இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவாக ஐபிஎல் தொடர் பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் நடைபெறும் இத்தொடரில், 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. அதில் ஒரு அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளங்குகிறது. இந்த அணியில் ஐசிசியின் மூன்று கோப்பைகளை வாங்கி இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த முன்னாள் கேப்டன் தோனி, தற்போது ஒரு வீரராக இறங்கி விளையாடி வருகிறார். அவரது ஆட்டத்தைப் பார்க்க ரசிகர்கள் அதிகளவில் மைதானங்களில் கூடி வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இந்த அணியில் இடம்பிடித்து விளையாடியவர், இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா. அதிரடி ஆட்டக்காரரான இவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார்.
தற்போது வர்ணனையாளராக இருக்கும் சுரேஷ் ரெய்னா மீண்டும் சிஎஸ்கே அணியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, நடப்பு (அடுத்த மாதம் தொடங்க உள்ளது) ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
எனினும், இதுகுறித்து சி.எஸ்.கே. அணி நிர்வாகம் தரப்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆனாலும் அவர் வரவேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. ஒருவேளை அவர், சென்னை அணிக்குத் திரும்பும் பட்சத்தில் ரசிகர்கள் மேலும் உற்சாகமடைவர். அவர், தோனிக்கு அடுத்து ‘சின்ன தல’ என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் ஆவார். பல போட்டிகளில் தனி ஒரு வீரராக போராடி சென்னை அணிக்கு சுரேஷ் ரெய்னா வெற்றியை தேடி தந்துள்ளார். சென்னை அணிக்காக 205 போட்டிகளில் விளையாடி 5,528 ரன்கள் குவித்துள்ளார். சென்னை அணி நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்றபோது சுரேஷ் ரெய்னா அணியில் இடம்பெற்றிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.