விளையாட்டு

பார்வை மாற்று திறனாளிகள் டி20 உலக கோப்பையில் அபார வெற்றி; இந்திய அணி 3வது முறை சாம்பியன்!

சங்கீதா

பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான  டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றநிலையில் பிரதமர் மோடி, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இந்திய அணி வீரர் புஜாரா உள்பட பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான  டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி பெங்களூரில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இதனால் 120 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. இதுவரை நடைபெற்ற பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான 3 டி20 உலகக் கோப்பையிலும் (2012, 2017, 2022) இந்திய அணியே வெற்றிபெற்று வரலாற்று சாதனைப் படைத்துள்ளது. இதையடுத்து, வெற்றிபெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், “நமது விளையாட்டு வீரர்களால் இந்தியா பெருமை கொள்கிறது. பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய அணியினருக்கு எனது வாழ்த்துக்கள். அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார். இதேபோல், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, அனுராக் தாகூர், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, இந்திய அணி வீரர் புஜாரா, முன்னாள் வீரர் யுவராஜ் சிங் உள்பட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.