2022 டி20 உலகக்கோப்பையின் இறுதிபோட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 2ஆவது முறையாக சாம்பியன் ஆனது இங்கிலாந்து அணி.
டாஸ் வென்ற இங்கிலாந்து!
2022 டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் பவுலிங்கை தேர்வு செய்தார். பின்னர் பேட்டிங் செய்ய களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் ஓபனர்கள் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் நிதானமான ஆட்டத்தை தொடங்கினாலும், 5ஆவது ஓவர் வீச வந்த சாம் கரன் முகமது ரிஸ்வானை பவுல்டாக்கி பெவிலியன் திருப்பினார். பின்னர் வந்த முகமது ஹரிஸும் அவுட்டாகி வெளியேற, கைக்கோர்த்த பாபர் அசாம் மற்றும் ஷான் மசூத் இருவரும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
விக்கெட்டுகள் சரிந்தது!
11 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் சேர்த்திருந்த பாகிஸ்தான் அணியை, 12ஆவது ஓவர் வீச வந்த சுழற்பந்துவீச்சாளர் அடில் ரசீத் கேப்டன் பாபர் அசாம் விக்கெட்டை எடுத்து மெயிடன் ஓவராக வீசி பாகிஸ்தான் அணியை அழுத்தத்திற்குள் தள்ளினார். பின்னர் வந்த இப்திகார் டக் அவுட்டாகி வெளியேற, சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பாகிஸ்தான் அணி தடுமாறியது.
சாம் கர்ரன் அசத்தலில் பாகிஸ்தான் சரண்டர்!
பின்னர் நம்பிக்கை அளித்த சான் மசூத்தை சாம் கரன் வீழ்த்த, அடுத்தடுத்து வந்த வீரர்கள் அவுட்டாகி வெளியேற 8 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 137 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அபாரமாக பந்துவீசிய சாம் கரன் 4 ஓவர்களில் 12 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
முதல் ஓவரிலேயே விக்கெட் சாய்த்த அப்ரிதி!
138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு முதல் ஓவரிலேயே அலெக்ஸ் ஹேல்ஸை பவுல்டாக்கி அதிர்ச்சி கொடுத்தார் பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி. விக்கெட் விழுந்தாலும் போட்டியில் அழுத்தம் விழாமல் பார்த்துக்கொண்ட கேப்டன் ஜாஸ் பட்லர் அடுத்தடுத்த பவுண்டரிகளாக விரட்டி ரன்ரேட்டை 10ஆகவே வைத்திருந்தார். பின்னர் அடுத்தடுத்த ஓவர்களில் சால்ட் மற்றும் ஜாஸ் பட்லர் விக்கெட்டுகளை ஹரிஸ் ராஃப் வீழ்த்த ஆட்டம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. 5.3 ஓவர்களில் 45 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாறினாலும், ஆட்டத்தில் கோப்பையின் ஒருபுறத்தில் இருந்து கையை எடுக்காத இங்கிலாந்து தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. ரன் அவுட் மிஸ்ஸிங், லெக் பை ரிவியூ என போட்டியில் ஏற்றம் இறக்கம் இருந்தாலும், ஒருபுறம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் ஸ்டோக்ஸ் அணியை கடைசி வரை எடுத்துகொண்டு போனார்.
காயத்தால் அவதி - பாதியிலேயே வெளியேறிய அப்ரிதி!
கடைசி 5 ஓவர்களுக்கு 41 ரன்கள் தேவை என்ற இடத்தில் பந்துவீச வந்த ஷாஹீன் அப்ரிடிக்கு காலில் ஏற்பட்ட தசைபிடிப்பின் காரணமாக பந்துவீசாமல் போனது. முதல் பந்தை டாட்டாக மாற்றிய அவர், இரண்டாவது பந்தை வீச முடியாமல் மைதானத்தை விட்டே வெளியேறினார். ஒருவேளை அவர் தொடர்ந்து வீசி இருந்தால் இந்த போட்டி இன்னும் விறுவிறுப்பான இடத்திற்கு நகர்ந்திருக்கும் இல்லை பாகிஸ்தான் அணியே கூட வெற்றியை ருசித்திருக்கும்.
பின்னர் அந்த ஓவரை இஃப்திகார் வீச அதை சிக்சர்,பவுண்டரிக்கு அனுப்ப ஆட்டம் இங்கிலாந்து பக்கமே முழுமையாய் சாய்ந்தது. பின்னர் மொயின் அலியும் அவரது பங்கிற்கு பவுண்டரிகள் அடிக்க, 19 ஓவர் முடிவில் 138 ரன்கள் என்ற இலக்கை எட்டி டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது இங்கிலாந்து அணி. இறுதி வரை நிலைத்து நின்ற பென் ஸ்டோக்ஸ் அரைசதம் அடித்து அசத்தினார்.
2016 உலகக்கோப்பை இறுதி போட்டியில் 19 ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியை தேடித்தந்த பென் ஸ்டோக்ஸ் இந்த 2022 டி20 உலகக்கோப்பையை இங்கிலாந்து அணிக்கு வென்று கொடுத்திருக்கிறார். 2010 ஆம் ஆண்டு டி20 கோப்பையை வென்றதிற்கு பிறகு, 12 வருடங்கள் கழித்து 2022ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்றிருக்கிறது இங்கிலாந்து அணி.