொல்கத்தா அணிக்கு நெட் ரன் ரேட் குறைவாக இருப்பதால், பிளே ஆஃப் ரேஸில் இடம் பிடிப்பது கடினம். இந்த அணிக்கு 14.1 சதவிகிதம் வாய்ப்புள்ளது.

8. பஞ்சாப் கிங்ஸ்

8-வது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணிக்கு, டெல்லிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக 43.8 சதவிகிதம் பிளே ஆஃப் செல்ல வாய்ப்பு இருந்தது. டெல்லிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியதால் கிட்டதட்ட தன்னுடைய பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது. அடுத்தப் போட்டியில் வரும் வெள்ளிக்கிழமை ராஜஸ்தான் அணியுடன் மோதுகிறது. இந்தப் போட்டியிலும் வெற்றிபெறும் பட்சத்தில், 14 புள்ளிகள் பெற்று பிளே ஆஃப் ரேஸில் தன்னை தக்கவைத்துக்ககொள்ள வாய்ப்புண்டு. ஆனாலும், மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்தே பிளே ஆஃப் வாய்ப்பு அமையும்.

Punjab Kings

மேலும், ஒரு போட்டியில் தோல்வியை தழுவினாலும் மற்ற அணிகள் விளையாடுவதை பொறுத்து இந்த அணிக்கு வாய்ப்பிருக்கிறது. இதனால், இன்றையப் போட்டியில் வெற்றிபெற முனைப்பு காட்டும்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் & டெல்லி கேப்பிடல்ஸ்

9-வது இடத்தில் இருக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் 10-வது இடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரு அணிகளும் ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதிலிருந்து வெளியேறியுள்ளது. 12 போட்டிகளில் விளையாடி, 8 புள்ளிகளுடன் இரு அணிகளும் இருந்தன. இதில் ஹைதராபாத் அணி, நாளை ஆர்.சி.பி. அணியுடனும், ஞாயிற்றுக்கிழமை மும்பை இந்தியன்ஸ் அணியுடனும் மோதுகின்றது. இந்த இருப் போட்டிகளிலும் ஹைதராபாத் அணி வெற்றிபெற்றாலும், பிளே ஆஃப் வாய்ப்பு பெறமுடியாதப் பட்சத்தில், அந்த அணிகளின் பிளே ஆஃப் வாய்ப்பை தட்டி பறிக்க வாய்ப்புண்டு.

SRH vs DC

இதேபோல், டெல்லி அணி இன்று நடைபெற்ற இன்று பஞ்சாப் அணியுடனான போட்டியில் வெற்றி பெற்று பஞ்சாப்பின் பிளே ஆஃப் வாய்ப்பை மங்கலாக்கிவிட்டது. இதனையடுத்து சனிக்கிழமை சிஎஸ்கே அணியுடனும் டெல்லி மோதுகின்றது. இந்தப் போட்டியில் டெல்லி அணி தோல்வியடைந்தாலும், அதற்கு பாதிப்பில்லை. ஆனால், சென்னை அணியின் பிளே ஆஃப் கனவை சிதைக்கும் வாய்ப்பு உண்டு.