இன்று நடைபெறும் இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கிடையேயான போட்டி மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 'சூப்பர் 12' சுற்று இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. தொடரில் இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு அடிலெய்ட் மைதானத்தில் அரங்கேறும் ஆட்டத்தில் இந்திய அணி, வங்காளதேசத்துடன் மோதுகிறது. தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானையும், 2வது ஆட்டத்தில் நெதர்லாந்தையும் வீழ்த்தி அசத்திய இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் போராடி தோல்வியடைந்தது. தற்போது 'குரூப் 2' பிரிவில் 4 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ள இந்திய அணி, எஞ்சிய இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் வங்கதேசத்தை இன்று எதிர்கொள்கிறது.
இந்த நிலையில் அடிலெய்டில் இந்தியா - பங்களாதேஷ் அணிகள் இன்று மோதும் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. போட்டி நடைபெறும் அடிலெய்டில் இன்று (புதன்கிழமை) 60 சதவிகிதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒருவேளை, இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்படும் பட்சத்தில் இந்தியா மற்றும் வங்காளதேச அணிகளுக்கு தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்படும். அப்படி நடந்தால், இவ்விரு அணிகளும் 5 புள்ளிகளுடன் மீண்டும் சமநிலைக்கு வந்து விடும். இதனால், இந்த அணிகள் இரண்டும் மற்ற அணிகளின் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலைமை உருவாகும். எனினும், இந்திய அணியின் ரன்ரேட் (+0.844) நல்ல நிலைமையில் உள்ளதால், வங்கதேசத்தை (-1.533) விட இந்தியாவுக்கே அரையிறுதி செல்ல அதிக வாய்ப்பு இருக்கும்.
தவற விடாதீர்: டி20 உலகக் கோப்பை: குரூப் 1 ல் நிலவும் கடும் போட்டி - அரையிறுதி வாய்ப்பு யாருக்கு?