விளையாட்டு

டி20 உலகக்கோப்பை: அபார பந்துவீச்சால் ஜிம்பாப்வேவை அசால்ட்டாக வீழ்த்தியது நெதர்லாந்து!

டி20 உலகக்கோப்பை: அபார பந்துவீச்சால் ஜிம்பாப்வேவை அசால்ட்டாக வீழ்த்தியது நெதர்லாந்து!

Rishan Vengai

இன்று நடைபெற்ற சூப்பர் 12 சுற்று போட்டியில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி வெற்றுபெற்றுள்ளது நெதர்லாந்து அணி.

டி20 உலககோப்பை சூப்பர் 12 சுற்றின் இன்றைய போட்டி ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே காலையில் அடிலய்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

பின்னர் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய நெதர்லாந்து அணி, ஜிம்பாப்வேவின் டாப் ஆர்டர் பேட்டர்களை அடுத்தடுத்து அவுட்டாக்கி பெவிலியன் திருப்பியது. 6 ஓவர் முடிவில் 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஜிம்பாப்வே அணியை சரிவிலிருந்து மீட்க போராடினார்கள் சீன் வில்லியம்ஸ் மற்றும் சிக்கந்தர் ராஷா. 4ஆவது விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்த இந்த கூட்டணியை பிரித்தார் வான் மீகெரன். 3 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என அதிரடி காட்டிய சிக்கந்தர் ராஷாவும் 40 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேற, 19.2 ஓவர் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்த ஜிம்பாப்வே அணி 117 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

118 ரன்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய நெதர்லாந்து அணி தொடக்கத்திலேயே ஒரு விக்கெட்டை இழந்தாலும், பின்னர் அதிரடி காட்டியது. அந்தவகையில் ஜோடி சேர்ந்த மேக்ஸ் ஒடவ்டு மற்றும் டாம் கூப்பர், தங்களின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கான ரன்களை விரைவாகவே சேர்த்தனர். 2ஆவது விக்கெட்டுக்கு இந்த கூட்டணி 73 ரன்கள் சேர்த்தது. பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேக்ஸ் ஓடவ்டு 8 பவுண்டரிகள், 1 சிக்சர்னு விளாசி அரைசதம் அடித்து அசத்தினார்.

இறுதியில் 18 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த நெதர்லாந்து அணி 120 ரன்கள் அடித்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டியின் முடிவில் இரண்டாவது அணியாக அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்துள்ளது நெதர்லாந்து அணி.