விளையாட்டு

டி20 போட்டி: குறைவான பந்துகளில் 1000 ரன்கள் அடித்து சாதனை - சூரியகுமார் யாதவ் அசத்தல்

webteam

டி20 போட்டிகளில் குறைவான பந்துகளில் 1000 ரன்கள் அடித்து உலகத்தின் முதல் வீரராக சாதனை படைத்துள்ளார், இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூரியகுமார் யாதவ்.

தொடர்ந்து அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் சூரியகுமார் யாதவ், உலகத்தின் சிறந்த டி20 அணிகள் எனக் கருதப்படும் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டிஸ், தென்னாப்பிரிக்கா அணிகள் போன்ற பல்வேறு அணிகளுக்கு எதிராகவும் அடுத்தடுத்து சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸ்ஸாமை பின்னுக்கு தள்ளி உலக டி20 தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி அசத்தினார். தற்போது ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆட்டக்காரர் க்ளென் மேக்ஸ்வெல்லின் டி20 போட்டிக்கான அதிரடி அதிக ரன்கள் சாதனையை முறியடித்து சாதனை படைத்துள்ளார் சூரியகுமார் யாதவ்.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் களமிறங்கி விளையாடிய சூரியகுமார், தனது அதிரடி பேட்டிங்கால் 5 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் விளாசி வெறும் 22 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து அசத்தினார். இந்நிலையில்தான் அவர் டி20 போட்டிகளில் குறைவான பந்துகளில் வேகமாக 1000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை க்ளென மேக்ஸ்வெல் இடமிருந்து பறித்து தன்வசம் வைத்திருக்கிறார்.

டி20 போட்டிகளில் 33 போட்டிகளில் பங்கேற்று ஆடியுள்ள அவர் 9 முறை 50 ரன்கள் விளாசியும், 1 முறை 100 ரன்கள் அடித்தும் 1037 ரன்களுடன் இருக்கிறார். ” 31 இன்னிங்சில் விளையாடிருக்கும் அவர் 573 பந்துகளை சந்தித்து 1000 ரன்களை கடந்து” சாதனை படைத்திருக்கிறார். இதற்கு முந்தைய சாதனையாக மேக்ஸ்வெல் 604 பந்துகளில் 1000 ரன்கள் அடித்ததே இருந்து வந்தது. இந்நிலையில் மேக்ஸ்வெல்லை பின்னுக்கு தள்ளி இந்த சாதனையை படைத்திருக்கிறார் சூரியகுமார் யாதவ்.

அடுத்தடுத்த இடங்களில் காலின் முன்ரோ (635 பந்துகள்), எவின் லீவிஸ் ( 640), திசார பெரேரா ( 654 ) பந்துகளில் அடுத்தடுத்து இருக்கின்றனர்.