விளையாட்டு

வாணவேடிக்கை நிகழ்த்திய சூர்யகுமார் யாதவ்.... மிரண்டுபோன இலங்கை பந்துவீச்சாளர்கள்!

webteam

மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி, இலங்கைக்கு 229 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி, தற்போது டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில், முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் இலங்கை அணியும் வெற்றிபெற்று புள்ளிப் பட்டியலில் சமநிலையில் உள்ளன.
இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (ஜனவரி 7) ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் ஜெயிக்கும் அணியே, டி20 கோப்பையைக் கைப்பற்றும் என்பதால் இந்தப் போட்டி இவ்விரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதன்படி, இன்றைய போட்டியில் இந்தியா டாஸ் ஜெயித்து பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்து உள்ளது. இந்திய அணியில் மாற்றமும் செய்யப்படவில்லை.

இதைத் தொடர்ந்து தொடக்க பேட்டர்களாக இஷான் கிஷன் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் களம் புகுந்தனர். அதில் சுப்மான் கில், ரன் எதுவும் எடுக்காமல் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து ராகுல் திரிபாதி இறங்கி கிஷனுடன் கைகோர்த்தார். திரிபாதி களமிறங்கிய முதலே மட்டையைச் சுழற்ற ஆரம்பித்தார். அவர் கருணாரத்னே ஓவரில் தொடர்ந்து இரண்டு சிக்ஸர் அடித்து, மூன்றாவது பந்தில் அவரிடமே வீழ்ந்தார். அவர், 16 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். அவருக்குப் பிறகு களமிறங்கிய சூர்யகுமார் யாதவ்வும் அதிரடியை நிறுத்தவில்லை.

கடந்த போட்டியைப்போன்றே இந்தப் போட்டியிலும் இலங்கை பந்துவீச்சை நாலாபுறம் சிதறடித்தார். மறுபுறம் சுப்மான் கில் தன் பங்குக்கு 36 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து, ஹசரங்கா பந்தில் போல்டானார். ஆனால் கில்லுக்குப் பிறகு களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் தீபக் ஹூடா ஆகிய இருவரும் கடமைக்கே விளையாடியதுபோல் வந்தவுடன் நடையைக் கட்டினர். ஆனால், இறுதிவரை ஆட்டமிழக்காமல் தனி ஒருவனாய் மிரட்டிய சூர்யகுமார் யாதவ், 51 பந்துகளில் 112 ரன்கள் எடுத்தார். இலங்கை பந்துவீச்சாளர்களை மிரளவைத்த சூர்யகுமார் யாதவ், 9 சிக்ஸ்ரகளையும் 7 பவுண்டரிகளையும் நொறுக்கியிருந்தார்.

அதிலும் பல பந்துகளை முழங்காலிட்டு இடதுபுற பவுண்டரி எல்லைக்கே திருப்பியிருந்தார். அவர், டி20இல் 3வது சதத்தைப் பதிவு செய்தார். அவருக்குத் துணையாய் இறுதிவரை அக்‌ஷர் படேல் தன் பங்குக்கு 9 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை தரப்பில் மதுஷங்கா 2 விக்கெட்கள் வீழ்த்தினார். ரசிதா, கருணாரத்னே, ஹசரங்கா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதில் மதுஷங்கா மற்றும் ஹசரங்கா ஆகியோர் 4 ஓவர்களுக்கு 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இலங்கை அணி விளையாடி வருகிறது.

- ஜெ.பிரகாஷ்