இந்த ஐபிஎல் தொடரில் தனது மயாஜால சுழலால் பேட்ஸ்மேன்களை திணறடித்தவர் ரஷித் கான். அவருக்கு இது இரண்டாவது ஐபிஎல் தொடர்தான். ஆனால், அவர் பெரிய அளவில் பிரபலம் அடைந்துவிட்டார். இளம் வயது(19) வீரரான ரஷித் தொடர் முழுவதும் தனது முத்திரையை பதித்துள்ளார். குறிப்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது பிளே ஆஃப் போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் ரஷித் கலக்கினார். கொல்கத்தா வசம் இருந்த வெற்றியை தனது மாயாஜால பந்துவீச்சில் ஐதராபாத் வசம் திருப்பினார். பந்துவீச்சில் 3 விக்கெட், பேட்டிங்கில் 10 பந்தில் 34 ரன்கள், இரண்டு அற்புதமான கேட்ச் மற்றும் ஒரு ரன் அவுட் என அசத்திவிட்டார் ரஷித்கான்.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ரஷித் கானுக்கு தற்போது இந்தியாவில் பெரிய அளவில் ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது. இந்திய ரசிகர்கள் ஒருவர் மீது பாசம் வைத்துவிட்டால் அவ்வளவு தான். கட்டுக்கடங்காமல் சென்றுவிடுவார்கள். அப்படித்தான் ரஷித் கானின் ரசிகர்கள் அவருக்கு இந்திய குடியுரிமை அளிக்கும் அளவிற்கு சென்றுள்ளார்கள். பல ரசிகர்கள் ரஷித் கானுக்கு இந்திய குடியுரிமை அளிக்குமாறு சுஷ்மா சுவராஜூக்கு வேண்டுகோள் வைத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்த வேடிக்கையான பதிவிற்கும் சுஷ்மா சுவராஜ் தனது ட்விட்டரில் பதில் அளித்துள்ளார். குடியுரிமை அளிப்பது உள்துறை அமைச்சகத்தின் பணி என்று சுஷ்மா கூறியுள்ளார்.
ஆனால், தங்கள் நாட்டு வீரரை விட்டுக் கொடுக்க முடியாது என்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி கூறியுள்ளார். கானி தனது ட்விட்டரில், “ரஷித் கானின் முழு பெருமையையும் ஆப்கான் எடுத்துக் கொள்ளும். ரஷித்தின் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பளித்த இந்திய நண்பர்களுக்கு நன்றி. ஆப்கானின் சிறப்பாக ரஷித் நினைவு கூறப்படுவார். சர்வதேச கிரிக்கெட்டின் சொத்தாக அவர் தொடர்வார். அவரை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ரஷித் கானின் சுழற்பந்து வீச்சு குறித்து இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர், ஆஸ்திரேலியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் உள்ளிட்டோர் புகழாராம் சூட்டியுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் மோதும் நாளைய இறுதிப் போட்டியிலும் ரஷித் கானின் சுழல் வீசும் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் உள்ளார்கள்.