விளையாட்டு

வெற்றிகரமாக முடிந்த அறுவை சிகிச்சை - ரவீந்திர ஜடேஜா நன்றி தெரிவித்து பகிர்ந்த புகைப்படம்

சங்கீதா

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு அறுவை சிகிச்சை முடிந்துள்ள நிலையில், மருத்துவமனையில் இருந்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி லீக் போட்டியில் 2 ஆட்டங்களிலும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியநிலையில், தற்போது சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. குறிப்பாக லீக் போட்டியில் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டம் இந்திய அணி வெற்றிபெற கை கொடுத்தது.

ஆனால் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னதாக வலது காலின் மூட்டுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு ஆசியக் கோப்பை தொடரிலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக அக்ஷர் பட்டேல் சேர்க்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டநிலையில், தற்போது அறுவை சிகிச்சை முடிந்துள்ளதை ரவீந்திர ஜடேஜா தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அதில்,“அறுவை சிகிச்சை வெற்றிக்கரமாக நடந்து முடிந்துள்ளது. அனைவரின் ஆதரவுக்கும், ஈடுபாட்டிற்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

குறிப்பாக பிசிசிஐ, எனது சக அணி வீரர்கள், ஊழியர்கள், பிசியோ, மருத்துவர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. பயிற்சியை துவங்கி இதிலிருந்து விரைவில் குணமடைந்து அணிக்கு திரும்ப முயற்சிப்பேன். வாழ்த்திய அனைவருக்கும் நன்றி” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். எனினும் அடுத்தமாதம் ஆஸ்திரேலியாவில் துவங்க உள்ள உலகக் கோப்பை டி20 போட்டியில் ரவீந்திர ஜடேஜா விளையாடுவது சந்தேகமே. விரைவில் குணமடைந்தால் மட்டுமே அவரால் உலகக் கோப்பை டி20 போட்டிக்கான அணியில் இடம் பெறமுடியும். இதற்கிடையில், ரவீந்திர ஜடேஜா விரைவில் குணமடைந்து அணிக்கு திரும்ப சென்னை அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளது.